Monday, February 8

யோகி விமர்சனம்


தினமலர் விமர்சனம்

எந்த குழந்தையும், நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவம் அன்னை வளர்ப்பினிலே... என்பது பழைய பாடல். அன்னைக்கு பதில் தந்தையால் அயோக்கியனாகும், அன்பிற்கு ஏங்கும் ஒருவனின் கதைதான் யோகியின் கதை!

கொடூர அப்பாவின் அடாவடித்தனத்தால் சின்ன வயதில் தாயையும், தங்கையையும் தன் கண் முன்னே பறிகொடுக்கும் யோகி, தந்தையை பலிகொடுத்து சுற்றமும், நட்பும் சூழ வளர்ந்து ஆளாகி, கொலை - கொள்ளை என கொடூரமாக அலைந்து திரிகிறார். ஒரு கொள்ளையில் பெண் குழந்தை ஒன்று அவர் வசம் வந்து சேர, அதுவரை கொடூரமாக வாழ்ந்து வந்த யோகி, அக்குழந்தையை, சின்ன வயதில் தன் தந்தையால் தான் பறிகொடுத்த தன் தங்கையாக கருதி பாசத்தை பொழிந்து, பையிலும் கையிலும் தூக்கி கொஞ்சுகிறார். ஆனால், எல்லாம் இரண்டு நாட்கள்தான். குழந்தையை உரியவர்களிடம் ஒப்ப‌டைக்க வேண்டும் என்ற உண்மையை நாயகி மதுமிதா உரைக்க, குழந்தையை அதன் தந்தையிடம் ஒப்படைக்க கிளம்புகிறார். அக்குழந்தையின் தந்தையோ குழந்தையை கொல்லத் துடிக்கிறான். அது ஏன்? எதற்கு? யோகி அமீர் குழந்தையை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது மீதிக் கதை!

யோகி அமீர் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் தன் நாயகர்களை வாழ வைத்த இயக்குனர் அமீர், இதில் ஹீரோவாக... அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக வாழ்ந்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். அமீரை மாதிரியே, அவருடைய நண்பராக வரும் பாடலாசிரியர் சிநேகன் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார்கள். சபாஷ்!

புருஷனை பிரிந்து ஆந்திரா காக்கிநாடாவில் இருந்து கைக்குழந்தையுடன் வந்து பொம்மை தயாரித்து விற்கும் மதுமிதாவின் பெண்மையும், தாய்மையும் பிரமாதம். குழந்தையை அமீரிடம் பறிகொடுத்து விட்டு தவிக்கும் சுவாதியும், ஆஸ்பத்திரி பெட்டில் அடிபட்டு படுத்துக் கொண்டே நடிப்பில் ஸ்கோர் செய்து விடுகிறார்.

இவர்கள் தவிர பொன்வண்ணன், வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட இன்னும் பலரும் படத்தில் உண்டென்றாலும் அமீர், சிநேகன், மதுமிதா, சுவாதி மாதிரியே ஏன்? அவர்களை காட்டிலும் ஒரு படி மேலேயே பெயர் வாங்கி விடுகிறார் அமீரின் அப்பா பாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் அந்த தாடிக்காரர். தாடியை நீவி விட்டுக் கொண்டு தள்ளுவண்டியில் பிச்சையெடுக்கும் அவருக்குள் அத்தனை கொடூரமா? பிச்சைக்காரர்களும் தன் வீட்டில் எத்தனை கொடூரமானவர்கள் என்பதை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கின்ற இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவிற்கு தனியாக சொல்ல வேண்டும் ஒரு சபாஷ்!

