Saturday, November 7

பேராண்மை விமர்சனம்



தினமலர் விமர்சனம்

ஜெயம் ரவி தனது ஆண்மையை அதுவும் ஐந்து புதுமுக நாயகிகளுடன் உலகிற்கு காட்டியிருக்கும் படம்தான் பேராண்மை! ஆண்மை. ஐந்து நாயகி என்றதும் ஆளுக்கு ஒரு டூயட்... அது பத்தாதற்கு அயிட்டம் டான்ஸ் எனும் போர்வையில் குத்தாட்ட நடிகைகளுடன் கும்மாளம் என ஏதோ வழக்கமான காதல் களியாட்ட மசாலா படம் எனும் முடிவிற்கு வந்து விடாதீர்கள். இது நிஜமான பேராண்மை! நியாயமான போர் ஆண்மை!!

கதைப்படி அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு கிராமமாக வசிக்கும் பழங்குடியின வகுப்பில் பிறந்து வளரும் துருவன் பல்கலையும் படித்து அதே பகுதியில் ஜூனியர் காட்டு இலாகா அதிகாரியாக பணிபுரிகிறார். அந்த ஊருக்கு என்.சி.சி., டிரைனிங்கிற்காக வரும் கல்லூரி மாணவிகளில் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த காட்டில் வசிப்பது, விலங்குகளை எதிர்த்து போரிடுவது உள்ளிட்ட இன்னும் பல பயிற்சிகளை அளிக்கும் பணி துருவனுக்கு வழங்கப்படுகிறது. அதை மிகவும் கண்டிப்பும், கட்டுப்பாடுமாக செய்யும் துருவனை ஆதிவாசி, காட்டுப்பய என கிண்டலடித்து துரத்தியடிக்கப் பார்க்கின்றனர் கல்லூரி மாணவியர். அந்த பட்டாளத்தின் கொட்டத்தை அடக்கி, அவர்களில் 5 பேரை காட்டுக்கு அழைத்துப் போகும் துருவன், இந்தியா அனுப்ப உள்ள ராக்‌கெட்டை தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஊடுருவியிருக்கும் 16 பேர் கொண்ட அயல்நாட்டு சதிகாரர்களை இந்த 5 மாணவிகள் உதவியு‌டன் தீர்த்து கட்டி, செய்யும் சாகசங்கள்தான் பேராண்மை.

துருவனாக ஹீரோ ஜெயம் ரவி உடம்பு இளைத்து, மிலிட்டரி கெட்-அப்பில் மிரட்டியிருக்கிறார். இதுநாள் வரை காதல் நாயகராக வந்த ஜெயம் ரவியிடம் இத்தனை ஆண்மையும், பேராண்மையும் வெளிப்படுவதில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனும் தெரிகிறார். சபாஷ்!!

ஐந்து புதுமுகங்களில் ஓரிருவர் தவிர மற்ற நாயகிகள் ஆங்காங்கே ஒருசில படங்களில் பார்த்த முகங்கள் என்றாலும் இதில் பாத்திரம் உணர்ந்து நடித்து பலே சொல்ல வைத்திருக்கிறார்கள்.

நாயகர், நாயகியர் தவிர ஹீரோவின் உயரதிகாரியாக வரும் பொன்வண்ணனும், என்.சி.சி. டீச்சராக வரும் ஊர்வசியும் பாத்திரத்திற்கேற்ற பலமான ‌தேர்வு. ஜெயம் ரவியை ஆதிவாசி, காட்டுப்பய என மாணவிகளுடன் சேர்ந்து அடிக்கடி அவரது ஜாதியை சொல்லி கீழ்த்தரமாக நடந்து கொண்டு, அவரது கிராமத்தையே காலி செய்யும் பொன்வண்ணன், ஜெயம் ரவியின் சாகசங்களையெல்லாம் தனதாக்கிக் கொண்டு ஜனாதிபதியிடம் க்ளைமாக்ஸில் விருது பெறுவது கீழ்த்தரமாக நடந்து கொள்பவர்களுக்கு சரியான சவுக்கடி. பொன்வண்ணன் மாதிரியே ஒவ்வொரு கேரக்டர் மூலமும் இயக்குனர் தனக்கு தெரிந்த முதலாளித்துவத்தை எதிக்கும் கம்யூனிசத்தையும், சித்தாந்தத்தையும் புகுத்தி புரட்சி செய்திருப்பது புதுமை.

கல்லூரி பியூனாக வந்து ஹீரோ ரவிக்கு சப்போர்ட்டாக ‌பேசி அடிக்கடி பொன்வன்னண் மற்றும் அவரது டீமிடம் அடியும் உதையும் வாங்கிக் கொள்ளும் வடிவேலும் அவரது காமெடியும் வழக்கம்போலவே செம கலாட்டா.

‌ஜெயம்ரவி, 5 மாணவி(நாயகி)கள்,‌ பொன்வண்ணன், ஊர்வசி, வடிவேலு மாதிரியே படத்தின் பின் பாதியில் தீவிரவாதிகளாக வரும் 16 வெள்ளைக்காரர்களும், அவர்களது நடிப்பும் பிரமாதம். கோலிவுட் பேராண்மையை இவர்கள் ஹாலிவுட் படமாக்கியிருப்பது ஹைலைட். இயக்குனர் ஜனநாதன் காட்சிக்கு காட்சி தனது பாத்திரங்கள் மூலமும். சமூக அவலங்களை வசனமாக்கி அதன் மூலம் தெரிவது போன்றே, இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் எஸ்.பி.சதீஷ்குமார், எடிட்டர் விஜயன் உள்ளிட்டவர்களும் படம் முழுக்க தங்களை பளிச்சென வெளிப்படுத்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் கரப்டட் என கூடாரத்தை தமிழ் சினிமாவில் காலி செய்து வரும் வேளையில் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கும் நடிகர் அருண்பாண்டியன் கூறியது போன்று, அவர்கள் தயாரித்த வில்லு, ஏகன் உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் முதல் வெற்றிப்படம் எனும் ‌பெருமையை பேராண்மை பெற்றிருக்கிறது என்றால் மிகையல்ல. அதற்கு முழுமுதல் காரணம் ஹீரோவும், இயக்குனருமே!

பின் பாதியில் இருக்கும் விறுவிறுப்பும் வேகமும், முன்பாதியிலும் இருந்திருந்தால் பேராண்மை இன்னும் பெரும் ஆண்மையாக இருந்திருக்கும். என்றாலும் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, படமாகியிருக்கும் பேராண்மை இயக்குனர் - நாயகன் - தயாரிப்பாளர் மூவரது துணிச்சல்களால் போற்றும் ஆண்மைதான்.

பேராண்மை : போற்றும் ஆண்மை!


--------------------------------

விகடன் விமர்சனம்


இந்தியாவின் அறிவியல் பாய்ச்சலுக்குத் தடைபோட முனையும் அந்நிய விஷமிகளின் கனவை, அடர்ந்த காட்டின் பெரும் உண்மை அறிந்தவன் முறியடிக்க நினைத்தால்... அது பேராண்மை!

ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் இந்த கதை தளம் தமிழுக்கு ரொம்பவே புதுசு. இந்தியா செலுத்தவிருக்கும் செயற்கைக்கோளை நவீன ஆயுதங்கள் உதவியோடு தகர்க்க காட்டுக்குள் ஊடுருவுகிறார்கள் 16 தீவிரவாதிகள். தனது சொல் பேச்சு கேட்கக்கூடாது என்ற வறட்டுப் பிடிவாதத்தோடு இருக்கும் ஐந்து பெண்களை அதே காட்டுக்குள் என்.சி.சி. பயிற்சிக்கு அழைத்து வருகிறார் காட்டிலாகா அதிகாரி ஜெயம் ரவி. இந்த 5 + 1 கூட்டணி அந்த 16 உறுப்பினர் அணியை தடுத்துத் தடை ஏற்படுத்துகிறதா? என்பது வந்தே மாதரம் கிளைமாக்ஸ்.

அடித்து வார்க்கப்பட்ட இரும்பு வார்ப்பாக துருவன் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் ஜெயம் ரவி. ஒவ்வொரு நொடியும் உஷாராக இருப்பது, கோவணம் கட்டி மாட்டுக்குப் பிரசவம் பார்ப்பது, அவமானங்களுக்கு மத்தியில் முளைத்துக் கிளம்புவது எனப் பழங்குடியினரின் இயல்புகளைப் பிரமாதமாகப் பிரதிபலிக்கிறார் ரவி. வெல்டன் துருவன்!

அந்த வெளிநாட்டு வில்லன் ரோலன்ட் கிக்கிங்கர் (டெர்மினேட்டர் அர்னால்டின் டூப்!) அசைந்து நடக்கும் ஆலமரமாக மிரட்டுகிறார். பாதி படம் வரை குறும்புச் சேட்டைகள் செய்து ரவியை இம்சிக்கிறார்கள் அந்த ஐந்து பெண்களும். ஆனால், நிலைமையின் விபரீதம் புரிந்து போராட துணியும் சமயம் அவர்களுக்குள் அபார மாற்றம். காமெடியை விடவும், இனி மேலாவது மத்தவங்களுக்காக விளைவிக்காம, உங்களுக்காக விதைங்கய்யா! என்னும் இடத்தில் பாசமாக ஈர்க்கிறார் வடிவேலு.

நாலு பாட்டு, மூணு ஃபைட், 15 பஞ்ச் டயலாக் போன்ற கோலிவுட்டின் ஃபார்முலா பொத்தல்களில் சிக்கிக் கொள்ளாமல், பச்சைப் பசேலெனத் தளம் பிடித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் இங்கும் லாஜிக் பொத்தல்கள் உண்டு. கையில் ஒரு மேப், சில ஆயுதங்களோடு ஒரு வெளிநாட்டுக் கும்பல் ஜஸ்ட் லைக் தட் வந்து அந்த ராக்கெட்டைக் குடை சாய்ப்பது, ஸ்டிரிங்கர் ஏவுகணையை என்.சி.சி. பெண்கள் ரொட்டிக் கணக்காக எடுத்துச் சுடுவது, எதிரிகளின் சாம ஏவுகணையை கம்ப்யூட்டரில் நாலு தட்டுத் தட்டித் திசை திருப்புவதெல்லாம்.... ஸாரி சார்!

வித்யாசாகரின் இசையில் பின்னணி இன்னும் கொஞ்சம் விறுவிறுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சதீஷ்குமாரின் கேமரா காட்டின் வனப்பையும் மலை இடுக்குகளில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களையும் கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமா தளத்தைப் புதிய திசையில் கிளை பரப்பச் செய்யும் முயற்சிதான் இது. ஆனால் இன்னும் ஆழமாக வைத்திருக்கலாம். ஆனாலும் பேராண்மைக்கு உண்டு கௌரவமான மரியாதை!

விகடன் மர்க் : 43/100

----------------------------------



குமுதம் விமர்சனம்


ஒரு சாதாரண ஆள் லொள்ளு பிடிச்ச டீமை வைத்துக் கொண்டு மெகா வில்லன்களை ஜெயிக்கிற கதை.

வனக் காவலர் பணியில் பல அவமானங்களுக்கிடையே சாதிக்கத் துவங்குகிற பழங்குடி இளைஞன் துருவனாக ஜெயம் ரவி. இமேஜை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு வெறும் கோவணம் சகிதம் எருமை மாட்டுக்குப் பிரசவம் பார்க்கிற ரவியின் துணிச்சலை கைகுலுக்கிப் பாராட்டலாம்.

ரவியிடம் என்.சி.சி. பயிற்சி எடுக்க வந்து அவருடன் மோதிக் கொண்டேயிருக்கிற அந்த ஐந்து கல்லூரி மாணவிகளும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஜெயம் ரவியை மட்டம் தட்டிக் கொண்டேயிருக்கும் மேலதிகாரி பொன்வண்ணன். அத்துமீறுகிற போலீசுடன் மோதும் ஆவேசத்தில் தலைகீழாக ஓடி வருகிற ஊனமுற்ற பழங்குடி இளைஞர் குமரவேலு, வெற்றுச் சவடால் எல்லாம் இல்லாமல் சதித் திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கிற வெளிநாட்டு கூலிப்படைத் தலைவன் கிஸ்ஸிங்கர் ஆகியோர் படத்துக்கு வலு சேர்க்கிற கேரக்டர்கள். புரொபஷனல் அழகோடு கொலைகளை செய்து விட்டு ரவி நடத்துகிற பாடம் புதுவகை ஹீரோயிசம்.

சற்று முன்னேறிய பழங்குடி மக்களைப் பாராட்டும் தொனியிலேயே அவர்களை தாழ்த்துகிற ஜாதி அரசியலை முதன் முதலாக தோலுரித்துக் காட்டி இருக்கிறார் டைரக்டர் ஜனநாதன்.

நான் இங்கிலீஷ் பேசுனா எங்க ஆளுங்களுக்குப் புரியாது. உங்களுக்குப் புடிக்காது என்று போகிற போக்கில் ஜெயரம் ரவி அடிக்கிற கமெண்ட் செவிட்டில் அறைகிற பொளேர் யதார்த்தம்.

சதீஷ்குமாரின் கேமரா காட்டுப் பயணத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் திகிலூட்டுகிறது.

ஆள் இல்லாத காட்டுக்குள் நடமாடுகிற வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவின் புது ராக்கெட் திட்டத்தை குலைக்கத்தான் வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் பெரிய லாஜிக் உரசல்.
நாலு பாட்டு, அஞ்சு ஃபைட்டு என்கிற கோலிவுட் விதிமுறைக்கு உட்படாமல், உலகப் பிரச்னை முதல் உள்ளூர்ப் பிரச்னை வரை பேசுகிற ஒரு படம் தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜனநாதன்.

பேராண்மை : பெருமிதம். குமுதம் ரேட்டிங் : ஓ.கே

------------------------------

கல்கி விமர்சனம்


கோலிவுட்டின் கொத்து புரோட்டா படங்களுக்கு மத்தியில் மண் வாசத்தோடும், மண் நேசத்தோடும் கிளைத்து வேறு பாதையில் பயணிக்கும் படம் பேராண்மை.

அந்நிய விஷமிகளின் ஆபத்தான திட்டங்களை அழித்தொழிக்கிறான் அடர்ந்த காட்டின் பேருண்மை அறிந்த மலைஜாதி துருவன் என்பதுதான் கதை. துருவன் ஜெயம் ரவி.
பழுக்கக் காய்ச்சிய இரும்பாக சூடும், சுவையுமான கதாபாத்திரம் ஜெயம் ரவிக்கு. ரவியும் ரஃப் அண்ட் டஃப்பாகவே செய்திருக்கிறார். கோவணம் கட்டிக் கொண்டு மாட்டுக்குப் பிரசவம் பார்ப்பதிலிருந்து அவமானங்களை செரித்துக் கொண்டு அடங்க மறுப்பது என... ஃப்ரேமுக்கு ப்ரேம் விறைப்பு கூடிக் கொண்டே போவது கதாபாத்திரத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

வெளிநாட்டு வில்லன் ரோலன்ட் கிக்சிங்கர். வெள்ளை மலையாக விதிர்விதிர்க்க வைக்கிறார். ஆனாலும் காடுகளில் அவரை அலைய விட்டிருப்பதில் கோலிவுட் அலப்பறை தெரிகிறது. கும்மாளமும் குறும்புமாகச் சுற்றித் திரியும் ஐந்து பெண்களும் (ஹீரோயின்ஸாம்) குறிப்பறிந்து சீரியஸ் ஆவதில் அப்ளாஸ் வாங்குகின்றனர். எனினும் என்.சி.சி. பெண்களை ராக்கெட் லாஞ்ச்சர் இயக்க வைத்திருப்பதில் இயக்குநர் நம் காதுக்கு மட்டுமல்ல; கண்களுக்கும் பூ சுற்றி விட்டிருக்கிறார். வடிவேலு இருக்கிறார். ஆனால் அலுப்பும் இல்லை...

வித்யசாகர் பின்னணி இசையில் பின்தங்கி பாடல்களில் இருக்கிறேன் ஸாரர் என்கிறார். காடுகளின் ரகசியத்தை கண்களுக்குள் நிறைக்கும் சதீஷ்குமாரின் கேமராவுக்கு திருஷ்டி சுத்திப் போடணும். வித்தியாசமான கதைகளோடு களத்துக்கு வந்திருக்கும் இயக்குநர் ஜனநாதனுக்கு ஜே!

பேராண்மை : உண்மையில் பேராண்மைதான்!

--நன்றி தினமலர்

No comments :

Post a Comment