Tuesday, September 14

நான் மகான் அல்ல விமர்சனம்


தனது முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு படத்தை முற்றிலும் கிராம சூழலில் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் சுசீந்திரன், தனது இரண்டாவது படத்தை முற்றிலும் சென்னை நகர பின்னணியில் எடுத்திருக்கிறார். ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் க்ளொட் நைஜ் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி வழங்கும் படம் நான் மகான் அல்ல.

வேலையில்லாத இளைஞன் ஜீவா (கார்த்தி), சிநேகிதியின் திருமணத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ப்ரியாவை (காஜல் அகர்வால்) சந்திக்கிறான். கண்டதும் காதல். பாசமுள்ள குடும்பத்தை சேர்ந்த கார்த்தியின் தந்தை ஜெயபிரகாஷ், ஒரு கால்டாக்ஸி டிரைவர். நகரில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணை தன் வண்டியில் ஏற்றிச் சென்றதை இவர் நினைவில் வைத்ததால் தொடரும் பிரச்னைகள். கொலைகார கும்பல் இவர் மீது காரை ஏற்றி கொ‌ல்ல முயற்சிக்கிறது. அதில் தப்பிப் பிழைக்கும் ‌ஜெயபிரகாஷை கத்தியால் குத்தி சாகடிக்கிறது அந்த கும்பல். தனக்கு தெரிந்த தாதா உதவியுடன் அவர்களை தேடும் கார்த்தி, இறுதியில் தனியே அவர்களை பழிவாங்குகிறார்.

மிகவும் இயல்பாக எந்த செயற்கைத்தனமும் இன்றி கார்த்தி, ஜீவாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். மயக்கும் புன்முறுவல், நினைத்ததை பேசும் சுபாவத்துடன் நம்மை மகிழ்விக்கிறார். இவரது திறமையில் நம்பிக்கை வைத்த இயக்குனரை பாராட்ட வேண்டும். பல காட்சியில் கார்த்தி நம்மை சிரிக்க வைக்கிறார். ப்ரியாவை தனக்கு போனில் பேச வைக்கும் தந்திரம், முதல் சந்திப்பிலேயே ப்ரியாவின் காதலை பெறுவது, கார்த்தியை காதல் விவகாரத்தில் மிரட்டி வைக்க ப்ரியா‌வின் தந்தை வரவழைக்கும் லோக்கல் தாதா குட்டி நடேசனிடம் இயல்பாக ‌பேசி, அவரையே காதலுக்கு சிபாரிசு செய்ய வைப்பது, தனியார் வங்கியின் கடன் வசூலிக்கும் ஏஜென்டாக சென்று, பல வாடிக்கையாளர்களிடம் சென்டிமெண்ட்டாக ஏமாறுவது, இரண்டாவது பாதியில் கொலைகார கும்பல் தேடுவது என எல்லா காட்சிகளிம் கார்த்தி இஸ் குட். தொடர்ந்து இதே ஸ்பீடில் சென்றால் மற்ற ஹீரோக்கள் உஷாராக இனி இருக்க வேண்டிவரும். வெல்டன் கார்த்தி.

அழகாக வந்து காதலிக்கிறார் காஜல்அகர்வால். அவர் படத்தின் இரண்டாம் பாதியில் காணாமல் போவது சற்று வருத்தமே.

கார்த்தியின் சிநேகிதி சுதாவாக நீலிமா, தந்தையாக ‌ஜெயபிரகாஷ், தனியார் வங்கி தோழராக சூரி, தாயாக லட்சுமி ராமகிருஷ்ணன் என அனைவரும் தங்கள் பாத்திரங்களை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். கார்த்தியும், காஜலும் அறிமுகமாகும் நிலவைப் பிடிச்சு என்ற பாடல், இறகைப் போல என்ற காதல் டூயல் பாடல் ஆகியவை யுவன் சங்கர் ராஜாவுக்கு பெயர் சேர்க்கும். கார்த்தியை வேலையை விட்டு தூக்கும் வங்கி அதிகாரியை கார்த்தியும், சூரியும் சமாளிக்கும் விதமும், மீண்டும் பணியில் சேருவதும் சுவாரசிய காட்‌சிகள்.

எந்த முன்விரோதமும் இன்றி, இரு பெண்களை கற்பழித்து கொன்று உடலை வெட்டி, பாகம் பாகமாக தூக்கி எறியும் கும்பல், போலீசில் அகப்பட்டுக் கொள்வோமோ என்று திட்டம் போட்டு கார்த்தியின் தந்தையை கொல்வது, இறுதியில் கார்த்தியையும் தீர்த்துக்கட்ட முயற்சிப்பது என எல்லாமே யதார்த்தமாக, விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்கள், இப்படி செய்வார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. நகர வாழ்க்கையின் யதார்த்த அவலமா இது? ஹீரோவின் ஹீரோயிஸம் காட்ட, தமிழக போலீசை இப்படி செயல்படாதவர்களாக ஆக்கியிருப்பதும் நெருடல்.

மதியின் காமிரா சிறப்பாக இயங்கியிருக்கிறது. பாஸ்கர் சக்தியின் வசனங்கள் பல இடங்களில் பளிச். சுசீந்திரன் - கார்த்தி கூட்டணி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது.

நான் மகான் அல்ல : முதல் பாலி மென்மையான கவிதை ; இரண்டாம் பாதி வன்முறை ‌ஓவர் டோஸ்!

-எஸ்.ரஜத்
-----------------------------------

குமுதம் விமர்சனம்

வெட்டி ஆபீஸரான கார்த்தி, பசங்களுடன் அரட்டை, காஜலுடன் காதல், அப்பா, அம்மாவிடம் பாக்கெட் மணி, காதலுக்காக ஒரு கலெக்ஷன் வேலை என்று இடைவேளை வரை ஜாலியாய் திரிகிறார்.

ஒரு காதல் ஜோடியின் கொலை சமாச்சாரத்தைப் பார்த்துவிடுகிறார் கார்த்தியின் தந்தை. கொலைகாரர்கள் அவரையும் போட்டுத்தள்ளிவிட, அத்தனை பேரையும் ""நான் மகான் அல்ல என்று சொல்லி, கார்த்தி வெட்டிச்சாய்ப்பதுதான் கதை.

சூர்யா போலவே கார்த்திக்குக்கும் அருமையான கேரக்டர்கள் கிடைக்கின்றன. மிடில் க்ளாஸ் இளைஞன் பாத்திரத்தை அற்புதமாகச் செய்திருக்கிறார். காஜல் அகர்வாலைக் கண்டுகொள்ளாமலே காதலிப்பதும், எப்போதும் எந்தக் குழந்தைகளைக் கண்டாலும் கொஞ்சுவதும், தந்தையின் கொலைக்குக் காரணமானவர்களைத் துரத்தித் துரத்திக் கொல்வதும் என்று இரண்டு விதமான கேரக்டர்களை அனாயசமாகச் செய்திருக்கிறார்.

கச்சிதமாக இருக்கிறார் காஜல் அகர்வால். நடிப்பதற்குப் பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் கார்த்தி மீதான அவரது ஈடுபாட்டில் ஒரு மெல்லிய கவிதை இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு ஆள் அப்ஸ்காண்ட் !

க்ளைமாக்ஸில் வில்லன்கள் அத்தனை பேரையும் கார்த்தி பலி போடும் காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மட்டுமல்ல, இசையமைப்பாளர் யுவன், கேமராமேன் மதி, ஆர்ட் டைரக்டர் ராஜீவன் என்று அத்தனை பேரும் ஒன்றாய்க் கூட்டணி அமைத்து மிரட்டியிருக்கிறார்கள்.

கார்த்தியை அடிக்க, கதாநாயகியின் தந்தை ஒரு பயங்கரமான வில்லனை செட் செய்ய, அந்த வில்லனுடன் கார்த்தி நட்பாகப் பழகி, அவன் ஆதரவைப் பெறும்போது தியேட்டரில் கைதட்டுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட வில்லன் யாரோ பொடிப்பசங்களால் சாகடிக்கப்படுவது வெறுப்படிக்கிறது.

இறகு, நிலா மாலை நேரம் என்று 3 பாடல்களில் களை கட்டியிருக்கிறார் யுவன்ஷங்கர்ராஜா. வசனம் உறுத்தாமல் இழையோடுகிறது. முந்தைய படமான "வெண்ணிலாக்கபடிக்குழுவில் கிராமத்தைக் கண்முன் கொண்டு வந்த சுசீந்தரன், இந்தப் படத்தில் நகரத்து வாசனையை நுகர வைக்கிறார்.

மொத்தத்தில் விவேகம் கம்மி, வேகம் ஜாஸ்தி. குமுதம ரேட்டிங் : நன்று

----------------------------
கல்கி விமர்சனம்

வெண்ணிலாக் கபடிக் குழு வெற்றியின் வீச்சுக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் படம். அப்பாவைக் கொன்றவனைப் பழிவாங்கும் கதையைச் சொல்லிய விதத்தில் சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார்.

எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ளும் இந்தக் கால இளைஞனாக கார்த்தி தன் பாத்திரத்தில் கனக் கச்சிதம். கல்யாண வீட்டில் காஜலிடம் காதலை ஓப்பன் பண்ணுவதில் ஆரம்பிக்கிற அவரது அதகளம் காஜல் அப்பாவிடமே போய், ""லவ் மேரேஜை அரேஞ்சுடு மேரேஜாக்கத்தான் உங்களிடம் பெண் கேட்க வந்தேன் அங்கிள் ! என்பது வரை நீள்கிறது. ஆனால், கார்த்தி அப்பாவின் விபத்துக்குப் பிறகு கதை தலைகீழாக மாறி டெரராகும்போது ஆவேச மகனாக அவதாரமெடுக்கிறார்.

காஜல் அகர்வால் விஷூவல் பொயட். பாட்டுக்கும் காதலுக்கும் மட்டுமே வந்து போவதுதான் பரிதாபம். தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ் அன்பான அப்பா பாத்திரத்தில் அடடா போட வைக்கிறார். கொலை செய்யும் டிரக் அடிக்ட் காலேஜ் மாணவர்களில் பெரிய கண் பையனும், பரட்டைத் தலைப் பையனும், பாடி லாங்குவேஜில் பளிச் பளிச். பாடல்களிலும், பின்னணியிலும் யுவனின் இருப்பு தெரிகிறது. பாஸ்கர் சக்தியின் வசனங்கள் மின்னல் கீற்றுகள்.

ஒளிப்பதிவாளர் மதி கேமரா காதலாகக் குளிர்கிறது. சண்டையில் கனலாகச் சுடுகிறது.

கலெக்ஷன் மேனேஜரிடம் பேசும் மேட்டர், கலெக்ஷனுக்காகப் போகும் இடத்தில் நடக்கும் காட்சிகள், அப்பா இறந்ததும் சாவு பாட்டு... போன்றவை படத்துக்கு மைனஸ்.
விறுவிறுப்புக்கு குறை வைக்காத திரைக்கதையில் ஜாலியான ஒரு படத்தைச் சட்டென ஆக்ஷனுக்கு மாற்றி அதில் ஆடியன்ஸை அழைத்து வந்து ஜெயித்து இருந்தாலும், வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரனிடம் மசாலாக் கதையை ரசிகர்கள் விரும்பவில்லை.

நான் மகான் அல்ல - மோசம் அல்ல.

No comments :

Post a Comment