Monday, March 8
வீரசேகரன் விமர்சனம்
தினகரன் விமர்சனம்
சென்னையில் உள்ள, ஒரு சுடுகாட்டில் தங்கிப் படிக்கும் கிராமத்து இளைஞன் வீரசேகரன். இரவில் ஆட்டோ ஓட்டி, பகலில் படிக்கும் லட்சியவாதி. அவரது படிப்புச் செலவை ஸ்பான்சர் செய்பவர் அரசியல்வாதி பிரதாப். கிராமத்தில், முதிர் கன்னிகளாக நிற்கும் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் தவிக்கும்போது உதவிக்கு வரும் பிரதாப், அவரிடம் கேட்பது இரண்டு கொலை. வேறு வழியில்லாமல் கொலை செய்து சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார். தனது அரசியல் வளர்ச்சிக்காக பிரதாப் கொடுக்கும் அடுத்த அசைன்மெண்ட் தனது மகனையே கொலை செய்ய வேண்டும் என்பதுதான். அது நடந்ததா என்பது மீதி கதை.
கிராமத்திலிருந்து சென்னை வரும் இளைஞன் இங்குள்ள சில சுயநலவாதிகளால் தப்பாக வழிநடத்தப்பட்டு அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்படுவதை பல படங்களில் பார்த்திருந்தாலும் சிறிய பட்ஜெட்டில் வித்தியாசமான ட்ரீட்மென்டில் வந்திருக்கிறது வீரசேகரன்.
நகரத்து வெட்டியானின் வாழ்க்கையுடன் இணைந்த ஹீரோவின் பயணமும், பிளஸ்&2 தேர்விலேயே வருடத்தை கழித்துக் கொண்டிருக்கும் மிடில் கிளாஸ் ஹீரோயினும் புதுசு. ஹீரோ அவதாரமெடுத்திருக்கும் ஆர்ட் டைரக்டர் வீரசமரும், புதுமுகம் அமலா பாலும் தோற்றத்தில் மட்டும் கேரக்டருக்குப் பொருந்துகிறார்கள். வழக்கமாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் கதையை புதுமுகங்களை வைத்து யதார்த்தமாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் நவி.சதிசுகுமார்.
கிராமத்தின் யாதார்த்தத்தையும், நகரத்தின் கொடூர முகத்தையும் காட்சிப்படுத்துவதில் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அதிலும் முதிர் கன்னியாக இருக்கும் அக்காவின் அந்த தவறு, கசப்பான ஷாக். கஷ்டப்பட்டு படித்து முன்னுக்கு வரத் துடிக்கும் ஹீரோ, சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக, கொடூரமான கொலைத் தொழிலில் இறங்குவது, சுடுகாட்டில் தங்கி படிக்கும் மகன் லட்சம் லட்சமாக கொடுக்கும்போது என்ன ஏது என்று கேட்காமல் வாங்கி வாங்கி வைத்துக் கொள்ளும் பெற்றோர், ஹீரோவை ரகசியமாகச் சந்தித்து பேச வசதி இருந்தும் குப்பை மேட்டில் சந்தித்து பேசும் வில்லன், காதலி போன்று ஹீரோ வாழ்வில் நுழைந்து பின்னர் இன்னொருவனை திருமணம் செய்து கொள்ளும் ஹீரோயின், எத்தனை கொலை நடந்தாலும் கடைசி வரை மீட்டிங் போட்டு பேசிக்கொண்டே இருக்கும் போலீஸ், உடல் ஊனமுற்ற ஒருவரைக் கூட கொலைகாரனாக்கும் வில்லன், சில நாட்களிலேயே வழக்கை முடித்து கொலையாளிக்கு மரணதண்டனை விதிக்கும் நீதிமன்றம் என்று எந்த இலக்கும் இன்றி கதையை, நார் நாறாக கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள்.
சுடுகாடு, பிணம் எரிப்பு, புதைப்பு என்று படம் முழுக்க ஆக்கிரமிக்கும் காட்சிகளால் படம் முடிந்து வெளியே வரும்போது வீட்டில் போய் குளிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை. வெட்டியானாக நடித்திருக்கும் ‘பூ’ ராமு, அவ்வப்போது சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆறுதல் தருகிறார்கள். ஷாஜன் மாதவின் இசையிலும், எஸ்.வி.எழில் செல்வனின் ஒளிப்பதிவிலும் உழைப்பிருந்தும் உயிர்ப்பில்லை.
