Saturday, November 7

உன்­னைப்­போல் ­ஒ­ரு­வன் விமர்சனம்


தினமலர் விமர்சனம்


உலக நாடுகளையும், அதன் சட்ட திட்டங்களையும் தப்பிதப் படுத்திக் கொண்டு தீவிரவாதம் எனும் பெயரில் அப்பாவிகளை கொன்று குவிக்கும் தீவிரவாத குழுக்களுக்கு தன் பாணியில் (இந்தியில் எ வெட்னஸ்டே எனும் பெயரில் வெளிவந்த வெற்றிப்பட தழுவல்தான் இந்த படம் என்றாலும்..) தனி தொனியில் உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் செவிட்டில் அறைந்திருக்கிறார் கமல்!

நகரின் உயரமான கட்டிடத்தின் உச்சியில், அதுவும் முழுதாக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சியில்... சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி தன்னை கண்டுபிடித்து விடாதபடிக்கு போலீஸ் கமிஷனருக்கு போன் போடுகிறார் கமல். வெவ்வேறு குண்டு வைத்து பலரது உயிரை பறித்து சிறையில் இருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இன்று மாலை ஐந்தாறு இடங்களில் சிட்டி முழுதும் தான் வைத்துள்ள சக்தி வாய்ந்த பாம் வெடிக்கும். சாம்பிளுக்கு தற்போது சென்னை அண்ணா சாலை போலீஸ் ஸ்டேஷனில் தான் வைத்துள்ள ‌வெடிகுண்டு இன்னும் அரை மணி நேரத்தில் வெடிக்கும். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்... என போனை கட் செய்கிறார். அப்புறம்...? அப்புறமென்ன...? அடுத்தடுத்து வரும் கமலின் அனாமத்து கால்களை ஒருபக்கம் ட்ரேஸ் செய்யும் முயற்சியில் இறங்கும் மாநகர காவல், மற்றொரு பக்கம் அவரது கட்டளைக்கு கீழ்ப்படியவும் செய்கிறது. முதல்வர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்களின் உத்தரவுபடி போலீஸ் கமிஷனர் மோகன்லால் தனது இளம் போலீஸ் டீமின் உதவியுடன் நேரடியாக களத்தில் இறங்கி பரபரப்பை கூட்டுகிறார். கதாநாயகர் கமல் தீவிரவாதியா? முள்ளை முள்ளால் எடுக்க நினைக்கும் பொதுஜனவாதியா? என்பதற்கு விடை சொல்கிறது மீதிக் கதை!

கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் குடும்பஸ்தர் கமல், தனது புத்திசாலித்தனத்தால் ஒட்டு மொத்த போலீசையும் திணறடித்து, காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு ஏற்படுத்துகிறார். உட்கார்ந்த இடத்திலேயே போரடிக்காமல் இப்படி விறுவிறுப்பை ஏற்படுத்த கமலால் மட்டுமே முடியும். பேஷ்!

கமலை விட நடிக்கவும், டயலாக் பேசவும் நிறைய வாய்ப்பு போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு...! லால் மட்டு சளைத்தவரா என்ன? அவரும் அவர் பங்‌கை அசத்தலாக செய்திருப்பதோடு அத்தனை பரபரப்பிலும் டயலாக்கில் சின்ன சின்ன காமெடிகளை செய்து கலக்கியிருக்கிறார்.

தலைமை செயலாளர் லட்சுமி, இசட் பிரிவு பாதுகாப்பு கேட்கும் முன்னணி நடிகர் ஸ்ரீமன், மனைவிடம் மண்டை உடைபட்டு ஸ்டேஷன் வரும் எம்.எஸ்.பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி, துடிப்பான இளம் போலீஸ் அதிகாரிகளாக பிரேம்குமார், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டவர்களின் மிடுக்கு போன்றே... தொலைபேசியிலேயே கட்டளை பிறப்பிக்கும் முதல்வரின் குரலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல...!

ஒவ்வொரு பிரேமிலும் ஸ்ருதிஹாசனின் இசை, அவரை கமலின் வாரிசு என்பதை மெய்ப்பிக்க தவறவில்லை. படத்திற்கு பக்கபலமாக அமைந்து மிரட்டலாக இருக்கிறது இசை! தீவிரவாதிகளில் ஒருவனை இந்துவாகவும், போலீஸில் ஒருவரை இஸ்லாமியராகவும் காட்டி எந்த வம்பு, தும்பிலும் சிக்காமல் படம் எடுத்திருக்கும் இயக்குனர் சக்ரி டோலேட்டியின் இயக்கத்தில் வேகமும், விவேகமும் கலந்து கட்டி கலக்கியிருக்கிறது. சில காட்சிகளில் பயத்தில் நம் வயிறும், க்ளைமாக்ஸில் கண்களும் சேர்ந்து கலங்குவது இப்படத்தின் பெரும் பலம்!

கமலின் துணிச்சலான உன்னைப்போல் ஒருவன் : நம்மில் ஒருவன்! நம் 'உள்' ஒருவன்!! நாம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒருவன்!!!

-----------------



விகடன் விமர்சனம்


நகரின் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அவற்றை வெடிக்கச் செய்யாமல் இருக்க, போலீஸ் கமிஷனர் மோகன்லாலிடம் பேரம் பேசுகிறார் கமல். இந்தியாவின் முக்கியமான குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது பேரம். காவல்துறை தனது முழு பலத்தைப் பிரயோகித்தும் கமலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. டெக்னிக்கலாக அப்படியொரு தண்ணி காட்டுகிறார்! வேறு வழி இல்லாமல் நான்கு தீவிரவாதிகளையும் கமல் சொல்லும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அத்த இருபது நிமிடங்களுக்கு பளீர் சுளீர் திருப்பங்கள். ஹிந்தியில் வெளியான எ வெட்னெஸ்டே படத்தின் தமிழாக்கம். காலையில் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகள் வாடி வதங்குவதற்குள், மாநகரத்தைத் துளிகூட சலனப்படுத்தாமல் போலீஸுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாடம் எடுக்கிற ஜெட் வேகத் திரைக்கதைதான் மடத்தின் ரியல் ஹீரோ.

ஃபிரேமுக்கு, ஃபிரேம் தானே ஆக்கிரமிக்க நினைக்கிற ஹீரோக்களுக்கு மத்தியில் பிற நடிகர்களுக்கும் சமமான ஸ்கோப்... சொல்லப்போனால் தன்னைவிடக் கூதலாகவே வாய்ப்பு கொடுத்த கமலுக்கு அன்பான கைகுலுக்கல்கள்.

போலீஸ் கமிஷனராக மோகன்லால், பெர்ஃபெக்ட் ஃபிட். அசாத்தியமான சூழலில் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கண் முன் நிறுத்துகிறார். தலைமைச் செயலாளருடன் உரசிக் கொள்ளும்போதும் தனது ஜூனியர் அதிகாரிகளிடம் கனிவும் கண்டிப்புமாக வேலை வாங்கும்போதும்... வெல்டன் லால் (த.செ.வாக வரும் லட்சுமியின் க்ளோஸ் அப்களைத் தவிர்த்திருக்கலாம்)!

படம் முழுக்க ஒரே இடத்தில் இருந்தபடி ஹெட்போன் மைக்கில் பேசிக் கொள்வதுதான் கமலின் வேலை. ஆனால், அதிலும் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்களைக் காட்டி மறுபடி நிரூபிக்கிறார். சீனியருக்கு சின்சியர் ஜூனியர்களாக வரும் பரத் ரெட்டி, கணேஷ் வெங்கட்ராம் எல்லாமே கேரக்டருக்கு ஏற்ற மிடுக்கு! நியூஸ் ரிப்போர்ட்டராக வரும் அனுஜா ஐயர், மோகன்லாலிடம் கேன் ஐ ஸ்மோக் ஹியர்? எனும் இடத்தில் அட போட வைக்கிறார்.

ஒரு காமன் மேன் இத்தனை அசகாயக் காரியங்கள் மூலம் அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் எழுகிறதுதான். ஆனால், அதற்கான டெக்னிக்கல் சங்கதிகளைக் காட்டி நியாயப்படுத்தி விடுகிறார்கள். தேவை தில்லும் துணிச்சலும்தான்!

ஆனால் படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவை வேண்டி நிற்கிறபோது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? ரீமேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழில் டப்பிங் பண்ணுங்கப்பா!” என்ற கமென்ட்கள் காதில் விழுகின்றன.

கேமராமேன் மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு கிரிஸ்டல் கிளியர். அறிமுகம் என்பதாலேயே மனம் போன போக்கில் வாத்தியங்களை இசைக்கவிடாமல் கச்சிதமாக பின்னணி இசையை ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். ஹிந்தி ஒரிஜினலில் அந்தக் கதை நாயகனின் கோபத்துக்குக் காரணமான ரயில் குண்டு வெடிப்புகள், படத்தின் க்ளைமாக்ஸில் அவன் வார்த்தைகளில் வெடிப்பதற்கு வலுவான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இங்கே கமலின் கோபத்துக்குச் சொல்லப்படுவதோ, இங்குள்ள வெகுஜனத்தின் உணர்வுகளைத் துõண்டாத துõரத்து சமாசாரங்கள் பல பெஸ்ட் பேக்கரிகூட) எந்த மதத்திலிருந்து வந்தாலும் தீவிரவாதத்தைத் தண்டிப்பதில் தாமதம் கூடாது என்ற நியாயமான உண்மையைப் பளிச்சென்று கன்னத்தில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கலாம். அதையே, கன்னத்தில் தடவிச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். (நாலில் மூவர் முஸ்லிம், ஒரவர் ஹிந்து) திரைக்கதை வசனகர்த்தாவுக்கு இங்கே இருப்பது புரிகிறது. ஆனால் க்ளைமாக்ஸ் வேகத்தை அதுவும் சேர்த்தல்லவா நீர்க்கச் செய்கிறது!
இருந்தாலும் இவனைப் போல் நம்மில் எத்தனை பேர்? என்ற ஏக்கம் எழவே செய்கிறது!

விகடன் மார்க் : 42/100

-----------------------------


குமுதம் விமர்சனம்


பயங்கரவாதத்துக்கு பயங்கரவாதிகளின் மொழியிலேயே தீர்வு தேடிப் புறப்படுகிற ஒரு பொது ஜனம்தான் உன்னைப்போல் ஒருவன்.

சமூகக் கோபத்தை ஆழ்ந்த மவுனத்தில் ஒளித்து வைத்திருக்கிற தேவைப்படுகிறபோது, அதை அழுத்தமான கிண்டலாக வெளிப்படத்துகிற குடும்பஸ்தனாக கமல். முழுமை பெறாத கட்டட மாடியில் தனி ஆளாய் லேப்டாப், டெலெஸ்கோப், செல்போன்கள் சகிதம் உட்கார்ந்து கொண்டு காவல் துறையையே மிரட்டுவது திரையில் ஐம்பது வருடங்களைக் கடந்த கமலுக்குப் பொருத்தமான ஹீரோயிசம். அன்பர்களே செய்ய வேண்டிய சில இடங்களில் தீவிர இலக்கியப் பத்திரிகைகளுக்குத் தலையங்கம் எழுதுவது போல பேசவதை மட்டும் எப்போது தவிர்ப்பாரோ?

கமிஷனராக வருகிற மோகன்லால் புத்திசாலித்தனமான காட்சிகளாலும், முதிர்ச்சியான நடிப்பாலும் அழகாக கமலுக்கு ஈடுகொடுக்கிறார். தமிழக அரசியலில் அதி முக்கியமான ஒருவரின் தொனியில் ஒலிக்கிற முதல்வர் குரல், உள்துறைச் செயலாளராக மிடுக்காக வந்திருக்கும் லட்சுமியின் நாசூக்கான பல்டி ஆகியவை தேவையற்ற மெனக்கெடல்கள்.
காவல்துறையின் நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கமல் தனது மிஷனில் ஒரு தொலைக்காட்சி நிரூபரை இழுத்துப்போடுவது சைலன்ட் சாணக்கியத்தனம். லாடம் கட்டுவதற்கு பேர் போன போலீஸ் கணேஷூம், என்கவுண்டர் முடிந்தபிறகு டி.வி.,க்கு சம்பிரதாய இண்டர்வியூ தருகிற பரத் ரெட்டியும் விறுவிறுப்பு சேர்க்கிற கேரக்டர்கள். ஸ்ருதி ஹாசனின் பின்னணி இசை மிரட்டலுக்கு உதவுகிறது.

என்னதான் கமல் போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டினாலும் பாம்ப் ஸ்குவாடு குரூப்புக்கே சிகப்பு வயரை அத்துவிடுங்க, பச்சை வயரை கழற்றி விடுங்க என்று யோசனை சொல்வது டூமச். யாரோ ஒருவரிடமிருந்து வருகிற ஒற்றைத் தொலைபேசி மிரட்டலுக்கே கமிஷனர், முதல்வர் வரைக்கும் போவதையும் நம்ப முடியவில்லை. தீவிரவாதிகளைப் போட்டுத் தள்ளுவதற்கு கமல் கொடுக்கிற விளக்கத்தில் எக்கச்சக்க குழப்பம்.

வருடத்திற்கு இரு முறையாவது குண்டு வெடிப்புகளை அனுபவிக்கிற மும்பைவாசிகளின் கோபத்தை வெளிப்படுத்திய வெட்னஸ் டேயை நம்மூரில் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார் கமல். அந்தக் கோபத்தோடு முற்றிலும் வேறுபட்ட பிரச்னைகளுடன் இருக்கிற நம்மை இணைத்துக் கொள்ளாமல் வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.
உன்னைப் போல் ஒருவன் - மூளைக்காரன். ஆனால் மேதையல்ல...!

குமுதம் ரேட்டிங் : ஓ.கே.,!

------------------------------

கல்கி விமர்சனம்


* பயங்கரவாதத்துக்கு அதைக் காட்டிலும் மேலதிக பயங்கரவாதமே தீர்வு(?) என்று சொல்லும் கமலின் படம்தான் உன்னைப் போல் ஒருவன்.

* தனி ஒரு ஆள் கட்டி முடிக்கப்படாத கட்டடத்தின் மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டு போலீஸ் டிபார்ட்மென்ட்டையே ஆட்டிப் படைப்பது தமிழுக்குப் புதுசு என்றாலும் கொஞ்சம் கிக்லிபிக்லிதனமாக இருக்கிறது. எனினும், அந்த ஆள் கமல் என்பதால் அவர் கேரக்டரோடு மனம் ஒன்றிவிடுவதை மறுப்பதற்கில்லை.

* மிடுக்கான தோற்றத்தில் வெடுக்வெடுக்கெனப் பேசும் மோகன்லால், காக்கிச் சட்டையில் செம விறைப்பு எனினும் அவர் தலைமைச் செயலருக்குக் கட்டளை இடுவது போலப் பேசுவதும் அதற்கு அவர் தலையசைப்பதும் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.

* காவல் துறையின் நடவடிக்கையை உடனுக்குடன் அறிய ரிப்போர்ட்டரைக் களத்தில் இறக்கிவிட்டுக் காய் நகர்த்துவது திரைக்கதையில் கச்சிதம்.

* கணேஷ், பரத்ரெட்டி இருவரும் போலீஸ் உடையில் அநியாயத்துக்கு விறைப்பு. அப்பாஸுக்குப் பொறுப்பு.

* பாம் வைத்த கமலே, அதை எப்படிச் செயலிழக்க வைப்பது என பாம் ஸ்குவார்டுக்குப் பாடம் நடத்துவது கெக்கே மிக்கே.

* முக்கியமான ஸீனில் எல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசி கொஞ்சம் குழம்பித் தெளிய வைப்பது போலத் திணறடிப்பது கமலுக்கே உரிய கலை. இதிலும் தொடர்கிறது. உஸ் அப்பாடா!

* தீவிரவாதிகளைக் கொலை செய்வதற்காக கமல் சொல்லும் காரணங்களும் ஏற்புடையதாக இல்லை!

* மும்பை குண்டுவெடிப்புப் பிரச்னைகளோடு நம்மூர்ப் பிரச்னைகளை முடிச்சுப் போட்டு முடிந்தவரை ப்ரைன் வாஷ் பண்ணுகிறார் கமல்! ரசிகர்கள் ஜாக்கிரதை.

* தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத கதையில் நடித்த கமலுக்கு பூங்கொத்து.

No comments :

Post a Comment