அதென்ன சைக்கோ ஹீரோக்கள் என்றால் படம் எடுத்து ஆடும் நல்ல பாம்புக்கு பழி்பபு காட்ட வேண்டும், எலி குஞ்சுகளை கொல்ல வேண்டும், விஷ பாம்பு இருக்கும் வீட்டில் குழந்தையை கொண்டு வந்து போட்டு முரட்டுத் தனம் காட்ட வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா என்ன? அமீரை அவரது அப்பா கேரக்டர் கொடுமை படுத்துவதைக் காட்டிலும், சுவாதியின் குழந்தையை கொண்டு வந்து கொஞ்சுகிறேன் பேர்வழி என கொடுமையோ கொடுமை படுத்துகிறார் அமீர். மிருக வதை தடுப்பு சட்டம் மாதிரி சினிமாக்காரர்களுக்காக சிறுவர் வதை தடுப்பு சட்டம் ஏதாவது கொண்டு வந்தால்தான் சரிப்படுவார்கள் எனும் எண்ணமும் எழுகிறது. நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம் சம்பந்தப்பட்டவர்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஆர்.பி.குருதேவ், கே.தேவராஜ் ஆகியோரது ஒளிப்பதிவு, ராம்சுதர்சனின் படத்தொகுப்பு உள்ளிட்டவைகள் படத்தின் ‌பெரும் பலம்.

ஆயிரம் அல்டா, உல்டா செய்திருந்தாலும், டூ - சி எனும் கொரியன் படத்தையும், அதை‌ யோகிக்கு முன்பே உல்டா செய்து தமிழில் வெளிவந்த திரு திரு துறு துறு உள்ளிட்ட படங்களையும் யோகி ஞாபகப்படுத்த தவறவில்லை.

என்னதான் கதையும், இயக்கமும் சுப்பிரமணியம் சிவாவினுடையது என்றாலும் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து நாயகராகவும் நடித்திருக்கும் அமீரிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம். அதில் நடிப்பில் மட்டுமே நாம் எதிர்பார்த்ததற்கு மேலாக பூர்த்தி செய்து ஜெயித்திருக்கிறார் அமீர். ஆகவே யோகி நம்பிக்கை துரோகியும் அல்ல, நல்ல விரோதியும் அல்ல.. அமீரை விரும்புபவர்களுக்கு நண்பன்.

யோகி : டெக்னிக்கலாக ஓ.கே. சகி! மற்றபடி.

---------------------------------------

குமுதம் விமர்சனம்

பால்ய காலம் முதலே பாசம் என்பதை அனுபவித்தறியாத தாதாவிடம் பச்சைக் குழந்தை கிடைத்தால் எப்படி இருக்கும் ? ரவுடித் தொழிலை மறந்து குழந்தையிடம் அன்பு தேடுகிறான் யோகி. சிகரெட் பிடித்தபடி எப்போதும் சோகமாகவே தெரிகிறார் அமீர். பல படங்களில் பார்த்துச் சலித்த வழக்கமான தாதா கேரக்டர்தான்

இதிலும். அமீருக்கான ஸ்பெஷல்னு கதையில் புதிதாய் எதுவும் தெரியவில்லை. லோக்கல் தாதாவிடம் அமீர் முறைத்துக் கொள்வதும், குழந்தையை குஷிப்படுத்த ரஜினி மாதிரி ஆட்டம் போடுவதும் வெகு அழகு. ஆனால், ஒரேயொரு கொலை, சில பல திருட்டுக்களைச் செய்து விட்டு "" குழந்தைக்காக எல்லாத்தையும் விடுகிறேன்'' ன்னு அவர் சொல்வதெல்லாம் தாதாவுக்குப் பொருந்தாத கம்பீரம்.

சோகமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என டைரக்டருக்கு யாரோ தவறாகச் சொல்லிட்டாங்க போல. அமீரின் சிறுவயது ஃப்ளாஷ்பேக் ரசிக்கும்படியாக இல்லை. மதுமிதாவின் கேரக்டரும் அப்படியே.

மதுமிதா ஆந்திராப் பெண், பொம்மை விற்கிறாள் என்பதெல்லாம் சுவாரஸ்யமாக இருந்தாலும் அமீருடன் அவர் வந்து போகும் காட்சிகளும், பணம் வாங்கிக்கொண்டு குழந்தைக்குப் பால் கொடுப்பதும் மனதில் ஒட்டவில்லை.

சுவாதியின் குழந்தை சந்தர்ப்பவசத்தால் கடத்தப்படுவது நல்ல திருப்பம்தான். ஆனால், கூலிப்படை வைத்து வின்சென்ட் அசோகன் அந்தக் குழந்தையைக் கொல்ல முயல்வதெல்லாம் போரடிக்கும் சமாச்சாரம். அமீருடன் மெட்ராஸ் பாஷை பேசிக் கொண்டு வருகிற அந்த இரண்டு பேரும் நம்மை கவனிக்க வைக்கிறார்கள். கவிஞர் சினேகனா அது ? பேட்டை ரவுடியா நல்லாவே நடிச்சுருக்காருப்பா.

யுவனின் "சீர்மேவும் கூவத்திலே....'' பாட்டு இளைஞர்களின் ஃபேவரைட். பின்னணி இசையிலும் சரவெடி வெடித்திருக்கிறார். குருதேவ்-தேவராஜ் ஒளிப்பதிவு படத்துக்குப் பக்கபலம்.

க்ளைமாக்ஸில் ""வாடா... வாடா...'' என திமிறிக்கொண்டு எதிரிகளை அமீர் பந்தாடுவது அலுப்பாக இருக்கிறது. படம் முழுக்கவே சில ஆங்கிலப் படங்களை நினைவூட்டுவதுபோல காட்சியமைப்புகள்.தவிர்த்திருக்கலாமே ஸார் ?

யோகி - தவ வலிமை இல்லாதவன், குமுதம் ரேட்டிங் : சுமார்

---------------------------------------

விகடன் விமர்சனம்

பாச நேசம் பழகாமல்.. கோபம் குரூரம் மட்டுமே செதுக்கியவனை, ஒரு குழந்தை "தியாகி'' ஆக்கும் கதை... அல்லது 2005ல் வெளிவந்த தென் அமெரிக்க சினிமாவான "சோட்ஸி''யின் தமிழ் ரீமேக் (அந்த ஊரில் சோட்ஸி என்றால் ரவுடி, பொறுக்கி!)

தமிழில் "உலக சினிமா''க்கள் உருவாக்குவது ஒரு டிரெண்ட் என்றால், உலக சினிமாக்களை தமிழில் அப்படியே சுட்டுத்தள்ளுவது ஒரு டிரெண்ட். அதில் இது இன்னொரு படம்!

சென்னை சேரியின் முரட்டு ரவுடி அமீர். கொலை, கொள்ளை என நெஞ்சில் துளி ஈரமும் இல்லாமல் இயங்குவர். ஒரு கொள்ளை முயற்சியின்போது ஒரு காரை கடத்தித் தப்பிக்கிறார். காருக்குள் ஒரு குட்டிப் பாப்பா! என்ன செய்வது என்று தெரியாமல் அந்தக் குழந்தையை தன்னோடு தூக்கி வந்து விடுகிறார். சின்ன வயதில் இறந்த தனது தங்கையை நினைவு படுத்துவதால், அந்தப் பாப்பாவைத்தானே வளர்க்க முயற்சிக்கிறார். குழந்தையின் தந்தை அந்த குழந்தையை கொல்ல கூலிப்படையை ஏவுகிறார். தொடர் கொள்ளைகள் காரணமாக போலீஸ் அமீரை நெருங்குகிறது. குழந்தை உயிர் பிழைத்ததா... அமீருக்கு என்ன ஆனது என்பது ஹீரோயிஸத்துக்காக ஒரிஜினலில் இருந்து ரீமிக்ஸிய க்ளைமாக்ஸ்!

"சோட்ஸியின்'' பல காட்சிகள், வசனங்கள், செட்டுக்களைக்கூட அச்சு அசலாகக் கடத்தி வந்திருக்கும் இயக்குனர் சுப்ரமணிய சிவாதான் (டைட்டில்படி) "கதை''யையும் எழுதியிருக்கிறார். திரைக்கதை, வசனம், எழுதி நடித்திருக்கும் அமீர், எந்தச் சந்தேகமும் இல்லாமல் ஒரு நடிகராக இதில் "டிஸ்டிங்ஸனில்'' பாஸாகிறார். முட்ட முட்டக் குடித்து குத்தாட்டம் போடும் போதும், "கக்கா'' போன குழந்தைக்கு முன் திருதிருவென விழித்து நிற்கும் போதும், துப்பாக்கி நீட்டி மதுமிதாவை கைக்குழந்தைக்கு பாலூட்ட சொல்லும் போதும்... அறிமுகம் என்ற அதிர்வுகளே இல்லாத தெளிவு. குழந்தையைச் சுற்றிய பாம்பைக் கதவிடுக்கில் காவு கொடுக்கும் அலட்டல்...செம மிரட்டல்!!! சண்டைக் காட்சியில் அடி ஒவ்வொன்றும் நம் மேல் இறங்குகிறது.

அமீருக்கு அடுத்து ஈர்த்து இழுப்பது, அந்தக் குட்டிப் பாப்பா இம்ரன். சில்மிஷமும், சிணுங்கலுமாக இம்ரன் தோன்றும் ஃப்ரேம்களில் திரையில் நட்சத்திரச் சிதறல்கள். திரையில் பாதி திறந்த மார்புடன் குழந்தைக்குப் பால் கொடுக்கும் அதே துணிச்சலுடன் அமீரை ஆவேசமாக எதிர்க்கும் சமயங்களில் ஈர்க்கிறார் மதுமிதா. அமீரின் கூட்டாளிகளாக சுற்றித் திரியும் மூவர் கூட்டணி (அட, பாடாலாசிரியர் சினேகன்) சின்சியர் செலக்ஷன். அண்ணியை உள்ளேப் போகச் சொல்லி விட்டு, "சர்ச்சுல நான் வந்து மணியாட்டவா?'' என்று கேட்கும் தாதா திருநா படபட பட்டாசு.

"யாரோடு யாரோ'' பாடலிலும் பின்னணி இசையிலும் யுவன் ஸ்கோர் செய்கிறார். ஆர்.பி.குருதேவ் கே.தேவராஜின் கேமரா சேரிக்காட்சிகளையும் ஆக்ஷன் ப்ளாக்குகளையும் துல்லியமாகக் காட்சிப் படுத்துகிறது.

பேப்பர் பையிலும், மூங்கில் கூடையிலும் குழந்தையை நினைத்த இடத்துக்கு எல்லாம் அமீர் தூக்கி செல்வது சினிமாக்களில் மட்டுமே சாத்தியம். குழந்தையை மையமாக வைத்துதான் மொத்தப் படமும் சுழல்கிறது. ஆனால், அந்தக் குழந்தை கொல்லப்படப் போகும் பதைபதைப்பைப் பார்வையாளர்களிடம் கடத்தாமலேயே இறுதி வரை பயணிக்கிறதே திரைக்கதை?!

விகடன் மார்க் : 40/100

----------------------------------

கல்கி விமர்சனம்

* குப்பத்து மக்களின் வாழ்வின் குறுக்கு வெட்டு தோற்றம்தான் யோகி. வெக்கையும், புழுக்கமுமாக படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் சுப்ரமணிய சிவா.
* கரடு முரடான பால்யம் வாய்க்க பெற்ற ஹீரோ, ரவுடியாகி, காதலின் குறுக்கீட்டால் திருந்துவதுதான் தமிழ் சினிமா இலக்கணம் (அய்யோ அய்யோ). ஆனால், இங்கே குழந்தை பாசம் என்று சொல்லி நிமிர வைக்கிறார்.
* இயக்குனர் அமீர் தயாரித்து நடித்திருக்கும் படம் என்பதால், எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் கூடியிருந்தது போலவே, அவருக்கு நடிப்பும், பைட்டும் கை கூடி வந்திருக்கின்றன.
* அமீரின் நண்பர்களாக வருபவர்களில்பாடலாசிரியர் சினேகன் பளிச்சென்று தெரிகிறார்.
* காதல்... காதல்.. என்று போய் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் காதலை தவிர்த்திருப்பது தனித்த கவனம் பெறும் முயற்சி.
* மதுமிதாவின் அரைகுறை தமிழை ஆராதிக்கலாம். தாய் பால் தந்ததற்காக கொடுத்த காசை திருப்பி தருகையில் நடிக்கிறார்.
* குட்டிக் குழந்தையும் சமர்த்து.
* குப்பத்தின் குறுக்கு நெடுக்கு சந்துகளில் குழந்தையை பையில் போட்டு கொண்டு அலைவது நம்பும்படி இல்லை.
* யுவனின் இசையில் உக்கிரம் அதிகம்
* குருதேவ் தேவராஜ் ஒளிப்பதிவு சூப்பர் டூப்பர்.

யோகி : கல்லுக்குள் ஈரம்

No comments :

Post a Comment