Monday, February 8
நான் அவன் இல்லை 2 விமர்சனம்
தினமலர் விமர்சனம்
நான் அவன் இல்லை பாகம் 1-ல் உள்ளூரில் நான்கைந்து பெண்களை ஏமாற்றிய ஜீவன் இந்த பாகம் 2ல் வெளிநாட்டு வாழ் இந்திய பெண்களையும், வெள்ளைக்காரப் பெண் ஒருவரையும் இயற்கை எழில் கொஞ்சும் வெளிநாடுகளிலேயே ஏமாற்றுவதும், அவ்வாறு ஏமாற்றிய காசு, பணத்தில்வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர் சங்கீதாவின் குழந்தையை அவருடன் சேர்த்து வைப்பதும்தான் கதை. பழைய நான் அவன் இல்லை கதையேதான். அதை எவ்வளவு புதுசாகவும், பெரிசாகவும் சொல்ல முடியுமோ... அவ்வளவு பெரிசாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி சபாஷ் வாங்கி விடுகின்றனர்.
நாயகர் ஜீவன் நிஜமாகவே மச்சக்காரர்தான். லட்சுமிராய், ஸ்வேதா மேனன், ஸ்ருதி, ரக்ஷனா உள்ளிட்ட நான்கு நாயகிகளிடம் சும்மா புகுந்து விளையாடினாலும், சங்கீதாவின் குழந்தை பாசத்திற்கு விடை கண்டு நம்மையும், சல்கீதாவையும் நெகிழ வைக்கிறார். ஜீவனின் நடிப்பு - துடிப்பு எல்லாவற்றிலும் முந்தைய படங்களைக் காட்டிலும் நல்ல முன்னேற்றம்.
தாய் நாட்டு ஏக்கத்திலும், தாய் பாசத்திலும் சங்கீதா நம்மை நெகிழ வைக்கிறார். சபாஷ்! சரியான தேர்வு! உலகத்தில் உள்ள நாடுகளில் எல்லாம் இடம் வாங்கிப் போடத் துடிக்கும் லட்சுமி ராய், தனது அம்மாவிற்கு, அப்பா தலையாட்டி பொம்மையாக வாழ்வதுபோல தனக்கும் தகுந்த தலையாட்டி புருஷனைத் தேடி ஜீவனிடம் ஏமாறும் ஸ்ருதி, வைரக் கல்லுக்கு ஆசைப்பட்டு அலையும் ஸ்வேதா மேனன், ஜீவனால் சாமியாராகி விடும் வெள்ளைக்காரி ரக்ஷனா உள்ளிட்ட நான்கு நாயகியரும் நான்கு விதவிதமான பிரமாண்டம்... கவர்ச்சி பாண்டம். ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து அவர்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் செல்வா.
மாமா புஜ்ஜிபாபுவாக ஜீவனுக்கு உதவ ஆரம்பிக்கும் மயில்சாமி வரும் ஒவ்வொரு இடமும் செம காமடி சரவெடி!
இப்படத்திற்கு டி.இமானின் பாடல்கள் இசையும் சரி, பின்னணி இசையும் சரி... இளையராஜா மாதிரி இதம், பதம்! பட்டுக் கோட்டை பிரபாகரின் வசனம், சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு, பி.பாலமுருகனின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் செல்வாவின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு மணிமகுடம் வைத்தது போல் உள்ளன. சபாஷ்! குறிப்பாக ஒளிப்பதிபாளர் பி.பாலமுருகன் வெளிநாட்டு லொகேஷன்களின் நான்கு நாயகியரையும் அழகாக செதுக்கி செதுக்கி படம் பிடித்து காட்டியிருப்பது கண்களுக்கு குளிர்ச்சி.
மொத்தத்தில் நான் அவன் இல்லை இரண்டாம் பாகம், மூன்றாம் பாகத்தையும் பார்க்கும் எதிர்பார்ப்பை இப்பொழுதே தூண்டி விட்டுள்ள டிரண்ட்.
நான் அவன் இல்லை 2 பார்த்தால் நாம் நாமாக இல்லை!
------------------------------
குமுதம் விமர்சனம்
சொந்தமாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டுபவர்கள் ஒரு ரகம். ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்கி தங்கள் வசதிக்கேற்ப மாற்றம் செய்பவர்கள் இன்னொரு ரகம்.
இதில் இயக்குனர் செல்வா இரண்டாவது ரகம். ஜெமினிகணேசன் நடித்து ஏற்கனவே ஹிட் ஆன "நான் அவன் இல்லை'' என்ற படத்தை இப்போது இரண்டாவது முறையாக ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார் செல்வா.
முதல் ரீமிக்ஸூக்கும், இந்த ரீமிக்ஸூக்கும் உள்ள ஒரே ஒரு பெரிய வித்தியாசம். இது முழுக்க முழுக்க ஐரோப்பாவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பதுதான். பெண்களை கலாட்டா செய்யும் கேரக்டர் என்றால், ஜீவனுக்கு அல்வா சாப்பிடுவது போலாகிவிட்டது. லட்சுமிராய், ரக்ஷ்ணா, ஸ்வேதா மேனன், ஸ்ருதி என்று ஒவ்வொரு பெண்ணுக்கும் அல்வா கொடுக்கும் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார்.
ஏமாற்றுக் காட்சிகளில் ஜீவனுக்கு ஏற்ற பக்கவாத்தியம் மயில்சாமி. ஐந்து கதாநாயகிகள் இருந்தாலும் இலங்கைப் பெண்ணாக திக்கி பேசியபடி விந்தி, விந்தி நடக்கும் சங்கீதாதான் மனதில் அதிகம் இடம் பிடிக்கிறார். மகளைப் பிரிந்து கிடக்கும் ஏக்கம், இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யும் ஆர்வம் என்று எல்லா உணர்ச்சிகளையும் அவர் முகம் கண்ணாடிபோல பிரதிபலிக்கிறது. படத்தின் மற்றொரு விசேஷம் பாலமுருகனின் கேமரா. வெளிநாட்டு அழகுகளை கண்களுக்குள் திணிக்காமல் தேவையானவற்றை மட்டும் காட்டி கண்ணுக்கு குளிர்ச்சியளித்துள்ளார். டி.இமானின் இசையில் ஒரு சில பாடல்கள் மட்டும் கேட்கும் வகையில் உள்ளன.
இலங்கைப் பிரச்னை, குழந்தை சென்ட்டிமெண்ட், பாரின் லோகேஷன் என்று சில புதிய விஷயங்களை சேர்த்தாலும் பார்த்த படத்தையே மூன்றாவது முறை பார்க்கும் சலிப்பு பல இடங்களில் வருகிறது.
நான் அவன் இல்லை : அத்தனை சுவாரஸ்யம் இல்லை! குமுதம் ரேட்டிங் : சுமார்.
--------------------------------
கல்கி விமர்சனம்
முதல் படத்தில் உள்ள அதே கேரக்டர்கள்; ஹீரோயின்ஸ் மட்டும் புதுசு. மத்தபடி படம் பார்ப்பதற்கு பாகம் 1தான். வெவ்வேறு திசையில் மிதக்கும் 4 ஹீரோயின்களை ஏமாற்றும் அதே கதைதான். முதல் பாகத்தில் ஜீவன் வெளிநாட்டுக்கு சென்று அங்கு ஒரு பெண்ணை ஏமாத்த ஆரம்பிக்கிறதா காமிச்சிருப்பாங்க. அங்கிருந்து ஆரம்பிக்குது படம்.
பல கெட்டப்புகளில் வந்து ஏமாற்றும் ஜீவன், சங்கீதாவின் பின்னால் அலையும்போது சோகமான மிருதுவான மொட்டை கேரக்டரில் வருகிறார். இதில் சங்கீதாவின் கேரக்டர் பரவாயில்லை. காலை இழுத்து இழுத்து நடப்பது, திக்கித் திக்கிப் பேசுவது, ஒரு பெண் குழந்தைக்குத் தாய் என தமக்கு கொடுத்த கேரக்டரை இலகுவாக செய்துள்ளார். படத்தில் இவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக். அதில் இலங்கையைச் சேர்ந்தவராக வருகிறார். இவருக்கு உதவ எண்ணுகிறார் ஜீவன்.
முதல் பாகத்தில் போலீஸாக வரும் ராஜ்கபூர். அவரின் தங்கைதான் லக்ஷ்மி ராய். அண்ணனிடம் தன்னை ஏமாற்றியவனைப் பற்றிக் கூற, அவரும் போட்டோவை கேட்க, அதைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. யாரோட கேஸை இந்தியாவில் கண்டுபிடித்தாரோ அவனே தனது தங்கையின் வாழ்விலும் விளையாடியதை எண்ணி அதிர்ச்சி ஆகிறார். உடனே, முதல் பாகத்தில் ஏமாற்றிய ஜீவனின் கெட்டப்களை நமக்கு நினைவு கூர்கிறார் இயக்குனர்.
மாடர்ன் பெண்ணாக வருபவள், திருமணமான இந்தியப் பணக்காரர்களை தன் வலையில் விழவைத்து பின் அவர்களின் மனைவிக்கு ஃபோன் செய்து மாட்டி விட்டுப் பணம் பறிப்பது ஒரு ரகம்.
லோக்கல் தாதாவான பெண்ணிடம் தாம்தான் கவிஞர் வாலி என்று அவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது, அதில் உருகி எல்லா பணத்தையும் அவனிடம் கொடுத்து விட்டு அவர் சாமியாராக மாறுவது என்பது கொஞ்சம் டூ மச்!
சங்கீதா தவிர, நான்கு நாயகிகளும் ஆடை குறைப்பில் அதிக கவனம் காட்டியுள்ளார்கள். இடையிடையே வரும் சங்கீதாவின் கேரக்டர் பெரிதாக இல்லாவிட்டாலும் சற்று ஆறுதல். ஜீவன் நடிப்பும், சற்று மந்தம்தான். வழக்கம்போல் ஆர்ப்பாட்டமில்லாமல் கேஷூவல் நடிப்பு. இளமை கேரக்டருக்கு தகுந்த வேகம் குறைவு.
க்ளைமாக்ஸ் காட்சியில் போப் போல உடை அணிந்து ஜீவன் பேசுவது காமெடி!
படத்தில் இடம்பெறும் ஸ்விட்சர்லாந்து காட்சிகளை இன்னும் செதுக்கிக் காட்டியிருக்கலாம். மரியா பாடல் பரவாயில்லை.
நான் அவன் இல்லை 2 : ரசனை சற்று குறைவான விருந்து!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment