Showing posts with label Review. Show all posts
Showing posts with label Review. Show all posts

Saturday, November 7

உன்­னைப்­போல் ­ஒ­ரு­வன் விமர்சனம்


தினமலர் விமர்சனம்


உலக நாடுகளையும், அதன் சட்ட திட்டங்களையும் தப்பிதப் படுத்திக் கொண்டு தீவிரவாதம் எனும் பெயரில் அப்பாவிகளை கொன்று குவிக்கும் தீவிரவாத குழுக்களுக்கு தன் பாணியில் (இந்தியில் எ வெட்னஸ்டே எனும் பெயரில் வெளிவந்த வெற்றிப்பட தழுவல்தான் இந்த படம் என்றாலும்..) தனி தொனியில் உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் செவிட்டில் அறைந்திருக்கிறார் கமல்!

நகரின் உயரமான கட்டிடத்தின் உச்சியில், அதுவும் முழுதாக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சியில்... சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி தன்னை கண்டுபிடித்து விடாதபடிக்கு போலீஸ் கமிஷனருக்கு போன் போடுகிறார் கமல். வெவ்வேறு குண்டு வைத்து பலரது உயிரை பறித்து சிறையில் இருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இன்று மாலை ஐந்தாறு இடங்களில் சிட்டி முழுதும் தான் வைத்துள்ள சக்தி வாய்ந்த பாம் வெடிக்கும். சாம்பிளுக்கு தற்போது சென்னை அண்ணா சாலை போலீஸ் ஸ்டேஷனில் தான் வைத்துள்ள ‌வெடிகுண்டு இன்னும் அரை மணி நேரத்தில் வெடிக்கும். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்... என போனை கட் செய்கிறார். அப்புறம்...? அப்புறமென்ன...? அடுத்தடுத்து வரும் கமலின் அனாமத்து கால்களை ஒருபக்கம் ட்ரேஸ் செய்யும் முயற்சியில் இறங்கும் மாநகர காவல், மற்றொரு பக்கம் அவரது கட்டளைக்கு கீழ்ப்படியவும் செய்கிறது. முதல்வர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்களின் உத்தரவுபடி போலீஸ் கமிஷனர் மோகன்லால் தனது இளம் போலீஸ் டீமின் உதவியுடன் நேரடியாக களத்தில் இறங்கி பரபரப்பை கூட்டுகிறார். கதாநாயகர் கமல் தீவிரவாதியா? முள்ளை முள்ளால் எடுக்க நினைக்கும் பொதுஜனவாதியா? என்பதற்கு விடை சொல்கிறது மீதிக் கதை!

கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் குடும்பஸ்தர் கமல், தனது புத்திசாலித்தனத்தால் ஒட்டு மொத்த போலீசையும் திணறடித்து, காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு ஏற்படுத்துகிறார். உட்கார்ந்த இடத்திலேயே போரடிக்காமல் இப்படி விறுவிறுப்பை ஏற்படுத்த கமலால் மட்டுமே முடியும். பேஷ்!

கமலை விட நடிக்கவும், டயலாக் பேசவும் நிறைய வாய்ப்பு போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு...! லால் மட்டு சளைத்தவரா என்ன? அவரும் அவர் பங்‌கை அசத்தலாக செய்திருப்பதோடு அத்தனை பரபரப்பிலும் டயலாக்கில் சின்ன சின்ன காமெடிகளை செய்து கலக்கியிருக்கிறார்.

தலைமை செயலாளர் லட்சுமி, இசட் பிரிவு பாதுகாப்பு கேட்கும் முன்னணி நடிகர் ஸ்ரீமன், மனைவிடம் மண்டை உடைபட்டு ஸ்டேஷன் வரும் எம்.எஸ்.பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி, துடிப்பான இளம் போலீஸ் அதிகாரிகளாக பிரேம்குமார், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டவர்களின் மிடுக்கு போன்றே... தொலைபேசியிலேயே கட்டளை பிறப்பிக்கும் முதல்வரின் குரலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல...!

ஒவ்வொரு பிரேமிலும் ஸ்ருதிஹாசனின் இசை, அவரை கமலின் வாரிசு என்பதை மெய்ப்பிக்க தவறவில்லை. படத்திற்கு பக்கபலமாக அமைந்து மிரட்டலாக இருக்கிறது இசை! தீவிரவாதிகளில் ஒருவனை இந்துவாகவும், போலீஸில் ஒருவரை இஸ்லாமியராகவும் காட்டி எந்த வம்பு, தும்பிலும் சிக்காமல் படம் எடுத்திருக்கும் இயக்குனர் சக்ரி டோலேட்டியின் இயக்கத்தில் வேகமும், விவேகமும் கலந்து கட்டி கலக்கியிருக்கிறது. சில காட்சிகளில் பயத்தில் நம் வயிறும், க்ளைமாக்ஸில் கண்களும் சேர்ந்து கலங்குவது இப்படத்தின் பெரும் பலம்!

கமலின் துணிச்சலான உன்னைப்போல் ஒருவன் : நம்மில் ஒருவன்! நம் 'உள்' ஒருவன்!! நாம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒருவன்!!!

-----------------



விகடன் விமர்சனம்


நகரின் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அவற்றை வெடிக்கச் செய்யாமல் இருக்க, போலீஸ் கமிஷனர் மோகன்லாலிடம் பேரம் பேசுகிறார் கமல். இந்தியாவின் முக்கியமான குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது பேரம். காவல்துறை தனது முழு பலத்தைப் பிரயோகித்தும் கமலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. டெக்னிக்கலாக அப்படியொரு தண்ணி காட்டுகிறார்! வேறு வழி இல்லாமல் நான்கு தீவிரவாதிகளையும் கமல் சொல்லும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அத்த இருபது நிமிடங்களுக்கு பளீர் சுளீர் திருப்பங்கள். ஹிந்தியில் வெளியான எ வெட்னெஸ்டே படத்தின் தமிழாக்கம். காலையில் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகள் வாடி வதங்குவதற்குள், மாநகரத்தைத் துளிகூட சலனப்படுத்தாமல் போலீஸுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாடம் எடுக்கிற ஜெட் வேகத் திரைக்கதைதான் மடத்தின் ரியல் ஹீரோ.

ஃபிரேமுக்கு, ஃபிரேம் தானே ஆக்கிரமிக்க நினைக்கிற ஹீரோக்களுக்கு மத்தியில் பிற நடிகர்களுக்கும் சமமான ஸ்கோப்... சொல்லப்போனால் தன்னைவிடக் கூதலாகவே வாய்ப்பு கொடுத்த கமலுக்கு அன்பான கைகுலுக்கல்கள்.

போலீஸ் கமிஷனராக மோகன்லால், பெர்ஃபெக்ட் ஃபிட். அசாத்தியமான சூழலில் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கண் முன் நிறுத்துகிறார். தலைமைச் செயலாளருடன் உரசிக் கொள்ளும்போதும் தனது ஜூனியர் அதிகாரிகளிடம் கனிவும் கண்டிப்புமாக வேலை வாங்கும்போதும்... வெல்டன் லால் (த.செ.வாக வரும் லட்சுமியின் க்ளோஸ் அப்களைத் தவிர்த்திருக்கலாம்)!

படம் முழுக்க ஒரே இடத்தில் இருந்தபடி ஹெட்போன் மைக்கில் பேசிக் கொள்வதுதான் கமலின் வேலை. ஆனால், அதிலும் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்களைக் காட்டி மறுபடி நிரூபிக்கிறார். சீனியருக்கு சின்சியர் ஜூனியர்களாக வரும் பரத் ரெட்டி, கணேஷ் வெங்கட்ராம் எல்லாமே கேரக்டருக்கு ஏற்ற மிடுக்கு! நியூஸ் ரிப்போர்ட்டராக வரும் அனுஜா ஐயர், மோகன்லாலிடம் கேன் ஐ ஸ்மோக் ஹியர்? எனும் இடத்தில் அட போட வைக்கிறார்.

ஒரு காமன் மேன் இத்தனை அசகாயக் காரியங்கள் மூலம் அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் எழுகிறதுதான். ஆனால், அதற்கான டெக்னிக்கல் சங்கதிகளைக் காட்டி நியாயப்படுத்தி விடுகிறார்கள். தேவை தில்லும் துணிச்சலும்தான்!

ஆனால் படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவை வேண்டி நிற்கிறபோது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? ரீமேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழில் டப்பிங் பண்ணுங்கப்பா!” என்ற கமென்ட்கள் காதில் விழுகின்றன.

கேமராமேன் மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு கிரிஸ்டல் கிளியர். அறிமுகம் என்பதாலேயே மனம் போன போக்கில் வாத்தியங்களை இசைக்கவிடாமல் கச்சிதமாக பின்னணி இசையை ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். ஹிந்தி ஒரிஜினலில் அந்தக் கதை நாயகனின் கோபத்துக்குக் காரணமான ரயில் குண்டு வெடிப்புகள், படத்தின் க்ளைமாக்ஸில் அவன் வார்த்தைகளில் வெடிப்பதற்கு வலுவான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இங்கே கமலின் கோபத்துக்குச் சொல்லப்படுவதோ, இங்குள்ள வெகுஜனத்தின் உணர்வுகளைத் துõண்டாத துõரத்து சமாசாரங்கள் பல பெஸ்ட் பேக்கரிகூட) எந்த மதத்திலிருந்து வந்தாலும் தீவிரவாதத்தைத் தண்டிப்பதில் தாமதம் கூடாது என்ற நியாயமான உண்மையைப் பளிச்சென்று கன்னத்தில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கலாம். அதையே, கன்னத்தில் தடவிச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். (நாலில் மூவர் முஸ்லிம், ஒரவர் ஹிந்து) திரைக்கதை வசனகர்த்தாவுக்கு இங்கே இருப்பது புரிகிறது. ஆனால் க்ளைமாக்ஸ் வேகத்தை அதுவும் சேர்த்தல்லவா நீர்க்கச் செய்கிறது!
இருந்தாலும் இவனைப் போல் நம்மில் எத்தனை பேர்? என்ற ஏக்கம் எழவே செய்கிறது!

விகடன் மார்க் : 42/100

-----------------------------


குமுதம் விமர்சனம்


பயங்கரவாதத்துக்கு பயங்கரவாதிகளின் மொழியிலேயே தீர்வு தேடிப் புறப்படுகிற ஒரு பொது ஜனம்தான் உன்னைப்போல் ஒருவன்.

சமூகக் கோபத்தை ஆழ்ந்த மவுனத்தில் ஒளித்து வைத்திருக்கிற தேவைப்படுகிறபோது, அதை அழுத்தமான கிண்டலாக வெளிப்படத்துகிற குடும்பஸ்தனாக கமல். முழுமை பெறாத கட்டட மாடியில் தனி ஆளாய் லேப்டாப், டெலெஸ்கோப், செல்போன்கள் சகிதம் உட்கார்ந்து கொண்டு காவல் துறையையே மிரட்டுவது திரையில் ஐம்பது வருடங்களைக் கடந்த கமலுக்குப் பொருத்தமான ஹீரோயிசம். அன்பர்களே செய்ய வேண்டிய சில இடங்களில் தீவிர இலக்கியப் பத்திரிகைகளுக்குத் தலையங்கம் எழுதுவது போல பேசவதை மட்டும் எப்போது தவிர்ப்பாரோ?

கமிஷனராக வருகிற மோகன்லால் புத்திசாலித்தனமான காட்சிகளாலும், முதிர்ச்சியான நடிப்பாலும் அழகாக கமலுக்கு ஈடுகொடுக்கிறார். தமிழக அரசியலில் அதி முக்கியமான ஒருவரின் தொனியில் ஒலிக்கிற முதல்வர் குரல், உள்துறைச் செயலாளராக மிடுக்காக வந்திருக்கும் லட்சுமியின் நாசூக்கான பல்டி ஆகியவை தேவையற்ற மெனக்கெடல்கள்.
காவல்துறையின் நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கமல் தனது மிஷனில் ஒரு தொலைக்காட்சி நிரூபரை இழுத்துப்போடுவது சைலன்ட் சாணக்கியத்தனம். லாடம் கட்டுவதற்கு பேர் போன போலீஸ் கணேஷூம், என்கவுண்டர் முடிந்தபிறகு டி.வி.,க்கு சம்பிரதாய இண்டர்வியூ தருகிற பரத் ரெட்டியும் விறுவிறுப்பு சேர்க்கிற கேரக்டர்கள். ஸ்ருதி ஹாசனின் பின்னணி இசை மிரட்டலுக்கு உதவுகிறது.

என்னதான் கமல் போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டினாலும் பாம்ப் ஸ்குவாடு குரூப்புக்கே சிகப்பு வயரை அத்துவிடுங்க, பச்சை வயரை கழற்றி விடுங்க என்று யோசனை சொல்வது டூமச். யாரோ ஒருவரிடமிருந்து வருகிற ஒற்றைத் தொலைபேசி மிரட்டலுக்கே கமிஷனர், முதல்வர் வரைக்கும் போவதையும் நம்ப முடியவில்லை. தீவிரவாதிகளைப் போட்டுத் தள்ளுவதற்கு கமல் கொடுக்கிற விளக்கத்தில் எக்கச்சக்க குழப்பம்.

வருடத்திற்கு இரு முறையாவது குண்டு வெடிப்புகளை அனுபவிக்கிற மும்பைவாசிகளின் கோபத்தை வெளிப்படுத்திய வெட்னஸ் டேயை நம்மூரில் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார் கமல். அந்தக் கோபத்தோடு முற்றிலும் வேறுபட்ட பிரச்னைகளுடன் இருக்கிற நம்மை இணைத்துக் கொள்ளாமல் வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.
உன்னைப் போல் ஒருவன் - மூளைக்காரன். ஆனால் மேதையல்ல...!

குமுதம் ரேட்டிங் : ஓ.கே.,!

------------------------------

கல்கி விமர்சனம்


* பயங்கரவாதத்துக்கு அதைக் காட்டிலும் மேலதிக பயங்கரவாதமே தீர்வு(?) என்று சொல்லும் கமலின் படம்தான் உன்னைப் போல் ஒருவன்.

* தனி ஒரு ஆள் கட்டி முடிக்கப்படாத கட்டடத்தின் மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டு போலீஸ் டிபார்ட்மென்ட்டையே ஆட்டிப் படைப்பது தமிழுக்குப் புதுசு என்றாலும் கொஞ்சம் கிக்லிபிக்லிதனமாக இருக்கிறது. எனினும், அந்த ஆள் கமல் என்பதால் அவர் கேரக்டரோடு மனம் ஒன்றிவிடுவதை மறுப்பதற்கில்லை.

* மிடுக்கான தோற்றத்தில் வெடுக்வெடுக்கெனப் பேசும் மோகன்லால், காக்கிச் சட்டையில் செம விறைப்பு எனினும் அவர் தலைமைச் செயலருக்குக் கட்டளை இடுவது போலப் பேசுவதும் அதற்கு அவர் தலையசைப்பதும் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.

* காவல் துறையின் நடவடிக்கையை உடனுக்குடன் அறிய ரிப்போர்ட்டரைக் களத்தில் இறக்கிவிட்டுக் காய் நகர்த்துவது திரைக்கதையில் கச்சிதம்.

* கணேஷ், பரத்ரெட்டி இருவரும் போலீஸ் உடையில் அநியாயத்துக்கு விறைப்பு. அப்பாஸுக்குப் பொறுப்பு.

* பாம் வைத்த கமலே, அதை எப்படிச் செயலிழக்க வைப்பது என பாம் ஸ்குவார்டுக்குப் பாடம் நடத்துவது கெக்கே மிக்கே.

* முக்கியமான ஸீனில் எல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசி கொஞ்சம் குழம்பித் தெளிய வைப்பது போலத் திணறடிப்பது கமலுக்கே உரிய கலை. இதிலும் தொடர்கிறது. உஸ் அப்பாடா!

* தீவிரவாதிகளைக் கொலை செய்வதற்காக கமல் சொல்லும் காரணங்களும் ஏற்புடையதாக இல்லை!

* மும்பை குண்டுவெடிப்புப் பிரச்னைகளோடு நம்மூர்ப் பிரச்னைகளை முடிச்சுப் போட்டு முடிந்தவரை ப்ரைன் வாஷ் பண்ணுகிறார் கமல்! ரசிகர்கள் ஜாக்கிரதை.

* தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத கதையில் நடித்த கமலுக்கு பூங்கொத்து.

ஜகன்மோகினி விமர்சனம்




தினமலர் விமர்சனம்


நமீதாவின் பிரமாண்ட கவர்ச்சியை விரும்பும் ரசிகர்களையும், மந்திர - தந்திர மாயாஜாலங்களை மலைப்புடன் பார்த்து ரசிக்கும் குழந்தைகளையும், குடும்பங்களையும் நம்பி எடுக்கப்பட்டிருக்கும் மோகினி கதையை உள்ளடக்கிய படம்தான் ஜகன்மோகினி. ஏற்‌கனவே ஜெயமாலினி நடிப்பில்வந்த படம், வந்த கதை, அதே தலைப்பு... என்றாலும் நவீன கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உத்திகளை பயன்படுத்தி படம் பார்ப்பவர்களை மிரட்டுகிறார்கள். அந்த மிரட்டல் சில இடங்களில் கலக்கலாகவும், பல இடங்களில் கலகலத்தும் போயிருப்பதுதான் இந்த படத்தின் பலமும் பலவீனமும்!

ராஜாக்காள் காலத்து கதை! கதைப்படி பச்சைத்தீவு, மச்சத்தீவு, சங்குத்தீவு உள்ளிட்ட பல்வேறு குட்டி குட்டி தீவுகளை ராஜாக்கள் ஆள, சங்குத்தீவு இளவரசனுக்கு தந்தையை தீர்த்து கட்டிவிட்டு குறுக்கு வழியில் மொத்த தீவுகளுக்கும் சக்கரவர்த்தியாகும் ஆசை. இந்நிலையில் பச்சைத்தீவு இளவசன் ஜகதல பிரதாமன் மக்களுக்கு இடையூறு செய்யும் கடற் கொள்ளையன் அலைக்கள்ளனையும், அவனது கூட்டத்தையும் பிடிக்க மாறுவேடத்தில் சங்குத்தீவுக்கு அலைக்கள்ளனை துரத்தி வருகிறார். அவரிடம் இருந்து தப்பிக்கும் அலைக்கள்ளன், பிரதாபனின் படகை தீ அம்புகளால் தீக்கிரையாக்க, கடலில் குதித்து தப்பி பிழைக்க எண்ணும் கஜகதல பிரதாபன், மயக்க நிலையில் கரை ஒதுங்க, அவரை தமிழ் சினிமா வழக்கப்படி வாயோடு வாய் வைத்து தண்ணீரை உறிஞ்சி காபந்து செய்யும் மீவனப்பெண் மோகினி, பச்சைத்தீவு இளவரசர் எனத் தெரியாமல் அவர் மீது காதல் கொள்கிறார். ஜகதலபிரதாபனும் தான் இளவரசன் என காட்டிக் கொள்ளாமல் முத்த‌டக்கி மோகினி மீது காதல் கொள்கிறார். இதனூடே அலைக்கள்ளனை அவன் கூட்டத்தோடு கண்டுபிடித்து, கைது செய்யும் ஜகதலபிரதாபன் அதிர்ச்சியாகிறார். காரணம்... அந்த அலைகள்ளன் வேறு யாருமல்ல. மக்களை காக்க வேண்டிய சங்குத்தீவின் இளவரசன்தான். சக்கரவர்த்தி ஆசையில் மன்னனையும் வதைக்கும் அவனை கைது செய்து பச்சை தீவிற்கு அழைத்து வரும் பிரதாபன், சூட்டோடு சூடாக தன் காதலையும் மன்னரிடம் தெரிவித்து சம்மதம் வாங்குகிறார். அதே நேரம் பிரதாபனுக்கு முறைப்பெண் நிலைவை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கும் பச்சைத்தீவின் அரசனோ, சங்குத்தீவின் அரசனுடன் சேர்ந்து நயவஞ்சகமாக மோகினியை தீர்த்துக் கட்டுகிறார். அத்திட்டத்திற்கு பதிலுதவியாக சிறையில் இருந்து வெளிவரும் இளவரசன் அலைக்கள்ளன், வெளிவந்ததும் ஜகதலபிரதாபனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறார். அவனுக்கு கடவுள் சீமை தேவியின் நெற்றிப்பொட்டில் இருக்கும் நாகமாணிக்கத்தை அடைய துடிக்கும் போலி சித்தரும், மாந்திரீகருமான கோட்டா சீனிவாசராவ் உடந்தை‌யாக இருக்கிறார். அ‌லைக்கள்ளன் ரியாஸ்கானின் திட்டம் ஜெயித்ததா? பச்சைத்தீவு இளவரசன் ஜகதலபிதாபன் வென்றானா? இறந்து போன மோகினி நமீதா மீண்டும் எவ்வாறு வந்தார்? இளவரசன் ஜகதல பிரதாபனாக நடித்திருக்கு ராஜா - நிலாவின் நின்றுபோன திருமணம் மீண்டும் நடந்ததா? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் அளிக்கிறது மீதி படம்!

முதல் காட்சியிலேயே பிரமாண்ட நமீதாவை மேலும் பிரமாண்டமாக (இரண்டு தென்னை மர உயரத்திற்கு) ஐஸ்கட்டி உருவில், கடலில் இருந்து கிளம்பி காற்றோடும், புயலோடும் அரண்மனை மாளிகையில் நடைபெற இருக்கும் ஜகதலபிரதாபன் (ராஜா) - நிலா திருமணத்தை தடுத்து நிறு்ததுவதில் தொடங்கி, சித்தரின் மந்திரத்திற்கு கட்டுப்படும் சின்ன சொம்பில் ஜலமாக அடைக்கலமாகி பின், ராட்சத மரமாக, சாலையில் கிடக்கும் பாறையாக பயமுறுத்துவது வரை மோகினி நமீதா நிஜமாகவே மோகினியாட்டம் ‌ஆடியிருக்கிறார்.

இளவரசன் ஜகதலபிரதாபனாக தெலுங்கு ராஜா, அவரது முறைப்பெண் நிலை, மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ், அரசர்கள் நரசிம்ம ராஜூ, பாலாசிங், அலைக்கள்ளன் ரியாஸ்கான், ராணி யுவராணி, நிலாவின் தந்தை மதன்பாப் உள்ளிட்ட எல்லாரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு என்றாலும், நாதசுர நங்கூரம் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி அண்ட் கோவினரும், அவரது ஆவி அம்மா ஜோதி லட்சுமி கோஷ்டியினரும்தான் படத்தை தூக்கி நிறுத்தும் தூண்கள். வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்கும் மகுடியாக நாதஸ்வரத்தை வாசித்து சாரை சாரையாக நல்ல பாம்புகளை வீட்டிற்குள் படையெடுக்க வைக்கும் வடிவேலு செம காமெடி சரவெடி!

நமீதாவின் கவர்ச்சி மாதிரியே, இளையராஜாவின் இசையும் பலம்! என்.கே.விஸ்வநாதனின் இயக்கத்தில் வசனங்கள் புராண காலத்திலும் இல்லாமல், நிகழ்காலத்திலும் இல்லாமல் மாறி மாறி இருப்பது பலவீனம்! கருப்பு வெள்ளை புகைப்படத்தை கலரிங்கும், கம்ப்யூட்டர் மார்ப்பிங்கும் செய்து கொடுத்தது மாதிரி உயிர்ப்பு இல்லாமல் இருக்கிறது புதிய ஜகன்மோகினி.

ஜகன்மோகினி : ஜெயமாலினி நடித்தது ஜகன்மோகினி! ; நமீதாவுடையது ஜகா மோகினி!!

பொம்மாயி விமர்சனம்



தினமலர் விமர்சனம்

மாந்திரீகமும், சூனியமும் மூடநம்பிக்கை, அது நமக்கு நடக்காத ‌வரை... எனும் பயமுறுத்தும் உண்மையையும், தன் வினை தன்னை சுடும் எனும் பழகிய பழமொழியையும் சொல்லி வந்திருக்கும் மந்திர - தந்திர, மாயா ஜால திகில் படம்தான் பொம்மாயி.

பிரபல பில்டிங் கான்டிராக்டர் ராஜீவ்வாக ஹீரோ சுதிப். அவரது மனைவி ஆர்த்தியாக புதுமுகம் அம்ரிதா. இவர்களது ஆசை பெண் குழந்தை ரக்ஷா. இவர்களது கட்டுமான கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி பெரிய அளவில் ராஜீவ்வுக்கு து‌ரோகம் செய்துவிட, அவர்களை அசிங்கப்படுத்தி வேலையை விட்டு தூக்குகிறார் ஹீரோ. பலர் முன்னிலையில் அவமானப்பட்ட ஜோடி., ஹீரோவின் ஆசை மகளுக்கு பில்லி சூனியம் வைக்கிறார்கள். அதனால் அவரது ஆசைமகள் ரக்ஷாவிற்கு உயிர் போகும் ஆபத்தான நிலை. கடவுளை நம்ப மறுக்கும் ஹீரோ, மாந்திரீகத்தையும் நம்ப மறுத்து மருத்துவத்தை நம்புகிறார். மருத்துவமும் கைவிட, ஹீரோ கடவுளை நம்பினாரா? மகளை காப்பாற்றினாரா? நயவஞ்சக ஜோடியை நசுக்கினாரா, இல்லையா? என்பதற்கு முரட்டு தொனியில் விடை சொல்கிறது மீதி கதை!

காண்ட்ராக்டர் ராஜீவ்வாக தமிழுக்கு புதுமுக நாயகர் சுதீப் பாசமான தம்பியாக பளிச்சிடுகிறார். அம்மாவாக அம்ரிதாவும் குழந்தை பாசத்தால் நம்மையும் கலங்க வைக்கின்றார். ஆவி பிடித்த பெண்ணாகவும், பிடிக்காத பெண்ணாகவும் குழந்தை ரக்ஷாவின் நடிப்பும் திகில் மிரட்டல். பெண் மதன்பாபோ? என கேட்குமளவிற்கு சிரித்தபடியே வந்து ஹீரோவின் குடும்பத்தை சிதறடிக்கப் பார்க்கும் வில்லியும், அவரது கணவர் முட்டைமுழி, மொட்டைத்தலையரும் வித்தியாச விஸ்வரூபம். வேலைக்காரி, கார் டிரைவர் உள்ளிட்ட சஸ்பென்ஸ் பாத்திரங்களுக்காகவே இயக்குனர் ராம் கோபால் வர்மாவிற்கு சபாஷ் சொல்லலாம்.

சாதாரண சுவரைக்கூட திக், திக் திகிலாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனருக்கு, சவீதா சிங்கின் ஒளிப்பதிவும், அமர்மோஹ்லியின் இசையும், பப்பி துத்துலின் பின்னணி இசையும், சரிவிகிதத்தில் கைகொடுத்து சபாஷ் சொல்ல வைக்கின்றன. நம்ப முடியாத கதையை, தனது திரைக்கதை, இயக்கத்தின் மூலம் நம்ப வைத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.

பொம்மாயி - மாயாஜால மந்திரக்காரி!

பேராண்மை விமர்சனம்



தினமலர் விமர்சனம்

ஜெயம் ரவி தனது ஆண்மையை அதுவும் ஐந்து புதுமுக நாயகிகளுடன் உலகிற்கு காட்டியிருக்கும் படம்தான் பேராண்மை! ஆண்மை. ஐந்து நாயகி என்றதும் ஆளுக்கு ஒரு டூயட்... அது பத்தாதற்கு அயிட்டம் டான்ஸ் எனும் போர்வையில் குத்தாட்ட நடிகைகளுடன் கும்மாளம் என ஏதோ வழக்கமான காதல் களியாட்ட மசாலா படம் எனும் முடிவிற்கு வந்து விடாதீர்கள். இது நிஜமான பேராண்மை! நியாயமான போர் ஆண்மை!!

கதைப்படி அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு கிராமமாக வசிக்கும் பழங்குடியின வகுப்பில் பிறந்து வளரும் துருவன் பல்கலையும் படித்து அதே பகுதியில் ஜூனியர் காட்டு இலாகா அதிகாரியாக பணிபுரிகிறார். அந்த ஊருக்கு என்.சி.சி., டிரைனிங்கிற்காக வரும் கல்லூரி மாணவிகளில் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த காட்டில் வசிப்பது, விலங்குகளை எதிர்த்து போரிடுவது உள்ளிட்ட இன்னும் பல பயிற்சிகளை அளிக்கும் பணி துருவனுக்கு வழங்கப்படுகிறது. அதை மிகவும் கண்டிப்பும், கட்டுப்பாடுமாக செய்யும் துருவனை ஆதிவாசி, காட்டுப்பய என கிண்டலடித்து துரத்தியடிக்கப் பார்க்கின்றனர் கல்லூரி மாணவியர். அந்த பட்டாளத்தின் கொட்டத்தை அடக்கி, அவர்களில் 5 பேரை காட்டுக்கு அழைத்துப் போகும் துருவன், இந்தியா அனுப்ப உள்ள ராக்‌கெட்டை தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஊடுருவியிருக்கும் 16 பேர் கொண்ட அயல்நாட்டு சதிகாரர்களை இந்த 5 மாணவிகள் உதவியு‌டன் தீர்த்து கட்டி, செய்யும் சாகசங்கள்தான் பேராண்மை.

துருவனாக ஹீரோ ஜெயம் ரவி உடம்பு இளைத்து, மிலிட்டரி கெட்-அப்பில் மிரட்டியிருக்கிறார். இதுநாள் வரை காதல் நாயகராக வந்த ஜெயம் ரவியிடம் இத்தனை ஆண்மையும், பேராண்மையும் வெளிப்படுவதில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனும் தெரிகிறார். சபாஷ்!!

ஐந்து புதுமுகங்களில் ஓரிருவர் தவிர மற்ற நாயகிகள் ஆங்காங்கே ஒருசில படங்களில் பார்த்த முகங்கள் என்றாலும் இதில் பாத்திரம் உணர்ந்து நடித்து பலே சொல்ல வைத்திருக்கிறார்கள்.

நாயகர், நாயகியர் தவிர ஹீரோவின் உயரதிகாரியாக வரும் பொன்வண்ணனும், என்.சி.சி. டீச்சராக வரும் ஊர்வசியும் பாத்திரத்திற்கேற்ற பலமான ‌தேர்வு. ஜெயம் ரவியை ஆதிவாசி, காட்டுப்பய என மாணவிகளுடன் சேர்ந்து அடிக்கடி அவரது ஜாதியை சொல்லி கீழ்த்தரமாக நடந்து கொண்டு, அவரது கிராமத்தையே காலி செய்யும் பொன்வண்ணன், ஜெயம் ரவியின் சாகசங்களையெல்லாம் தனதாக்கிக் கொண்டு ஜனாதிபதியிடம் க்ளைமாக்ஸில் விருது பெறுவது கீழ்த்தரமாக நடந்து கொள்பவர்களுக்கு சரியான சவுக்கடி. பொன்வண்ணன் மாதிரியே ஒவ்வொரு கேரக்டர் மூலமும் இயக்குனர் தனக்கு தெரிந்த முதலாளித்துவத்தை எதிக்கும் கம்யூனிசத்தையும், சித்தாந்தத்தையும் புகுத்தி புரட்சி செய்திருப்பது புதுமை.

கல்லூரி பியூனாக வந்து ஹீரோ ரவிக்கு சப்போர்ட்டாக ‌பேசி அடிக்கடி பொன்வன்னண் மற்றும் அவரது டீமிடம் அடியும் உதையும் வாங்கிக் கொள்ளும் வடிவேலும் அவரது காமெடியும் வழக்கம்போலவே செம கலாட்டா.

‌ஜெயம்ரவி, 5 மாணவி(நாயகி)கள்,‌ பொன்வண்ணன், ஊர்வசி, வடிவேலு மாதிரியே படத்தின் பின் பாதியில் தீவிரவாதிகளாக வரும் 16 வெள்ளைக்காரர்களும், அவர்களது நடிப்பும் பிரமாதம். கோலிவுட் பேராண்மையை இவர்கள் ஹாலிவுட் படமாக்கியிருப்பது ஹைலைட். இயக்குனர் ஜனநாதன் காட்சிக்கு காட்சி தனது பாத்திரங்கள் மூலமும். சமூக அவலங்களை வசனமாக்கி அதன் மூலம் தெரிவது போன்றே, இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் எஸ்.பி.சதீஷ்குமார், எடிட்டர் விஜயன் உள்ளிட்டவர்களும் படம் முழுக்க தங்களை பளிச்சென வெளிப்படுத்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் கரப்டட் என கூடாரத்தை தமிழ் சினிமாவில் காலி செய்து வரும் வேளையில் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கும் நடிகர் அருண்பாண்டியன் கூறியது போன்று, அவர்கள் தயாரித்த வில்லு, ஏகன் உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் முதல் வெற்றிப்படம் எனும் ‌பெருமையை பேராண்மை பெற்றிருக்கிறது என்றால் மிகையல்ல. அதற்கு முழுமுதல் காரணம் ஹீரோவும், இயக்குனருமே!

பின் பாதியில் இருக்கும் விறுவிறுப்பும் வேகமும், முன்பாதியிலும் இருந்திருந்தால் பேராண்மை இன்னும் பெரும் ஆண்மையாக இருந்திருக்கும். என்றாலும் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, படமாகியிருக்கும் பேராண்மை இயக்குனர் - நாயகன் - தயாரிப்பாளர் மூவரது துணிச்சல்களால் போற்றும் ஆண்மைதான்.

பேராண்மை : போற்றும் ஆண்மை!


--------------------------------

விகடன் விமர்சனம்


இந்தியாவின் அறிவியல் பாய்ச்சலுக்குத் தடைபோட முனையும் அந்நிய விஷமிகளின் கனவை, அடர்ந்த காட்டின் பெரும் உண்மை அறிந்தவன் முறியடிக்க நினைத்தால்... அது பேராண்மை!

ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் இந்த கதை தளம் தமிழுக்கு ரொம்பவே புதுசு. இந்தியா செலுத்தவிருக்கும் செயற்கைக்கோளை நவீன ஆயுதங்கள் உதவியோடு தகர்க்க காட்டுக்குள் ஊடுருவுகிறார்கள் 16 தீவிரவாதிகள். தனது சொல் பேச்சு கேட்கக்கூடாது என்ற வறட்டுப் பிடிவாதத்தோடு இருக்கும் ஐந்து பெண்களை அதே காட்டுக்குள் என்.சி.சி. பயிற்சிக்கு அழைத்து வருகிறார் காட்டிலாகா அதிகாரி ஜெயம் ரவி. இந்த 5 + 1 கூட்டணி அந்த 16 உறுப்பினர் அணியை தடுத்துத் தடை ஏற்படுத்துகிறதா? என்பது வந்தே மாதரம் கிளைமாக்ஸ்.

அடித்து வார்க்கப்பட்ட இரும்பு வார்ப்பாக துருவன் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் ஜெயம் ரவி. ஒவ்வொரு நொடியும் உஷாராக இருப்பது, கோவணம் கட்டி மாட்டுக்குப் பிரசவம் பார்ப்பது, அவமானங்களுக்கு மத்தியில் முளைத்துக் கிளம்புவது எனப் பழங்குடியினரின் இயல்புகளைப் பிரமாதமாகப் பிரதிபலிக்கிறார் ரவி. வெல்டன் துருவன்!

அந்த வெளிநாட்டு வில்லன் ரோலன்ட் கிக்கிங்கர் (டெர்மினேட்டர் அர்னால்டின் டூப்!) அசைந்து நடக்கும் ஆலமரமாக மிரட்டுகிறார். பாதி படம் வரை குறும்புச் சேட்டைகள் செய்து ரவியை இம்சிக்கிறார்கள் அந்த ஐந்து பெண்களும். ஆனால், நிலைமையின் விபரீதம் புரிந்து போராட துணியும் சமயம் அவர்களுக்குள் அபார மாற்றம். காமெடியை விடவும், இனி மேலாவது மத்தவங்களுக்காக விளைவிக்காம, உங்களுக்காக விதைங்கய்யா! என்னும் இடத்தில் பாசமாக ஈர்க்கிறார் வடிவேலு.

நாலு பாட்டு, மூணு ஃபைட், 15 பஞ்ச் டயலாக் போன்ற கோலிவுட்டின் ஃபார்முலா பொத்தல்களில் சிக்கிக் கொள்ளாமல், பச்சைப் பசேலெனத் தளம் பிடித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் இங்கும் லாஜிக் பொத்தல்கள் உண்டு. கையில் ஒரு மேப், சில ஆயுதங்களோடு ஒரு வெளிநாட்டுக் கும்பல் ஜஸ்ட் லைக் தட் வந்து அந்த ராக்கெட்டைக் குடை சாய்ப்பது, ஸ்டிரிங்கர் ஏவுகணையை என்.சி.சி. பெண்கள் ரொட்டிக் கணக்காக எடுத்துச் சுடுவது, எதிரிகளின் சாம ஏவுகணையை கம்ப்யூட்டரில் நாலு தட்டுத் தட்டித் திசை திருப்புவதெல்லாம்.... ஸாரி சார்!

வித்யாசாகரின் இசையில் பின்னணி இன்னும் கொஞ்சம் விறுவிறுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சதீஷ்குமாரின் கேமரா காட்டின் வனப்பையும் மலை இடுக்குகளில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களையும் கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமா தளத்தைப் புதிய திசையில் கிளை பரப்பச் செய்யும் முயற்சிதான் இது. ஆனால் இன்னும் ஆழமாக வைத்திருக்கலாம். ஆனாலும் பேராண்மைக்கு உண்டு கௌரவமான மரியாதை!

விகடன் மர்க் : 43/100

----------------------------------



குமுதம் விமர்சனம்


ஒரு சாதாரண ஆள் லொள்ளு பிடிச்ச டீமை வைத்துக் கொண்டு மெகா வில்லன்களை ஜெயிக்கிற கதை.

வனக் காவலர் பணியில் பல அவமானங்களுக்கிடையே சாதிக்கத் துவங்குகிற பழங்குடி இளைஞன் துருவனாக ஜெயம் ரவி. இமேஜை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு வெறும் கோவணம் சகிதம் எருமை மாட்டுக்குப் பிரசவம் பார்க்கிற ரவியின் துணிச்சலை கைகுலுக்கிப் பாராட்டலாம்.

ரவியிடம் என்.சி.சி. பயிற்சி எடுக்க வந்து அவருடன் மோதிக் கொண்டேயிருக்கிற அந்த ஐந்து கல்லூரி மாணவிகளும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஜெயம் ரவியை மட்டம் தட்டிக் கொண்டேயிருக்கும் மேலதிகாரி பொன்வண்ணன். அத்துமீறுகிற போலீசுடன் மோதும் ஆவேசத்தில் தலைகீழாக ஓடி வருகிற ஊனமுற்ற பழங்குடி இளைஞர் குமரவேலு, வெற்றுச் சவடால் எல்லாம் இல்லாமல் சதித் திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கிற வெளிநாட்டு கூலிப்படைத் தலைவன் கிஸ்ஸிங்கர் ஆகியோர் படத்துக்கு வலு சேர்க்கிற கேரக்டர்கள். புரொபஷனல் அழகோடு கொலைகளை செய்து விட்டு ரவி நடத்துகிற பாடம் புதுவகை ஹீரோயிசம்.

சற்று முன்னேறிய பழங்குடி மக்களைப் பாராட்டும் தொனியிலேயே அவர்களை தாழ்த்துகிற ஜாதி அரசியலை முதன் முதலாக தோலுரித்துக் காட்டி இருக்கிறார் டைரக்டர் ஜனநாதன்.

நான் இங்கிலீஷ் பேசுனா எங்க ஆளுங்களுக்குப் புரியாது. உங்களுக்குப் புடிக்காது என்று போகிற போக்கில் ஜெயரம் ரவி அடிக்கிற கமெண்ட் செவிட்டில் அறைகிற பொளேர் யதார்த்தம்.

சதீஷ்குமாரின் கேமரா காட்டுப் பயணத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் திகிலூட்டுகிறது.

ஆள் இல்லாத காட்டுக்குள் நடமாடுகிற வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவின் புது ராக்கெட் திட்டத்தை குலைக்கத்தான் வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் பெரிய லாஜிக் உரசல்.
நாலு பாட்டு, அஞ்சு ஃபைட்டு என்கிற கோலிவுட் விதிமுறைக்கு உட்படாமல், உலகப் பிரச்னை முதல் உள்ளூர்ப் பிரச்னை வரை பேசுகிற ஒரு படம் தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜனநாதன்.

பேராண்மை : பெருமிதம். குமுதம் ரேட்டிங் : ஓ.கே

------------------------------

கல்கி விமர்சனம்


கோலிவுட்டின் கொத்து புரோட்டா படங்களுக்கு மத்தியில் மண் வாசத்தோடும், மண் நேசத்தோடும் கிளைத்து வேறு பாதையில் பயணிக்கும் படம் பேராண்மை.

அந்நிய விஷமிகளின் ஆபத்தான திட்டங்களை அழித்தொழிக்கிறான் அடர்ந்த காட்டின் பேருண்மை அறிந்த மலைஜாதி துருவன் என்பதுதான் கதை. துருவன் ஜெயம் ரவி.
பழுக்கக் காய்ச்சிய இரும்பாக சூடும், சுவையுமான கதாபாத்திரம் ஜெயம் ரவிக்கு. ரவியும் ரஃப் அண்ட் டஃப்பாகவே செய்திருக்கிறார். கோவணம் கட்டிக் கொண்டு மாட்டுக்குப் பிரசவம் பார்ப்பதிலிருந்து அவமானங்களை செரித்துக் கொண்டு அடங்க மறுப்பது என... ஃப்ரேமுக்கு ப்ரேம் விறைப்பு கூடிக் கொண்டே போவது கதாபாத்திரத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

வெளிநாட்டு வில்லன் ரோலன்ட் கிக்சிங்கர். வெள்ளை மலையாக விதிர்விதிர்க்க வைக்கிறார். ஆனாலும் காடுகளில் அவரை அலைய விட்டிருப்பதில் கோலிவுட் அலப்பறை தெரிகிறது. கும்மாளமும் குறும்புமாகச் சுற்றித் திரியும் ஐந்து பெண்களும் (ஹீரோயின்ஸாம்) குறிப்பறிந்து சீரியஸ் ஆவதில் அப்ளாஸ் வாங்குகின்றனர். எனினும் என்.சி.சி. பெண்களை ராக்கெட் லாஞ்ச்சர் இயக்க வைத்திருப்பதில் இயக்குநர் நம் காதுக்கு மட்டுமல்ல; கண்களுக்கும் பூ சுற்றி விட்டிருக்கிறார். வடிவேலு இருக்கிறார். ஆனால் அலுப்பும் இல்லை...

வித்யசாகர் பின்னணி இசையில் பின்தங்கி பாடல்களில் இருக்கிறேன் ஸாரர் என்கிறார். காடுகளின் ரகசியத்தை கண்களுக்குள் நிறைக்கும் சதீஷ்குமாரின் கேமராவுக்கு திருஷ்டி சுத்திப் போடணும். வித்தியாசமான கதைகளோடு களத்துக்கு வந்திருக்கும் இயக்குநர் ஜனநாதனுக்கு ஜே!

பேராண்மை : உண்மையில் பேராண்மைதான்!

--நன்றி தினமலர்