Thursday, February 18

தீராத விளையாட்டுப் பிள்ளை விமர்சனம்



விமர்சனம்

தனக்கு தேவையானதை சிறந்ததாக தேர்வு செய்யும் விஷால், அதற்கான சாய்ஸ் உடன் தான் அந்த பொருளை தேர்வு செய்யும் பழக்கம் உடையவர். இந்த பழக்கத்தை காதலிலும் கடைபிடிக்கிறார். மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து காதலிக்கும் விஷால், அதில் யார் சிறந்தவரோ அவரையே கைபிடிப்பேன் என்று காதல் களத்தில் இறங்குகிறார். இதில் வெற்றி பெற்றாரா அல்லது தோல்வியடைந்தாரா என்பது தான் படம்.

மூன்று பெண்களை காதலிக்க நினைக்கும் விஷால், சாரா ஜென், தனுஸ்ரீ தத்தா, நீத்து சந்திரா, ஆகிய மூன்று நாயகிகளையும் ஒரே நாளில் சந்திக்கிறார். காதலில் தோல்வியடைந்த பணக்காரப் பெண், ஆண்கைளை வெறுக்கும் பெண், ஒருவனையே காதலித்து அவனையே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தில் வாழும் பெண். இந்த மூன்று குணம் படைத்த பெண்களையும் தனது காதல் வலையில் சிக்க விஷால், செய்யும் பொய் பித்தலாட்டம் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

விஷாலை காதலிக்கும் மூன்று பெண்களில் நீத்து சந்திராவுக்கு விஷாலின் சுயரூபம் தெரிய, ஆரம்பமாகிறது அவர்களுக்குள் சண்டை. ஒரு பக்கம் இரண்டு பெண்களை காதலிக்கும் விஷால், மற்றொரு பக்கம் நீத்துவை எதிர்க்கொள்ளும் பரபரப்பு என பறக்கிறது படம்.

சந்தானம், மயில்சாமி, சத்யன் என நண்பர்களின் பட்டாளத்துடன் சுற்றும் விஷால், இப்படத்தில் அதிரடியை விட்டு விட்டு வேறு ஒரு பாதையில் பயணிக்கிறார். பெண்களிடம் தில்லு முல்லு செய்யும் போது அவர்காட்டும் முவ பாவனைகளால் விஷாலையே கொஞ்சம் வேறுபடுத்திக் காட்டுகிறது.

மூன்று நாயகிகளில் நீத்து சந்திராவுக்கு தான் நடிக்க அதிக வாய்ப்பு, வாய்ப்பை தன் வசமாக்கி அசத்தியிருக்கிறார். கவர்ச்சியும் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கிறது. மாடர்ன் உடையை விட புடவையில் அழகாக இருக்கும் தனுஸ்ரீ தத்தா, அமுல் பேபியைப் போல் இருக்கிறார். விஷாலை உண்மையாக காதலிக்கும் சாரா ஜென், விஷாலின் உயரத்திற்கு ஏற்ற நாயகி.

ஆளுக்கொரு பணியில் இருக்கும் விஷாலின் நண்பர்களான மயில்சாமி, சந்தானம், சத்யன் ஆகியோரின் நக்கலான நகைச்சுவை திரையரங்கில் ஆரவாரம் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. அதுவும் குறிப்பாக சந்தானத்தின் நகைச்சுவை சரவெடி.

யுவன்சங்கர் ராஜாவின் இசையில் 'தீராத விளையாடுப் பிள்ளை.....' பாடல் கேட்டவுடன் பதிந்து விடுகிறது. மற்ற பாடல்களும் கேட்கும் அளவிற்கு உள்ளது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளை பிரமாண்டமாக காண்பிக்கிறது.

புதுமையாக ஏதும் இல்லை என்றாலும் அதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு. திரைக்கதையில் வரும் சிறு சிறு திருப்பங்கள் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டுகிறது. (டிஎன்எஸ்)

No comments :

Post a Comment