-நன்றி தினகரன்
தினமலர் விமர்சனம்
பிதாமகன், நான் கடவுள் ஸ்டைலில் இருக்குமென நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் வீரசேகரன்!
சுடுகாட்டில் தொடங்கி சுடுகாட்டிலேயே முடியும் வீரசேகரன் கதையை விலாவரியாக சொல்வதென்றால்., கதாநாயகனாக காதல், வெயில் படங்களின் கலை இயக்குனர் வீரசமர் முதன்முறையாக நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் படம்! அழுகை, ஆத்திரம், பொறுப்பு, விறுப்பு, வெறுப்பு என முதல் படத்திலேயே மனிதர் நிறைய ரெளத்திரம் காட்டி நடித்து இருக்கிறார் பேஷ்... பேஷ்! ஆனாலும் பூ படத்தில் கதாநாயகியின் கணவராக, கிராமத்து மளிகைக்கடைகாரராக இவர் பொருந்திய அளவிற்கு, வீரசேகரனாக, கதாநாயகனாக இவர் இப்படத்தில் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்பது வருத்தம்!
கதாநாயகியாக புதுமுகம் அமலா பால். எதிர்பாலினரை கவரும் தோற்றம். எதிர்பார்ப்பை கூட்டும் அளவிற்கு நடித்திருக்கிறார். இந்த ஜோடி தவிர வில்லனாக பிரதாப் போத்தன், எம்.எஸ்.பாஸ்கர், கிரேன் மனோகர், 'பூ' ராமு, ஜோதி, ஆர்த்தி, ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே பேர் சொல்லும் அளவிற்கு நடித்திருக்கிறது.
நாக்அவுட் நந்தாவின் சண்டைப்பயிற்சி, வீரசமரின் கலை இயக்கம், சி.எஸ்.பிரேமின் படத்தொகுப்பு, மாதவ்வின் (இவர், பிரபல மலையாள பட இசையமைப்பாள் ரவீந்திரனின் மகனாம்...) இசை, எஸ்.வி.எழில் செல்வனின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் புதியவர் நவி.சதிசு குமாரின் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன. ஆனாலும் சதிசுகுமாரின் கதை, திரைக்கதை, வசனத்தில் இருக்கும் தெளிவு, காட்சிப்படுத்தலிலும், இயக்கத்திலும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!
வீரசேகரன் : ஆர்ட் டைரக்டர் வீரசமரின் 'வீரதீர' திரை விஜயம்!
ஆமாம் கதை?! அதான் சொன்னோமே...! எண்ணற்ற சுடுகாட்டுப் பாடல்களுடன் சுடுகாட்டில் சுடுகாட்டிலேயே முடிய வேண்டும் என முடிந்திருக்கும் படம் என்று...! கதைப்படி ஊரில் பருவம் அடைந்து பல ஆண்டுகளாகியும் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் இரண்டு அக்காக்கள்... அவர்களை வைத்துக் கொண்டு தடுமாறும் வயதான அப்பா, அம்மா... என இத்தனை கமிட்மென்ட்களுடன் ஹீரோ வீரசமர், சிட்டிக்கு வருகிறார்...! வேலை பார்க்க வரவில்லை... கல்லூரி படிக்க வருகிறார். பிள்ளை படிக்கத்தான் போயிருக்கிறான் என்பது புரியாமல்அடிக்கடி பணம் கேட்கிறது மொத்த குடும்பமும். இதனால் தனக்கு நெருக்கமாகும் ஆளுங்கட்சி அமைச்சருக்கு மனசாட்சியை அடகு வைத்து விட்டு, அடியாள் வேலைபார்க்கும் ஹீரோ, லட்ச லட்சமாக சம்பாதித்து மொத்த குடும்பத்தையும் கரை சேர்க்கிறார். அமைச்சரின் அட்டூழியங்கள் அதிகரித்து, அரசியல் ஆதாயத்துக்காகவும், அனுதாபத்திற்காகவும் அவரது மகனையே (கவனிக்கவும் அமைச்சரின் மகன் ஹீரோவின் உயிர் நண்பர்...) போட்டுத் தள்ள உத்தரவிடும்போது, வெகுண்டெழும் ஹீரோ என்ன செய்கிறார்? என்பதுதான் வீரசேகரனின் வித்தியாசமும்(?) விறுவிறுப்புமான(!) மீதிக்கதை! அதுவும் வேண்டுமா?
-நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment