Thursday, July 15
ஆனந்தபுரத்து வீடு விமர்சனம்
தினமலர் விமர்சனம்
ஆவிகளா? அடப்பாவிகளா? என அட்டகாசம் செய்யும் அடாவடி ஆவிகளையே தமிழ் சினிமாவில் பார்த்து பயந்தும், சலித்தும் போன ரசிகர்களுக்கு, அன்புமழை பொழியும் ஆவிகளும் இருக்கின்றன என்பதை அழகாகவும், அருமையாகவும் படம் பிடித்துக் காட்டியிருக்கும் திரைப்படம் ஆனந்தபுரத்து வீடு!
சிறு வயதிலேயே தாயையும், தந்தையையும் கார் விபத்து ஒன்றில் பறிகொடுத்துவிட்டு சென்னைக்கு வரும் நந்தா, வளர்ந்து பெரிய ஆளாகிறார். நகரத்து வாழ்க்கை, தொழில் என்று ஒரே மாதிரி லைப் ஸ்டைல் போரடிக்க... குடும்பத்துடன் நாகர்கோயில் பகுதியில் உள்ள பூர்வீக வீட்டிற்கு வருகிறார். அங்கு பாசத்துடன் அவரது வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன நந்தாவின் பெற்றோருடைய ஆவிகள்.
அப்புறம்? அப்புறமென்ன...குடிக்க தண்ணீர் பிடித்து தருவதில் தொடங்கி, சமையல், துணி துவைப்பது என சகலத்தையும் பாசத்துடன் அம்மா ஆவி பார்த்துக் கொள்கிறது. அப்பா ஆடியோ அந்த அழகிய வீட்டை விற்கும் நினைக்கும் மகனுக்கு, தன் கைத்தடி மூலம் பாடம் புகட்டுவதுடன் வாங்க வருபவர்களை அடித்து விரட்டவும் செய்கிறது. கூடவே பேரனை கொஞ்சி மகிழ்ந்தும் பொழுது போக்குகிறது. இந்நிலையில் அந்த அழகான நந்தா குடும்பம் மகிழ்ச்சியான மாற்றத்திற்காக நாகர்கோயிக்கு வரவில்லை. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லை ஆகியவற்றிற்காகத்தான் ஊருக்கு வந்திருக்கிறது எனும் உண்மை நந்தாவின் மனைவி சாயா சிங்கிற்கும், வீட்டு வேலைக்காரம்மா மயிலம்மாவிற்கும் தெரிய வருகிறது. கடன்காரர்கள் நாகர்கோயிலில் உள்ள நந்தாவின் வீட்டு வாசலுக்கே வந்துவிட... நந்தாவோ, பார்ட்னர் மூலம் பணத்திற்கு அலைகிறார். நந்தாவிற்கு பணம் கிடைத்ததா? கடன் அடைபட்டதா?அதற்கு நந்தாவின் அப்பா - அம்மா ஆவிகள் எந்த விதத்தில் உதவின? என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது ஆனந்தபுரத்து வீடு படத்தின் மீதிக்கதை!
கடனில் சிக்கித் தவிக்கும் இளம் தொழிலதிபராகவும், அப்பா - அம்மா ஆவிகளை பார்த்து முதலில் பயந்து பின், பாசம் காட்டும் மகனாகவும் நந்தா, நச்சென்று நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட இதில் நடிப்பில் மிளிரும் அவருக்கு, இதன் பிறகாவது தொடர்ந்து வாயப்புகள் கிடைத்தால் சரி!
கதாநாயகி சாயாசிங். கதவை சாத்தினாலே பயந்து அலறிடும் பெயர் வாயில் நுழையாத வித்தியாசமான வியாதிக்கு சொந்தக்காரரான அம்மணியை ஆவிகள் நடமாட்டம் உள்ள வீட்டில் விட்டால் என்ன செய்வார்? அந்த ரகளையை அமர்க்களமாக ஆரம்பத்தில் செய்து, அதன் பின் தன் மாமனார்- மாமியாரின் ஆவிகள் நல்லது செய்யத்தான் வந்திருக்கின்றன என அடங்கிப் போகும் பாத்திரத்தில் பளிச்சிட்டிருக்கிறார்.
இவர்கள் இருவரைக் காட்டிலும் வாய்பேச முடியாத குழந்தையாக வரும் மாஸ்டர் ஆர்யன், தாத்தா - பாட்டியின் ஆவியுடன் மட்டுமல்ல... படம் பார்க்கும் ரசிகர்களுடனும் கண்களாலேயே பேசி கவர்கிறார்.
பாலா சார்... பாலா சார்... என கொடுத்த கடனுக்காக நந்தாவை அன்பொழுக பேசி, அமைதியான வார்த்தைகளாலேயே வறுத்தெடுக்கும் வில்லன் சசிகாந்தனாக வரும் மேகவர்ணபந்தும், துரோகி நண்பர் கிருஷ்ணாவும், நாகர்கோயில் தமிழில் புகுந்து விளையாடும் புரோக்கர் கணேஷ்பாபுவும், மயிலம்மா கலைராணியையும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு. இவர்கள் எல்லோரையும்விட அரவம், உருவமே இல்லாமல் கிராபிக்ஸ் உத்தியில் வந்துபோகும் அப்பா - அம்மா ஆவிகள் மேலும் பிரமாதம்.
மல்லிப்பூ வாசனை, வெள்ளை உடை, ஜில் ஜில் சலங்கை ஒலி என பயமுறுத்தும் பழைய ஆவிகளில் இருந்து மாறுபட்டு வந்திருக்கும் அனந்தபுரத்து வீடு பாசக்கார ஆவிகளின் வீடு.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment