Monday, February 8

ரேனிகுண்டா விமர்சனம்


தினமலர் விமர்சனம்

தடி எடுத்தவன் அதில் அடி பட்டுத்தான் சாவான்., கத்தி எடுத்தவன் குத்துப் பட்டுத்தான் சாவான்... எனும் பழமொழிகளை மெய்ப்பிக்கும்வ விதமாக வித்தியாசமும், விறுவிறுப்பும் கலந்து கட்டி வெளிவந்திருக்கும் படம்தான் ரேனிகுண்டா.

கதைப்படி, படிப்பு வரவில்லை என்றால் பரவாயில்லை... நம்ம பரம்பரையில் அவன் பத்தாவது வரைக்கும் பெயிலாகாமல் படிக்கிறானே என கொஞ்சும் தந்தையையும், அரை மணி நேரம் காணவில்லை எனில், மகனை அடுப்பங்கரையில் தொடங்கி அடுத்தடுத்த தெருக்கள் வரை தேடி அலையும் பாசமிகு தா‌யையும் தன் கண் எதிரே கொன்றவனை பழி்க்குப் பழி வாங்க கத்தியை தூக்குகிறார் ஹீரோ. முதல் அட்டம்ப்ட் பெயில். அதனால், ஜெயில்... என்றாலும், ஜெயிலில் தன்னை காவலர்களின் அடாவடி கெடுபிடிகளில் இருந்து காபந்து செய்யும் தன் வயதை ஒத்த நான்கு இளைஞர்களுடன் (ஒவ்வொருத்தருக்கும் இரண்டு கொலை கேஸ், நான்கு கொலை முயற்சி கேஸ்கள், ஐந்தாறு கொள்ளை வழக்குள் உண்டென்பது பின்குறிப்பு) சேர்ந்து கொண்டு ஜெயிலில் இருந்து தப்பித்து, தன் தந்தையையும், தாயையும் கார் ஏற்றி கொன்ற லோக்கல் தாதாவை நடுரோட்டில் வைத்து தீர்த்துக் கட்டுகிறார் ஹீரோ. அப்புறம்..? அப்புறமென்ன... அந்த நால்வர் கூட்டணியுடன் ஐவராக மும்பைக்கு போய் பெரிய தாதாவாக கிளம்பும் ஹீரோ, ரெயிலில் டி.டி.ஆருடன் ஏற்படும் பிரச்னையால் வழியில் ஆந்திரா ரேனிகுண்டாவிலேயே இறங்கி ஓட வேண்டிய சூழல். அங்கு ஐவர் கோஷ்டி தங்களது சிறைத் தோழன் பங்கரை எதிர்பாராமல் சந்திக்க, மும்பை பிளான் மூட்டை கட்டப்பட்டு ரேனிகுண்டாவிலேயே பங்கர் கை காட்டும் பார்ட்டிகளை பஞ்சர் பண்ணி, துட்டும், சுகமும் பார்க்கின்றனர்.

இந்நிலையில் ஹீரோ சக்தியின் கண்ணில் படுகிறார் ஹீரோயின் சனுஷா. வாய் பேச முடியாதவள் என்றாலும் கண்ணால் பேசுகிறார்...! அதுவும் காதல் மொழி பேசுகிறாள்...! இவர்களது காதல் அந்த கோஷ்டிக்குள் பூசலை கிளப்பும் என்று பார்த்தால், அட... அவர்களே பங்கர் சொல்லும் அடுத்த அசைன்மெண்ட்டை முடித்ததும் சக்திக்கும், சனுஷாவிற்கும் திருமணம் செய்து வைக்க சம்மதம் சொல்கின்றனர். சரி... சனுஷாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என எண்ணினால்... ஹீரோ சக்தியின் ஒழுக்கத்தை அவர்கள் ரேனிகுண்டா வந்த முதல் நாளிலேயே அறிந்து கொள்ளும் சனுஷாவின் அக்கா, டபுள் ஓ.கே., சொல்லி விடுகிறார். இப்படி இரு தரப்பும் சம்மதம் தர., விதி தரப்பு வேலை செய்வதுதான் மீதிக் கதையும், இறுதி இரண்டு ரீல் படமும்!

ஹீரோ சக்தியாக புதுமுகம் ஜானி... நடிப்பு வாவ்! அமைதியாகவே முகத்தை வைத்துக் கொண்டு, காதலையும், ஆக்ரோஷத்தையும் காட்டி அசத்தியிருக்கிறார். (நடிகர் அஜித்தின் நண்பரும் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் வாரிசாம் ஜானி). பேஷ். பேஷ். சக்தி மாதிரியே அவரது கொலைகார நண்பர்கள் பாண்டு, டப்பா, மாரி, மைக்கேல் நால்வரும் நச்சென்று நடித்திருக்கின்றனர்.

