Saturday, January 18

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

Song: Pavadai Thavaniyil
Movie: Nichaya Thamboolam
Artist: T M Soundarajan
Music: Viswanathan & Ramamurthy
Lyrics : Kannadasan


பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணம் அதை மூடியதேனோ
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா
வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா

சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா
தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா

முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

Wednesday, November 24

மந்திர புன்னகை விமர்சனம்


நடிகர் : கரு.பழனியப்பன்

நடிகை : மீனாட்சி

இயக்குனர் :கரு.பழனியப்பன்

தினமலர் விமர்சனம்

பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் மந்திரப்புன்‌னகை. அவரே இயக்கவும் செய்திருக்கும் இப்படத்தில் தமிழ்சினிமா பேசத்தயங்குகிற விஷயங்களை உரத்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மற்ற தமிழ்படங்களில் இருந்து சற்றே மாறுதலான படம் இது என்பது ஆறுதல்.

கதைப்படி, கைநிறைய சம்பளம், குடி, நடத்தி என ஊரே வியக்கும் உல்லாச வாழ்க்கை வாழும் கட்டிடகலை நிபுணர் ஹீரோ கரு.பழனியப்பன். எந்த ஒரு விஷயத்தையும் வித்தியசாமாக அணுகும் ஹீரோ பழனியப்பனை முதல் பார்வையிலேயே பிடித்துபோகிறது நடிக‌ை மீனாட்சிக்கு! அதேமாதிரி ஆண் நண்பர்களுக்கு பீர் பாட்டிலை பல்லாலேயே திறந்து பார்ட்டி தரும் ஹீரோயின் மீனாட்சியையும் முதல் பார்வையிலேயே பிடித்து போகிறது நாயகர் கரு.பழனியப்பனுக்கு! அப்புறம், அப்புறமென்ன யதேச்சையாக இப்படி பார்த்து கொள்ளும் இவர்கள், தொழில்நிமித்தமாகவும் சந்திக்க அதனால் ஏற்படும் நட்பு காதலாகிறது. அந்த காதல் பூத்து, காய்த்து, கனியாகும் தருவாயில், கரு.பழனியப்பனுக்கு மீனாட்சி மீது சந்தேகம். அந்த சந்தேகம் வலுத்து நாயகர் நாயகியை கொலை செய்யவும் துணிகிறார். நாயகர் காதலியை கொன்றாரா? நாயகி காதலில் வென்றாரா..? என்பதை வித்யாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார்கள் மீதிக்கதையில்!

கதையி்ன் நாயகராக கரு.பழனியப்பன் சரியாகவே பொருந்துகிறார். சோடாபுட்டி கண்ணாடி, அடர்ந்ததாடி, அடிக்கடி, மது, மாது என தமிழ்சினிமா கதாநாயகர்களின் இலக்கணங்களை மாறியிருந்தாலும் தலைக்கணம் இல்லாமல் நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். இந்த டைரக்டர் கம் ஹீரோ! பேஷ், பேஷ்!

சொகுசுகார் சேல்ஸ் கேர்ளாக மீனாட்சி நடிப்பில் நன்கு தேறி இருக்கிறார். ஆனால் உடம்பை ஸ்லிம் ஆக்குகிறேன் பேர்வழி என ஏதோ இரத்த சோகை நோயாளி மாதிரி சில சீன்களில் பரிதாபமாக காட்சி அளிக்கறார் பாவம்.

ஹீரோவின் நண்பர்களாக சந்தானமும், தம்பி ராமையாவும் அடிக்கும் இரட்டை அர்த்த கூத்துகள் சிரிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. ஹீரோவின் அப்பா நகுலன் பொன்னுசாமி, விலைமாது மகேஸ்வரி, ரிஷி, ரம்யா, மனோஜ் கிருஷ்ணா, மாஸ்டர் தருண் என அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!

காண்டம்(ஆணுறை) வாங்க தயங்குவதில் தொடங்கி கள்ள தொடர்புகளால் ஏற்படும் பாதிப்புகள் வரை சகலத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன், அம்மா சென்டிமென்ட்டுகளுக்கு தரும் விளக்கம் மட்டும் சற்றே ஓவர் எனத் தோன்றுகிறது. இதுமாதிரி சில இடங்களில் இயக்குநர் அடக்கி வாசித்திருந்தால் மந்திர புன்னகையை காண தாய்குலங்களின் வரவும் இன்னும் சற்றே கூடுதலாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இயக்குநருக்கு ரொம்பதான் துணிச்சல்!

வித்யாசாகரின் இசையில் அறிவுமதி, யுகபாரதி இருவரது பாடல் வரிகளும், ராமநாத் ஷெட்டியின் ஒளிப்பதிவும், ராஜா முகமதுவின் படத்தொகுப்பும் படத்திற்கு பெரும்பலம். சந்தேகப்பேர்வழிகளும், மனநோயாளிகளும், உருவாகும் விதத்தை அலசி ஆராய்ந்துள்ள மந்திரப்புன்னகை, மந்தகாசப்புன்னகை.

Friday, November 19

மகிழ்ச்சி விமர்சனம்


நடிகர் : கவுதமன்

நடிகை : அஞ்சலி

இயக்குனர் :கவுதமன்

தினமலர் விமர்சனம்

பிரபல எழுத்தாளர் நீல பத்மநாபனின் உயிரோட்டமான கதைதான் மகிழ்ச்சி என்ற பெயரில் சினிமா ஆகியிருக்கிறது. வ.கவுதமனின் திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பில் த.மணிவண்ணனின் தயாரிப்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்கும் மகிழ்ச்சி திரைப்படம் ரசிகர்கள் மனதில் இடம் பெறும் என்று உறுதி அளிக்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு அக்கா - தம்பி இடையே நெருக்கமான பாசத்தை அழகாக சித்தரித்திருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தின் இயற்கை எழிலும், அந்த மாவட்டத்திற்கே உரிய வட்டாரத் தமிழும், படம் முழுவதும் காணப்படும் ப்ளஸ். இரணியல் என்ற சிற்றூரில் படமாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு அக்காக்கள், தங்கை, பெற்றோர், பாட்டி, மாமா என்று பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர் கதாநாயகன் வ.கவுதமன். படத்தின் இயக்குனரும் இவரே. பாத்திரத்தின் பெயர் திரவியம். எல்லோரும் அவரை திரவி என்று அழைக்கிறார்கள். அவரது முறைப்பெண் குழலி (அஞ்சலி). திரவியும், குழலியும் காதலிக்கிறார்கள். தன் அக்காவிற்கு திருமணம் ஆன பிறகே தனக்கு திருமணம் என்பதில் திரவி திடமாக இருக்கிறார். ஊரில் பெரிய பணக்காரரும், சொந்தத்தில் கடை நடத்துபவருமான செவத்த பெருமாளுக்கும் (நடிகர் சம்பத்), திரவியத்தின் அக்கா நாகம்மைக்கும் (நடிகை கார்த்திகா) திருமணம் நடக்கிறது. ஆனால் அவருக்கு திருமண வாழ்க்கை புயலாகிறது. புகுந்த வீட்டில் கணவர், மாமியார் கொடுமை காரணமாக தற்கொலைக்கு முயலுகிறார். கோபமடைந்த கணவர் நாகம்மையை பிறந்த வீட்டுக்கு நிரந்தரமாக திருப்பி அனுப்பி விடுகிறார். தீராத நாகம்மை பிரச்னைக்காக காலவரம்பின்றி காத்திருக்க முடியாது என்று கூறி குழலியின் பெற்றோர் அவரை கட்டாயப்படுத்தி வேறு இடத்தில் திருமணம் செய்து விடுகின்றனர்.

பிள்ளை பெற்றுத்தரவில்லை என்று நாகம்மையை ஒதுக்கிய தன் அத்தானுடன் (அக்காவின் கணவர்), திரவி சமரசம் செய்யும் முயற்சிகள் தோற்கின்றன. தான் பரிபுரியும் அரசாங்க பள்ளியின் தலைமை ஆசிரியர் மோசஸ் (பிரகாஷ் ராஜ்) உதவியுடன் தன் அக்காவை மெடிக்கல் செக்-அப்பிற்கு அழைத்து செல்கிறார் திரவி. அதில் நாகம்மையிடம் எந்தற குறைபாடும் இல்லை; தாயாக எல்லா தகுதியும் இருக்கிறது என தெரியவருகிறது. குழந்தை பிறக்காததற்கு அக்காவின் கணவர்தான் காரணம் என அறியும் திரவி, அவரை எதிர்த்து கேட்கிறார். தன் இயலாமையால் வெறுப்படையும் சம்பத், பழிவாங்க முடிவு செய்கிறார்.

இதற்கிடையில் திரவியின் நீண்ட நாள் நண்பரும், எதற்கும் அவருக்கு தோள்கொடுக்கும் நண்பரான குற்றாலம் (சீமான்), திரவியின் அக்காவுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகிறார். நாகம்மையின் திருமணம் நடக்கக் கூடாது என்பதற்காக சம்பத், அவரை கடத்தி காட்டுப்பகுதியில் உயிரோடு புதைக்கிறார். சரியான நேரத்தில் தகவல் தெரிந்து, அங்கு வரும் திரவி, குற்றாலம் மற்றும் மோசஸ் ஆகியோர் நாகம்மையை காப்பாற்றுகிறார்கள். நாகம்மை - குற்றாலம் திருமணம் நடக்கிறது.

வ.கவுதமன், சீமான் இருவரும் பாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கவுதமன் சண்டைக்காட்சிகளில் விஜயகாந்தை நினைவூட்டுகிறார். காதல் காட்சிகளிலும் ஓ.கே., சேலை கட்டிய எனத் தொடங்கும் பாடலுக்கு அஞ்சலி நிறைய கிளாமராக ஆடியிருக்கிறார். திரவியின் முதுகில் அஞ்சலி உப்புமூட்டை ஏறி ஓடையை கடக்கும்போதும், திரம்பி குடும்பத்தினரோடு உ‌ரிமையுடன் பழகும் காட்சிகளும் ரசிக்கக் கூடியவை. அக்காவாக வரும் கார்த்திகா, தம்பி மீது பாசத்தை ‌‌பொழிகிறார். எரியும் அடுப்பில் இருந்து தம்பிக்காக வெறும் கையால் வடையை எடுத்து விட்டு வலியால் துடிப்பதும், அக்காவின் வலி பொறுக்க முடியாமல் தம்பி துடிப்பதும் பாச வெளிப்பாடுகள். கார்த்திகாவின் தோற்றம் ஹீரோவின் அக்கா என்பதை ஒப்புக்கொள்ள நெருடலாக இருக்கிறது.

கஞ்சா கருப்பின் காமெடி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. பாட்டன் வி.எஸ்.ராகவனின் முதல் மனைவி, பாசமாக கஞ்சா கருப்பிற்கு விருந்து வைக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. தான் சாப்பிடுகிற இலையில் ஏற்கனவே மூன்று பேர் சாப்பிட்டது, அதை கழுவி, அதிலே தனக்கு விருந்து கொடுக்கிறார்கள் என்று அறிந்து கஞ்சா கருப்பு படும் அவஸ்தை செம காமெடி.

இந்த அளவுக்கு கொடுமைக்காரராக ஒருவர் இருக்க முடியுமா? என்று கேட்கும் அளவுக்கு சம்பத் நடித்திருக்கிறார். தன் தந்தையின் கெட்ட நடத்தை காரணமாக அவரை வெறுக்கும் சீமான், பின்னர் அவருக்கு வாத நோய் வரும்போது பாசத்தோடு பணிவிடை செய்யும்போதும், நண்பரின் பிரச்னையை தீர்க்க உதவும் போதும் சீமான் பண்பட்ட நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.

படத்தின் கடைசிக் காட்சியில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிறைய பரிசுகள் பெறும் பிரபாகரன் என்ற இமானார், எளிய குடும்பத்தில் பிறந்த தன்னை இந்த அளவுக்கு உயரச் செய்த தன் தாய்மாமன், தாய், தந்தையரை ‌விழா மேடைக்க அழைக்க அனுமதி கேட்கிறார். கவுதமன், சீமான், கார்த்திகா ஆகியோர் வயதானவர்களாக மேடையேறுகிறார்கள்.

ஜாதி, ஜாதி என்று எதற்கும் ஜாதியை பிரச்னை ஆக்காமல், ஜாதியை மறந்து எப்படி வாழ்வில் சாதிக்க முடியும் என்றே இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொள்‌வதுவன் நச்சென்று படம் முடிகிறது.

சீரான கதையோட்டம் கொண்ட படத்தில் கூரப்பட்டு சேலைக்காரி என்ற கடைசி கடைசி பாட்டை குத்துப்பாட்டு குரூப் நடனம் ஏன்தான் சேர்த்தார்களோ? வித்யாசாகரின் இசை, செழியனின் ஒளிப்பதிவு, சூப்பர் சுப்பராயனின் சண்டை பயிற்சி ஆகியவை படத்திற்கு மெருகு ஊட்டுகின்றன.

நகரம் விமர்சனம்


நடிகர் : சுந்தர் சி

நடிகை : அனுயா

இயக்குனர் :சுந்தர் சி

தினமலர் விமர்சனம்

நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் சுந்தர் சி., சிறிது இடைவெளிக்குப் பிறகு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, ஹீரோவாக நடித்திருகு்கும் படம் நகரம். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில், இந்தப் படத்தை தயாரித்து வழங்கியிருப்பவர் நடிகை குஷ்பு.

பெரிய தாதாவின் அடியாளாக கேட் செல்வம் என்ற பாத்திரத்தில் சுந்தர் சி படம் முழுவதும் இயல்பாக நடித்திருக்கிறார். இனி கிரிமினல் வேலைகள் வேண்டாம் என்று திருந்தி வாழ நினைக்கும் சுந்தர் சி., தனது நண்பர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரை பாண்டிக்காக (போஸ் வெங்கட்), மீண்டும் சில ஆபத்தான வேலைகளை ‌எதிர்பாராமல் செய்ய வேண்டி வருகிறது. அவை அவரது வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்கும் என்பதை அப்போது உணரவில்லை. சண்டைக் காட்சிகளில் சுந்தர் சி., தூள் கிளப்புகிறார். சினிமாவில் குரூப் டான்ஸரான பாரதியை (நடிகை அனுயா) காதலிக்கிறார். அவரை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யும்போது மற்றுமொரு தடங்கள் ஏற்படுகிறது.

விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, படம் முழுவதும் கொஞ்சமும் தொய்வில்லாமல் பல எதிர்பாராத திருப்பங்களுடன் படத்தை உருவாக்கியிருக்கும் சுந்தரை பாராட்ட வேண்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரை பாண்டியாக போஸ் வெங்கட் படம் முழுவதும் வருகிறார். தன் சொந்த லாபத்திற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதுடன், சுந்தர் சியை பல பிரச்னைகளில் சிக்க வைக்கிறார். உயர் அதிகாரிகளிடம் அகப்பட்டு கொள்ளக் கூடாது என்பதற்காக மிகவும் சாமர்த்தியமாக, ஓட்டலில் குளோஸ் சர்க்யூட் டி.வி.,யில் தான் படமாக்கப்பட்டதை அழித்து விடுகிறார். ஆனால் ஓட்டலில் நடக்கும் திருமண படப்பிடிப்பில் அவர்கள் இடம்பெறுவது அவரை காட்டிக் கொடுக்கிறது.

கடைசி 15 நிமிடங்கள் க்ளைமாக்ஸ் காட்சி மிகவும் விறுவிறுப்பாக, எதிர்பாராத திருப்பங்களுடன் செல்கிறது.

படத்தின் முக்கிய சிறப்பு வடிவேலுவின் காமெடி. சுந்தர் சி.யிடம் தான் பெரிய ரவுடி என்று சொல்லிவிட்டு, அவர் பின் தொடர்ந்து வரும்போது ஜகா வாங்குவது அவருக்கே உரிய நகைச்சுவை. உங்களுக்கு நல்ல பர்ஸ்னாலிட்டி. நான் காதலிக்க முடியாமல் போன அனுயாவை நீங்கள் காதலீக்க வேண்டும் என்று கடைசி விருப்பத்தை சொல்லிவிட்டு இறந்து போகிறார் முத்துக்காளை. பொன்னம்பலம், பெசன்ட் நகர் ரவி என்று தடித்தடியாக நான்கு சகோதரர்கள் முத்துக்காளைக்கு. அவர்கள் பயமுறுத்தலால் அனுயாவை காதலிக்க வடிவேலு செய்யும் முயற்சிகள் படு ரகளை. குழாயடியில் ஒரு சிறுவன் வடிவேலுவின் வேஷ்டியை உருவி விட, இரு குடங்களை வைத்துக் கொண்டு சமாளிப்பது, அவரது உதவியாளர்கள் ஆர்வக் கேளாறால் போஸ்டர் அடித்து பப்ளிசிட்டி பண்ணி, போலீசில் வடிவேலு அகப்பட்டுக் கொள்வது ‌போன்ற காட்சிகளின் மூலம் தனது படங்களில் காமெடி ட்ராக் ரொம்ப ஸ்ட்ராங் என்பதை சுந்தர் சி மீண்டும் நிரூபித்துள்ளார். இனி காமெடி சேனல்களுக்கு நல்ல தீனி.

இன்னும் எத்தனை காலம்தான் வில்லனோ, வில்லனின் ஆட்களோ, டாக்டர் உடையில், ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து கொலை செய்துவிட்டு தப்பி விடுவார்களோ?!

என் பேரு கிருஷ்ணவேணி பாடலுக்கு கவர்ச்சி ஆடும் மரியம் ஜக்காரியா, இனி பல படங்களில் ஒரு ரவுண்டு வருவார். இந்தப் பாட்டு மற்றும் குத்துது, புடிச்சா பாடல்கள் ஹிட் ஆகலாம். இசை தமன். இந்தப் படத்தின் விறுவிறுப்பிற்கு உதவும் வசனம் எழுதிய செந்தில்குமார் மற்றும் ஒளிப்பதிவு இயக்குனர் செல்லத்துரை இருவரையும் பாராட்டலாம்.

குணசித்த‌ிர நடிகரான ஜி.ஸ்ரீனிவாசனை முதல் முறையாக கஞ்சா, போதைப்பொருள் விற்கும் தாதாவாக நடிக்க வைத்திருக்கிறார். சொன்னபடி தனக்கு கடத்தப்பட்ட கஞ்சா வந்து சேரவில்லை என்பதற்காக சாப்பாட்டு மேஜையில் ஏதோ உணவு பதார்த்தத்தை நகத்துவது போல துப்பாக்கியை நகர்த்தி கஸ்டம்ஸ் அதிகாரியை தற்கொலை செய்ய செய்து கொள்ளச் சொல்வது புதுமையான கொடுமை.

தன் தாய்க்கு உடல் நலம் சரியாக இல்லை என்பதால் தன்னையே நிரந்தரமாக கேட்கும் அண்ணாச்சியின் மிரட்டலுக்கு பொங்கி எழும்போதும், பின்னர் யதார்த்த நிலை உணர்ந்து அவருக்கு சம்மதிக்கும்போதும் அனுயாவின் நடிப்பை பாராட்டலாம். கடைசி தருணத்தில் சுந்தர் சி, வடிவேலு உதவியுடன் அவரை காப்பாற்றுவதும் நல்ல உத்தி.

ஹீரோவின் மற்றொரு நண்பராக வரும் தாமு (நடிகர் ஜார்ஜ்) கதையில் முக்கிய திருப்பம் ஏற்படுத்துகிறார். முன்னாள் நடிகை ஷீலாவின் மகன் இவர். படத்தின் இறுதி காட்சியில் சுந்தர்.சி., தாக்கப்படுவதை படத்தில் ஆரம்பத்திலேயே காட்டியிருப்பதும் வித்தியாசமான பாணி.

Tuesday, November 16

துரோகி விமர்சனம்


தினமலர் விமர்சனம்

நடிகர் : ஸ்ரீகாந்த், விஷ்ணு

நடிகை : பூனம் பஜ்வா, பூர்ணா

இயக்குனர் :சுதா கே.பிரசாத்


நட்பும் துரோகமும் கலந்து கட்டிய முழு நீள ஆக்ஷன் சப்‌ஜெக்ட்தான் துரோகி.

விஷ்ணுவும், ஸ்ரீகாந்தும் பள்ளிப்பருவ நண்பர்கள். ‌பொதுப்பிரச்னையில் தலையிடும் தங்களது பூஜா டீச்சரை வகுப்பறையிலேயே தீர்த்து ‌கட்டும் தாதாவை சின்ன வயசு ஸ்ரீ, ஸ்கெட் போட்டுக் கொடுக்க, சின்ன வயசு விஷ்ணு தீர்த்துக் கட்டுகிறார். இதை மோப்பம் பிடிக்கும் போலீஸ் சிறுவர்களை அழைத்து போய் விசாரிக்க... போலீசின் அடிக்கு பயந்து விஷ்ணுவை காட்டிக் கொடுக்கிறார் ஸ்ரீகாந்த். அப்புறம்... அப்புறமென்ன? அங்கு ஆரம்பிக்கும் அவர்களது ஈகோ மோதல் இருபெரும் தாதாக்களாக வளர்ந்த பின்பும் (அதிலும் ஒருவர் போலீஸ் தாதா) தொடர்கிறது. இறுதியில் நட்பு ‌தோற்றதா? து‌ரோகம் வென்றதா? என்பதை சொல்கிறது க்ளைமாக்ஸ் உள்ளிட்ட மீதிக்கதை!

ரவுடியிஸம் நிரம்பிய வடசென்னை‌வாசிகளான சிறுவனர்கள் கொலை செய்வதைக்கூட ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் பேச்சும், நடவடிக்கைகளும் ஏதோ சொல்லிக் கொடுத்து செய்வது மாதிரியே இருப்பது போர். பசங்க பட பாதிப்பில் இப்போது வரும் படங்களில் எல்லாம் சிறுவர்கள் எபிசோட் ஜாஸ்தியாக இருப்பது தியேட்டருக்கு வரும் இளசுகளுக்கும், பெரிசுகளுக்கும் எந்தளவிற்கு பிடிக்கும் என்பது இப்படத்தின் பெண் இயக்குனர் சுதா.கே.பிரசாத் உள்ளிட்ட இயக்குனர்களுக்கே வெளிச்சம்.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் சதா சர்வநேரமும் முகம் நிறை கடுப்புடன் திரியும் வட‌சென்னை வாலிபராக வினு்ணு நச்சென்று நடித்திருக்கிறார் என்றால், ஸ்ரீகாந்த் தாதா தியாகராஜனின் வளர்ப்பு பிள்ளையாக அவரது சொந்த மகனையே கொன்றுவிட்டு, அதை அவரிடமே சொல்லும் தைரியசாலியாக டாலடித்து டச் செய்கிறார்.

ஆக்ஷன் பட்தில் கதாநாயகிகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்குமோ அதுதான் இந்த படத்தில் நாயகிகளாக நடித்திருக்கும் பூஜம் பஜ்வா, பூர்ணா இருவருக்குமே. ஆனாலும் அதிலும் கொஞ்சம் ஜாஸ்தி முக்கியத்துவம் பூனம் பஜ்வாவிற்கு தரப்பட்டிருக்கிறது. அம்மா - பொண்ணு என டபுள் ஆக்டிங்கில் வருவதாலோ என்னவோ பூனம், பூர்ணாவைக் காட்டிலும் மனதில் நிற்கிறார். இவர்கள் இருவரைக் காட்டிலும் கெஸ்ட் ‌கேரக்டரில் வரும் பூஜாவும் அவர் கொலையுண்ட விதமும் படம் முடிந்து நீண்ட நேரமாகியும் மனதை விட்டு அகல மறுக்கிறது.

தாதா நாராயணாவாக மம்பட்டியான் தியாகராஜன், வளர்ப்பு மகன் ஸ்ரீ வினுயத்திலும் வில்லனாக நடந்து கொள்வது எதிர்பார்த்ததுதான் என்றாலும், நீண்ட நாட்களுக்குப் பின் எதிர்பார்க்காத நடிப்பை தந்திருக்கிறார். தென்னவன், எஸ்.பி.பி. சரண், ஜெயாராவ், எஸ்.என்.லட்சுமி, மீரா கிருஷ்ணன், மாஸ்டர் கிஷோர், மாஸ்டர் வஸந்த் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.

செல்வகணேஷின் இசையில் சம சம யம யம... எனத்தொடங்கி தொடரும் குத்துப்பாடல் ஒன்று ‌போதும்! செல்வகணேஷின் இசை, அல்போன்ஸ் ராயின் ஒளிப்பதிவு ஆகியவற்றின் உதவியுடன் பெண் இயக்குனர்கள் மென்மையான கதைகளையே இயக்குவார்கள் எனும் லாஜிக்கை உடைத்திருக்கும் பெண் இயக்குனர் சுதா கே.பிரசாத், ஆண் இயக்குனர்களையே மிஞ்சும் விதமாக படத்திலும், கதையிலும் எக்கச்சக்க லாஜிக் மீறல்களையும் செய்திருப்பதுதான் கொடுமை.

துரோகி : ரசிகர்களுக்கு நம்பிக்கைத் துரோகி ஆகாதது ஆறுதல்!

பாஸ் (எ) பாஸ்கரன் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

நடிகர் : ஆர்யா

நடிகை : நயன்தாரா

இயக்குனர் :ராஜேஷ்

பலமுறை ‌பரீட்சை எழுதியும் டிகிரி பாஸ் பண்ண முடியாத ஹீரோ டூடோரியல் காலேஜ் அதிபர் ஆகி தான் விரும்பியவரை கரம் பிடிப்பதுதான் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் மொத்த கதையும். இதை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடி‌யுமோ... அத்தனை அசத்தலாக சொல்லி காமெடியாகவும் கலக்கியிருக்கிறார்கள். சபாஷ்.

கதைப்படி, எந்த வேலையும் இல்லாமல் எந்நேரமும் பிஸியாக இருக்கும் ஆர்யா, ஆண்டாண்டு காலமாக தான் வைத்திருக்கும் அரியர்ஸ் பேப்பர்களை முடிக்க உடம்பு முழுக்க பிட்டுகளுடன் காலேஜூக்கு தேர்வு எழுதப் போகிறார். பஸ்ஸிலேயே இவர் பிட்ஸை பார்த்துவிடும் ட்ரைனிங் லக்சரர் நயன்தாராதான், இவரது தேர்வு எழுதும் அறைக்கு பொறுப்பாளர். விடுவாரா அம்மணி? அத்தனை பிட்களையும் பிடுங்கிக் கொண்டு ஆர்யா அடுத்த ஆண்டும் பெயிலாக காரணமாகிறார். இந்நிலையில் யதேச்சையாக ஆர்யாவின் அண்ணனிற்கும், நயன்தாராவின் அக்காவிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, கல்யாணமும் நடக்கிறது. அதுமுதல் நயன்தாரா மீது காதல் கொள்ளும் வெட்டி ஆபீஸர் ஆர்யாவின் காதல் அங்கீகரிக்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதை சிரிக்கவும், சிந்திக்கவும் சொல்லியிருக்கிறார்கள்.

வேலைவெட்டி இல்லாமல் ஊதாரித்தனமாக சலூனில் சிப்பும் கையுமாக திரியும் இளைஞர்களை அழகாக தன் பாஸ் என்கிற பாஸ்கரன் பாத்திரத்தின்மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆர்யா. அவருக்கு நயன் மீது காதலும், பொறுப்பும் வந்ததும் வித்தியாசமாக வெற்றி பெற முயலுவதும் இயல்பு. சென்னை வாழ் ஆர்யாவை கும்பகோணத்து குமரனாக ஏற்றுக் கொள்வதிலும், பார்ப்பதிலும் சற்றே தயக்கம் இருந்தாலும் போகப் போக சரியாகி விடுகிறது. கொடுத்த கடனை திருப்பி வாங்க அவன் நடையா நடப்பான் என தெனாவட்டாக பேசும் ஆர்யாவாகட்டும், உடம்பு முழுக்க பிட்டுடன் பரீட்சை எழுத போவதிலாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ஆர்யா, பாஸ்கரன் பாத்திரமாகவே பொருந்தி இருக்கிறார்.

இன்னொரு ஹீரோ என சொல்லும் அளவிற்கு காமெடி சந்தானமும் ஒரே ஒரு நண்பனை வைத்துக் கொண்டு படாத பாடுபடுவது செம காமெடி!

நயன்தாராவின் இயல்பான நடிப்பும், காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படும் பாடும் செம டாப் டக்கர். ஆனால் உடம்பைதான் எடை குறைக்கிறேன் பேர்வழி எனஎலும்பும் தோலுமாக ஆக்கி வைத்துக் கொண்டு நம் கண்களில் குளிர்ச்சிக்கு பதில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார். ஆர்யாவின் அண்ணன் கால்நடை மருத்துவராக, கல்யாணம் பற்றி பேசினா‌லே கடுப்பாகும் கேரக்டரில் வரும் சுப்பு பஞ்சுவும், அவரது ஜோடி விஜயலட்சுமியும் கூட சூப்பர் பர்பார்மன்ஸ்.

யுவனின் இதமான இசை ஷக்தி சரவணனின் இனிமையான ஒளிப்பதிவு இவற்றின் உதவியுடன் காதலையும், காமெடியையும் கலந்து காக்டெயில் பார்ட்டி கொடுத்து கலக்கியிருக்கிறார் எம்.எஸ்.எஸ். இயக்குனர் ராஜேஷ் எம்.

பாஸ் (எ) பாஸ்கரன் - பர்ஸ்ட் கிளாஸ்.

---------------------------
குமுதம் விமர்சனம்

இப்படி ஒரு ஜாலியான காதல் படத்தைப் பார்த்து எத்தனை நாளாயிற்று?

கதை என்று பார்த்தால் எஸ்.எம்.எஸ்.(!)ஸில் அனுப்பிவிடலாம். படிப்பு ஏறாமல் தண்டமாய் சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்யா, படித்த நல்ல வேலையில் இருக்கும் தன் அண்ணியின் தங்கை நயன்தாராவை ரூட் விடுவதுதான் படம். கடைசியில் ஒரு டுடோரியல் ஆரம்பித்து மாணவர்களை ""பாஸ் செய்ய வைக்கிறார் பாஸ்கரன்!

அடுத்து என்ன நடக்கும் ? என்று நாம் யூகித்தபடியே காட்சிகளை நகர்த்தினாலும் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல், திடீர் திருப்பங்கள் எல்லாம் நிகழாமல், ஒரு வினாடி கூட போரடிக்காமல், கலகலப்பாகக் கொண்டு சென்றிருப்பது இயக்குனர் ராஜேஷின் சாமர்த்தியம்.

நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார் ஆர்யா. அந்த ஆறடி உயரமும், அப்பாவியாய் நயனைச் சுற்றிச்சுற்றி வருவதும், நயன்தாரா லெக்சரர் என்று தெரியாமல், அவரிடமேதான் ஜட்டியில் பிட் வைத்திருக்கும் ரகசியத்தைச் சொல்வதும் என்று கல(கல)க்கியிருக்கிறார்.

நயன்தாராவிடம், ஆர்யா வழியும்போதெல்லாம் ஒன்றும் தெரியாததுபோல் பாடன் (Pardon) என்று நயன் சொல்ல, அதன் அர்த்தம் புரியாமல், நண்பன் ஏற்றவிட்டதால், ""பாடேன் என்றுதான் சொல்கிறார் என்று நினைத்து நயன்தாரா முன்னால் பாடுவது செமை கலாட்டா.

நயன்தாராவுக்குப் பழைய அழகு திரும்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் சதை போடுங்கள் அம்மணி. ஆர்யா தன்னை காதலிப்பது தெரிந்தும் அவர் சிரித்துக் கொண்டேப் போவதை பலமுறை காட்டியிருக்க வேண்டாம்.

படத்தின் மிகப்பெரிய பலம் சந்தானத்தின் டைமிங் காமெடி. அதுவும் ""தல,தளபதி என்று (அஜித்,விஜய் ரசிகர்களைக் கவர இப்படி ஒரு ஐடியா !) சலூன் வைத்துக்கொண்டு, "டபிள் மீனிங் டயலாக்கெல்லாம் இல்லாமல் பட்டையைக் கிளப்புகிறார் சந்தானம். பாங்க் மானேஜர் பந்தா காட்ட ""என்னய்யா ரூம்ல ஒரு வீலிங் சேரை வச்சுகிட்டு பந்தா காட்டறியே, என் சலூன்ல நாலு லீவிங் சேர் இருக்குய்யா என்று சொல்லும்போது தியேட்டரே குலுங்குகிறது. ""நண்பன்டே என்று ரஜினீ ஸ்டைல் பண்ணுவதும் ஹாஹா.
ஒரே பாட்டில் பணக்காரனாகும் சினிமாக்களை கிண்டல் அடிப்பதும், பொருத்தமான காட்சிகளில் பழைய பாடல் வரிகளை ஓடவிடுவதும் செமை பொருத்தம்.

டுட்டோரியலில் தூங்கிக் கொண்டும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டும் இருந்து முக்கியத் திருப்பத்துக்குக் காரணமாக இருக்கும் குண்டுப்பையன் அஸ்வின்ராஜா பலே.
யுவன் ஷங்கர் ராஜாவுக்குச் சிறகு முளைத்திருக்கிறது. எல்லாப் பாடல்களுமே இதம்!

ஆர்யாவின் அண்ணனாக வரும் சுப்புவின் அந்த வெட்கம் கலந்த வழிசல் யதார்த்தம்.

திடீரென ஜீவா ஒரு காட்சியில் தோன்றுவதும், அவரை செல்போனில் டைரக்டர் கலாய்ப்பதும் வேடிக்கை. படத்தில் ஒன்றுமே இல்லை. ஆனால் எல்லாமே இருக்கிறது, லாஜிக் இல்லை. மேஜிக் இருக்கிறது.

