Saturday, November 7

பொம்மாயி விமர்சனம்



தினமலர் விமர்சனம்

மாந்திரீகமும், சூனியமும் மூடநம்பிக்கை, அது நமக்கு நடக்காத ‌வரை... எனும் பயமுறுத்தும் உண்மையையும், தன் வினை தன்னை சுடும் எனும் பழகிய பழமொழியையும் சொல்லி வந்திருக்கும் மந்திர - தந்திர, மாயா ஜால திகில் படம்தான் பொம்மாயி.

பிரபல பில்டிங் கான்டிராக்டர் ராஜீவ்வாக ஹீரோ சுதிப். அவரது மனைவி ஆர்த்தியாக புதுமுகம் அம்ரிதா. இவர்களது ஆசை பெண் குழந்தை ரக்ஷா. இவர்களது கட்டுமான கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி பெரிய அளவில் ராஜீவ்வுக்கு து‌ரோகம் செய்துவிட, அவர்களை அசிங்கப்படுத்தி வேலையை விட்டு தூக்குகிறார் ஹீரோ. பலர் முன்னிலையில் அவமானப்பட்ட ஜோடி., ஹீரோவின் ஆசை மகளுக்கு பில்லி சூனியம் வைக்கிறார்கள். அதனால் அவரது ஆசைமகள் ரக்ஷாவிற்கு உயிர் போகும் ஆபத்தான நிலை. கடவுளை நம்ப மறுக்கும் ஹீரோ, மாந்திரீகத்தையும் நம்ப மறுத்து மருத்துவத்தை நம்புகிறார். மருத்துவமும் கைவிட, ஹீரோ கடவுளை நம்பினாரா? மகளை காப்பாற்றினாரா? நயவஞ்சக ஜோடியை நசுக்கினாரா, இல்லையா? என்பதற்கு முரட்டு தொனியில் விடை சொல்கிறது மீதி கதை!

காண்ட்ராக்டர் ராஜீவ்வாக தமிழுக்கு புதுமுக நாயகர் சுதீப் பாசமான தம்பியாக பளிச்சிடுகிறார். அம்மாவாக அம்ரிதாவும் குழந்தை பாசத்தால் நம்மையும் கலங்க வைக்கின்றார். ஆவி பிடித்த பெண்ணாகவும், பிடிக்காத பெண்ணாகவும் குழந்தை ரக்ஷாவின் நடிப்பும் திகில் மிரட்டல். பெண் மதன்பாபோ? என கேட்குமளவிற்கு சிரித்தபடியே வந்து ஹீரோவின் குடும்பத்தை சிதறடிக்கப் பார்க்கும் வில்லியும், அவரது கணவர் முட்டைமுழி, மொட்டைத்தலையரும் வித்தியாச விஸ்வரூபம். வேலைக்காரி, கார் டிரைவர் உள்ளிட்ட சஸ்பென்ஸ் பாத்திரங்களுக்காகவே இயக்குனர் ராம் கோபால் வர்மாவிற்கு சபாஷ் சொல்லலாம்.

சாதாரண சுவரைக்கூட திக், திக் திகிலாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனருக்கு, சவீதா சிங்கின் ஒளிப்பதிவும், அமர்மோஹ்லியின் இசையும், பப்பி துத்துலின் பின்னணி இசையும், சரிவிகிதத்தில் கைகொடுத்து சபாஷ் சொல்ல வைக்கின்றன. நம்ப முடியாத கதையை, தனது திரைக்கதை, இயக்கத்தின் மூலம் நம்ப வைத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.

பொம்மாயி - மாயாஜால மந்திரக்காரி!

No comments :

Post a Comment