குமுதம் ரேட்டிங் : நன்று

Monday, November 15

எந்திரன் விமர்சனம்


தினகரன் விமர்சனம்

படத்தின் பிரமாண்டத்தை எடுத்துக்காட்ட, ‘ஹாலிவுட் படங்களைப்போல...’ என்று பேச்சுக்கு இதுவரை சொல்லிக்கொண்டிருந்த இந்திய சினிமாவில், முதல்முறையாக ஹாலிவுட் தரத்துடன் ‘எந்திரனை’ தயாரித்திருக்கிறது சன் பிக்சர்ஸ்.ரஜினியின் வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டு அமைந்த இந்தப்படத்தின் கதையே அலாதியானது. ரோபோடிக் விஞ்ஞானியான ரஜினி, பத்து வருடங்கள் அயராது உழைத்து, மனிதனைப் போலவே செயலாற்றக்கூடிய ‘ஆன்ட்ரோ ஹியூமனாய்ட் ரோபோ’ ஒன்றை உருவாக்கி, அதற்கு ‘சிட்டி’ என்று பெயரிடுகிறார். அதை ராணுவத்துக்கு அர்ப்பணிப்பது அவரது திட்டம். ஆனால், அதற்கான ‘ஆர் அன்ட் டி’ ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் வருகிறது. அதற்காக ரஜினி அந்த ரோபோவுக்கு மனித உணர்வுகளை ஊட்ட, அங்கே முளைக்கிறது பிரச்னை. ஒருபக்கம் ரஜினியின் கண்டுபிடிப்பைத் தவறான செயல்களுக்கு பயன்படுத்த நினைக்கும் மூத்த விஞ்ஞானி டேனி டென்சோங்பாவின் எதிர் நடவடிக்கைகளையும், இன்னொரு பக்கம் மனித உணர்வு ஊட்டப்பட்ட சிட்டியால் வரும் நேரடிப் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது ரஜினிக்கு. இதன் முடிவு என்ன என்பதை சுவாரஸ்யமான கனவுப்பயணமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

குடும்பம், காதலை இரண்டாம் பட்சமாக வைத்து கண்டுபிடிப்பையே உயிர் மூச்சாக நினைக்கும் விஞ்ஞானி வசீகரனாகவும், அவரது கண்டுபிடிப்பால் உருவான ரோபோ ‘சிட்டி’யாகவும், டேனியின் சதிவலையால் அழிவு சக்தியூட்டப்பட்ட வில்லன் ரோபோவாகவும் ரஜினியே மூன்றுமுகம் காட்டியிருப்பது ரசிகர்களுக்கான ஸ்பெஷல் விருந்து. மூன்றிலும் மாறுபட்ட நடிப்பில் வித்தியாசம் காட்டி, தான் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, மிகச்சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்திருக்கிறார் ரஜினி.காதல் பாடலில் கூட நியூட்ரான், எலக்ட்ரானைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானி ரஜினி, வழக்கமான தன் ஸ்டைல்களிருந்து வேறுபட்டு எதிரியைக் கண்ணில் மண்ணைத்தூவி விட்டுத் தப்பிக்கும் அளவில், அழகாக அடக்கிவாசிக்க, ‘சிட்டி’யாக வரும் ‘எந்திரன்’ ரஜினி, கை, கால்கள் உதட்டசைவு மட்டுமே காட்டி எந்திரமாகவே ‘அன்டர்பிளே’ செய்தாலும் காட்சிக்குக் காட்சி ஆட்சி செய்கிறார்.‘டி.வியை போடு’ என்றால் டி.வியை போட்டு உடைப்பது, டிராபிக் கான்ஸ்டபிள், ‘கொஞ்சம் வெட்டு’ என்றால் கையை வெட்டுவது, சலூன் கடையில் டெலிபோன் டைரக்டரி உள்ளிட்ட புத்தகங்களை பார்வையிலேயே ஸ்கேன் செய்துவிட்டு, போன் நம்பர்களை கடகடவென ஒப்புவிப்பது என்று செம ஜாலி ரூட் போடுகிறார் ‘சிட்டி’ ரஜினி. ஐஸ்வர்யா ராயின் ஹாஸ்டலுக்கு சென்று தன்னை மனிதன் என்று நினைப்பவர்களிடம் தலையை கழற்றி காண்பித்து, ரோபோ என்று சொல்வதும், ஐஸ்வர்யாராயின் அறையை ஒழுங்குபடுத்தி அவருக்கு ருசியாக சமைத்துக் கொடுப்பதும், தேவதர்ஷினியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரும் பெண்களுக்கு மருதாணி போடுவதுமாக பெண்கள் ஏரியாவிலும் புகுந்து விளையாடுகிறார் சிட்டி.
இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் மூன்றாவது அவதாரமான வில்லன் ரோபோ ரஜினி. ‘16 வயதினிலே’ பரட்டையிலிருந்து, ‘சந்திரமுகி’ வேட்டையன் வரை அத்தனை வில்லன்களையும் கலந்து செய்த கலவையாக மாறி கலகம் செய்கிறார். அவரது தோற்றமே மிரட்டுகிறது. தன்னை அழிக்க தன் உருவத்திலேயே வந்திருக்கும் விஞ்ஞானி ரஜினியை, ‘யாரந்த கருப்பு ஆடு?’ என்று வெறியோடு தேடும்போதும், சந்தேகப்படும் ரோபோக்களை வெட்டி வீழ்த்தும்போதும் அடிவயிற்றை கலக்க வைக்கிறார்.

கடைசியில் விஞ்ஞானி ரஜினியை கண்டுபிடித்ததும், ‘ம்ம்மே...’ என்று ஆடுபோலவே கத்திக் கொண்டு அவரை நெருங்குவதும், துப்பாக்கி விரல்களை வாயில் நுழைப்பதும் வில்லத்தனத்தின் உச்சம்.
ஐஸ்வர்யாவின் தலையில் பல வருடங்களுக்கு முன் சூட்டப்பட்ட உலக அழகி கிரீடத்தை ரசிகர்கள் ஏன் இன்னும் இறக்காமல் இருக்கிறார்கள் என்பதற்கான பதில், ‘எந்திரனி’ல் இருக்கிறது. ‘கிளிமஞ்சாரோ...’ பாடலின் ‘ஹஹக் ஹஹா...’ என்ற ஹம்மிங்கிற்கு இடுப்பை வளைத்து ஆடுவதில் தொடங்கி, ‘அரிமா... அரிமா’ என்ற ரோபா பாடல் வரைக்கும் அவர் போடும் கிறங்கடிக்கிற அந்த ஆட்டம் இன்னும் பல வருடத்துக்கு அந்த கிரீடத்தை இறங்காமல் பார்த்துக் கொள்ளும். விஞ்ஞானி ரஜினி ஆராய்ச்சியே கதியென்று கிடக்க, வெறுத்துப்போய் அவர் கொடுத்த காதல் பரிசுகளை திருப்பிக் கொடுத்து காதல் ரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்கும் அப்பாவித்தனத்திலிருந்து, ‘நீ வெறும் மிஷின். நீயும் நானும் காதலிக்கிறது நடக்காத காரியம்‘ என்று ரோபோ ரஜினிக்கு தன்னை புரிய வைப்பது வரையிலான நடிப்பில் இருப்பது உயிர்ப்பு.விஞ்ஞானி ரஜினியின் உதவியாளர்களாக வரும் கருணாசும், சந்தானமும் காமெடி கிரவுண்டில் நின்று விளையாடுகிறார்கள். மனசுக்குள் வன்மத்தையும், உதட்டில் சிரிப்பையும் வைத்துக் கொண்டு வில்லத்தனத்தை ஸ்லோ பாய்சனாக பாய்ச்சும் டேனி டென்சோங்பா பயங்கரம் காட்டுகிறார். தன் இயலாமையை தான் உருவாக்கும் ரோபோவிடம் காட்டும்போதும், ரோபோவாலேயே பரலோகம் போகும்போதும் நடிப்பில் கவர்கிறார் டேனி.
இயந்திர மனிதனுக்கும், அதை உருவாக்கும் விஞ்ஞானிக்குமான கதை என்றபோதும் அதற்குள்ளும் மெல்லிய காதலைச் சொல்வதும் அந்த காதல்தான் மொத்த பிரச்னைக்கும் காரணம் என்பதை பதிய வைப்பதிலும் தன் உயரத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறார் ஷங்கர்.

வெறும் மெஷினாய் இருக்கும்போது, கொடுக்கும் முத்தத்தை, ‘ஏன் கன்னத்தை எச்சில் பண்ற?’ என்று கேட்கும் ‘சிட்டி’ ரஜினி, தனக்கு உணர்ச்சி வந்ததும் இன்னொரு முத்தம் கேட்டு ஐஸ்வர்யா தங்கியிருக்கும் இடத்துக்கே போவதும், அவரை கடித்த ரங்குஸ்கி கொசுவை கொண்டு வருவதும் கலகல ஏரியா.தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் ரோபோ ரஜினி, அந்த விபத்தில் நிர்வாணமாக மாட்டிக் கொள்ளும் பெண்ணை அப்படியே தூக்கி வருவதும், அந்த அவமானம் தாங்காமல் அந்த பெண் தற்கொலை செய்து கொள்வதும், அதுவே ரோபோவை விஞ்ஞானிகள் நிராகரிப்பதற்கு காரணமாக அமைவதும் திரைக்கதையின் அற்புதமான பகுதி. அதே ரோபோ, மனித உணர்வுகளைப் பெற்றதும், சிக்கலான பிரசவத்தை பாரம்பரிய வைத்திய முறைப்படி செய்து நவீனத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பாலம் அமைத்திருப்பதும் அக்மார்க் ஷங்கர் முத்திரை. நுட்பமான சயின்ஸ் ஃபிக்ஷன் கதையைப் பாமரர்களும் குடும்பத்துடன் புரிந்து ரசிக்கும் அளவில் எளிமைப்படுத்தித் தந்திருப்பதில் அவரது பணி மகத்தானது.படத்தின் இரண்டாம் பகுதியில், பல ஆச்சர்யங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ரஜினியை போன்ற தோற்றம் கொண்ட நூறு ரோபோக்கள் கையில் எந்திர துப்பாக்கியுடன் அலைவதும், அவர்களே, பிரமீடாகவும், நெளியும் பாம்பாகவும், வானம் வரை போய் ஹெலிகாப்டரை துவம்சம் செய்வதும், மெகா மனிதன் சென்னை சாலையில் நடந்து வரும் அந்த பிரமாண்டமும் டெக்னிக்கல் உச்சம்.
கற்பனைக்கெட்டாத வண்ணமிகு லொகேஷன்களில் மட்டுமல்லாது,

உலோகமயமான செட்டுகளிலும் ஒளியைக் கட்டுக்குள் கொண்டுவந்து கண்ணைக்கவரும் வண்ணங்களாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலுவின் பங்களிப்பு அற்புதம். அவருடன் இணைந்து கலக்கியிருக்கும் எடிட்டர் ஆன்டனியின் பணி பாராட்டத்தக்கது. ‘ஜெனரேஷன் நெக்ஸ்ட்’ இசையைப் பாடல்களில் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் அமைத்து மிரள வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானும், தியேட்டர் இருக்கைகள் குலுங்கும் வித்தியாசமான ஒலியமைத்திருக்கும் ரசூல் பூக்குட்டியும் அடுத்த ஆஸ்கருக்குக் குறிவைக்கிறார்கள். ஹாலிவுட் படங்களையொத்த செட்டுகளை அமைத்து வாய்பிளக்க வைத்திருக்கும் சாபுசிரில், இதில் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்தப் படம் அவர்களின் வாழ்நாள் சாதனை படமாக இருக்கும். ரசிகர்களுக்கு இதுவரை கிடைத்திராத, இனி கிடைப்பதற்கு அரிதான விருந்தாக அமைந்திருக்கிறது ‘எந்திரன்’. எந்திரனை தூக்கி வைத்து கொண்டாடியதன் மூலம், தமிழ் சினிமாவின் உயரத்தையும், தங்கள் ரசனையின் தரத்தையும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் ரசிகர்கள்

-நன்றி தினகரன்