கண்களாலேயே காதல் பேசும் ஹீரோயின் சனுஷாவும், உடம்பால் பேசும் அவரது அக்கா கேரக்டர் சஞ்சனா சிங்கும் பிரமாதம். கண்ணீரும், கம்பலையுமாக இவர்களது பின்னணி கடையோடு ஒட்டி, உறவாடும் போது காண்போர் கண்களிலும் நீர். சிறைக் கொடுமைகளையும், இளம் குற்றவாளிகள் உருவாகும் விதத்தையும் விபச்சாரிகளின் குடும்ப பின்னணியையும், அவர்களது மனநிலையையும் இதைவிட அழகாக வேறு யாராலும் படம் பிடிக்க முடியாது என்றே இயக்குனர் பன்னீர் செல்வத்தை பாராட்டலாம். லிங்குசாமியின் சீடராம். குருவையே மிஞ்சினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

புதியவர்கள் கணேஷ் ராகவேந்திராவின் மிரட்டும் இசையும், சக்தியின் ஒளிப்பதிவும் நம் கண்முன் ஒவ்வொரு கொடூரமும் அரங்கேறுவது போல் காட்டி பயமுறுத்துகின்றன. ஆண்டனியின் படத்தொகுப்பும் படத்திற்கு பெரும் பலம்.

ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் ரிஷா, மெயின் வில்லன் சர்தாராக நடித்திருக்கும் கேப்டன் கணேஷ், கொலை புரோக்‌கர் பங்கராக நடித்திருக்கும் ஸ்டில்ஸ் விஜய் (இவர் பிரபல சினிமா புகைப்பட கலைஞர்),‌ கொடூர இன்‌‌ஸ்பெக்டர் கொடுக்கு ராதாகிருஷ்ணனாக நடித்திருக்கும் நந்தா சரவணன், மனைவி சஞ்சனா சிங்கையே தொழிலுக்கு அழைத்து செல்லும் பொம்‌பளை புரோக்கராக வரும் அந்த ஆட்‌டோ டிரைவர், ஹீரோவின் அப்பா சேதுபதியாக வரும் இளங்கோ, தாய் தெய்வானையாக வரும் சுஜாதா உள்ளிட்ட எல்லோரும், ஒருசில பிரேம்களில் வந்தாலும் சரி... பல பிரேம்களில் வந்தாலும் சரி... உயிரைக் கொடுத்து நடித்து படத்தை தூக்கி நிறுத்துகின்றனர்.

பங்கர் சொன்ன ஒரு பார்ட்டியை பொட்டல் வெளியில் தீர்த்து கட்டி விட்டு, இவர்களை நம்பாத பங்கரிடம் அவரை எப்படி தீர்த்துக் கட்டி‌னோம் என பங்கரை சாம்பிளாக வைத்து இந்த ஐவர் கூட்டணி செய்து காட்டும் ஒரு காட்சி போதும் இயக்குனரின் திறமையை எடுத்துரைக்க. நல்லவேளை... இது மாதிரி இளம் குண்டர்களுக்கு கூட இளம் வயதிலேயே சமாதி எனும் நியதியை இறுதியில் சொல்லி நம்மூர் இளைஞர்களை சமூக அக்கறையுடன் காப்பாற்றி சபாஷ் வாங்கி விடுகிறார் இயக்குனர். இல்லை என்றால் இந்த படம் பார்த்து எத்தனை பள்ளி மாணவர்கள் படுபாதக செயல்களில் இறங்குவார்களோ தெரியாது! அத்தனை கொடூரம்... ஆனால் அத்தனையும் நிஜம் என்பது நிதர்சனம்.

மொத்தத்தில் சில சினிமாத்தனங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் நல்ல நடிப்பு, நல்ல நடிகர்கள் தேர்வு, நல்ல இசை, நல்ல ஒளிப்பதிவு, நல்ல படத்தொகுப்பு, நல்ல கதை, திரைக்கதை, இயக்ககம் என அத்தனையிலும் முன்னணியில் இருக்கும் ரேனிகுண்டா, இளம் குண்டர்களின் கதையை சொன்னாலும், எடுத்துக் கொண்ட களத்தில் தங்க வைர குண்டானாக ஜொலித்திருக்கிறது.

குண்டர் சட்டத்தில் போட வேண்டிய இளம் குண்டர்களின் கதை சொன்னாலும் ரேனிகுண்டா : தக தக தங்க குண்டான் போல மின்னுகிறது.

---------------------------------

விகடன் விமர்சனம்

சூழலால் குற்றவாளியாகும் ஓர் இளைஞன் அடைக்கலமாகும் இடமே ரேனிகுண்டா!

பெற்றோரின் கொலைக்குப் பழிவாங்க கிளம்பி தோற்று சிறை செல்கிறார் ஜானி (அறிமுகம்). அங்கே அறிமுகமாகிறார்கள் தீப்பெட்டி கணேசன், நிசாந்த், சந்தீப், தமிழ் (அறிமுகங்கள்). கூலிப்படை குரூப்பான அவர்களுடன் சிறையில் இருந்து தப்பிக்கிறார் ஜானி. அங்கே துவங்குகிறது ரண கள நட்பு. மும்பை செல்லும் வழியில் மேனிகுண்டாவில் இறங்குகிறார்கள். காதலும் மோதலுமாக அங்கே பல சம்பவங்கள். ஜானியை அவர் காதலி சனுஜாவோடு (அறிமுகம்) அமைதியான வாழ்க்கைகக்கு அனுப்ப திட்டம் போடுகிறார்கள் நண்பர்கள். அவர்களின் கனவு நிறைவேறியதா? என்பது க்ளைமாக்ஸ்!

இளம் குற்றவாளிகளின் இலக்கற்ற வாழ்க்கையையும், முரட்டுத் துணிச்சலையும் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பன்னீர்செல்வம். ஒவ்வொரு கேரக்டரையும் தனித்தன்மையோடு உருவாக்கி இருப்பதில் இயக்குநரின் திறமை பளிச்.

பரிதாபக் கதாபாத்திரத்தில் ஜானி. படம் முழுக்க உம்மென்றே இருக்கிறார். வில்லனின் குரல்வளையை வெறியோடு கடிக்கப் பாயும்போது மட்டும் அத்தனை சக்தி காட்டுகிறார். படத்தின் ரியல் ஹீரோக்கள் திப்பெட்டி கணேசனும், நிசாந்தும்தான். சாந்தமான குழந்தைத்தனம், வேகமான விடலைப் பருவம் என ரெண்டுங்கெட்டான் கேரக்டரில் அசத்துகிறார் நிசாந்த். ஆங்காங்கே தேங்கும் படக்கதையை கலகலவென நகர்த்துவது தீப்பெட்டி கணேசன். உறுமல் உதாரும், அசால்ட் கமென்ட்களுமாகப் படத்தின் காமெடி ரவுடி. அதிரடியான படத்தில் அமைதியாக ஈர்ப்பது பாலியல் தொழிலாளியாக வரும் சஞ்சனாசில். பாலியல் தொழிலை இயல்பாக ஏற்றுக் கொண்ட குடும்பப் பெண்ணாக வரும் கேரக்டரில் கன கச்சிதம். குழந்தைத்தனம் வழியும் கதாநாயகி சனுஷா, படம் வரைந்து அதைக் குச்சியால் அடித்துக் கோபம் தணிக்கும் போதும், ஜானியின் நண்பர்களை ஜானியாக டீல் பண்ணும் போதும் வசீகரிக்கிறார்.

படம் முழுக்கத் தெறிக்கும் ரத்தமும், வன்முறையும் யப்போவ். ஐந்து பேரும் எந்த சிரமும் இல்லாமல் ஜெயிலில் இருந்து தப்பிப்பது, படா படா ஆட்களைப் போட்டுத் தள்ளுவது என்று தனிக்காட்டு ராஜாவாக திரிகிறார்கள். சொல்லி வைத்த மாதிரி எல்லா தாதாக்களும் இவர்களிடம் தனியாகவே வந்து சிக்கிக் கொள்கிறார்கள். திரைக்கதைக்கு வசதியாக க்ளைமாக்ஸ் வரை போலீஸூம், பாதிக்கப்பட்ட ரவுடிகளும் இவர்களை தேடாமல் தேமே என்று இருக்கிறார்கள்.

அடசல் நெரிசலான ஆந்திர டைப் வீடுகளின் சந்து பொந்துகளில் ஏரியா பழகிய ஒரு குற்றவாளியின் வாகனத்தோடு பயணிக்கிறது அறிமுக ஒளிப்பதிவாளர் சக்தியின் கேமரா. அதிர வைக்கும் ராஜசேகரின் ஆக்ஷனும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சிங்கம் புலியின் டயலாக்குடன், சஞ்சய் கரணின் ஆர்ட் டைரக்ஷனும் படத்துக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி. திகுதிகுவென தீப்பிடிக்கும் கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசை த்ரில் கூட்டுகிறது

மொத்தத்தில் ரேனிகுண்டா : பயங்கர காரமான ஆந்திர ஆக்ஷன் ஊறுகாய்!
விகடன் மார்க் : 43/100.

-----------------------------------

குமுதம் விமர்சனம்

"ஜானி''ன்னு ஒரு பையன். அவனோட அப்பா நல்ல மாதிரியான அப்பா. அவரு ஜானியை இன்ஜினியரிங் படிக்க வைக்க ஆசைப்படுறாரு. ஜானியும், நம்மள மாதிரியே ஜாலியாதான் இருந்தான்... ஆனா... ஆனா... ஒருநாள் திடீர்னு அவனோட அப்பா - அம்மாவை கொன்னுடுறாங்க. ஸோ, ஜானியோட வாழ்க்கையில் புயல் வீசுது...! பூகம்பம் வெடிக்குது...! வெறியோட கிளம்புறான்.

நல்ல வேளை, அந்த ஜானி பையனை கொலைகாரனா மாத்தாம, டைரக்ஷனை வேறு பக்கமா திருப்பி விட்டிருக்கிறார் டைரக்டர் பன்னீர் செல்வம்.

போலீஸிடம் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குள் அம்மணமாக ஜானி ஒடுங்கி நடுங்கும்போது, "இதெல்லாம் நமக்கு அசால்ட்டு மச்சி...'' என அந்த நாலு சீனியர்கள் ஆஜராகுற சீன் இருக்கே...! இப்பதான்யா படமே பட்டையை கிளப்புது.

"எங்கே மேல கைய வச்சுருவியா? தேடிட்டு வந்து ஒருநாள் சங்க அறுப்போம்ல...'' என நேரடியாகவே போலீஸை மிரட்டும் நிஷாந்த் அண்ட் கோவின் அலப்பரை ரசிக்க வைக்கிறது. ஆனா, ஏதோ சொந்த வீட்டு காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதிச்சா மாதிரி ஜெயில்ல இருந்து செம கூலாக இந்த பயபுள்ளைங்கலாம் தப்பிப்பது காதுல பூ.

"ரேனிகுண்டா''ன்னு பேர் வச்சுட்டோம். "ஏதாச்சும் சொல்லியாகணுமே...'' என செயற்கையாக யோசிக்காமல், ரயிலில் நடக்கும் திடீர் சச்சரவினால் யதேச்சையாக அந்த கூலிப்படை ரேனிகுண்டாவில் இறங்குவதும், அதையே கதைக் களமாக்கியிருப்பதும் இயக்குனரின் புத்திசாலித்தனம்.

ஆனாலும், முட்டு சந்துக்குள்ள திரும்பித் திரும்பி பார்த்துகிட்டே "லவ்'' பண்ற ஃபார்முலாவை இன்னும் விடவே மாட்டேன்ங்றீங்களேப்பா...! குழந்தைத்தனம் கலந்த தேவதையாக சனுஷா. பிடிக்காத நபர்களை சுவரில் ஓவியமா வரைஞ்சு குச்சியால அவர் மொத்தும்போது ஊமைப்பெண்ணின் வலிகளை ஆழமா புரிய வச்சுடறார். எதை வச்சு ஜானியை இந்தப் பொண்ணு லவ் பண்ணுதுங்கறதுக்கு படத்துல எந்த விளக்கமும் இல்லை. மத்தபடி, அந்த அஞ்சு பசங்களுமே படத்துலேயும், நடிப்பிலும் ""உயிரையே'' கொடுத்திருக்காங்கப்பா.

குறிப்பா அந்த "டப்பா'' கேரக்டர். தீப்பெட்டி கணேசனாம்...! அருமையான அறிமுகம்.. "ந்தாரு... மும்பை போனா நமக்கெல்லாம் பெரிய மரியாதையாம்ல...'' என கனவு காண்பதும்... "உன் ஆளு அந்த வெள்ளச் சட்ட இல்லேல்ல...? என காதலிக்கு "முன்பதிவு'' செய்வதுமாக வெடிச்சிரிப்பை வரவழைக்கிறார்.

இதுதவிர... விபச்சாரப் பெண், ஆட்டோ டிரைவராக வரும் அவளின் சோப்ளாங்கி கணவன் என சோக எபிசோடு காட்டாமல் கதைக்குத் தகுந்த மாதிரி அவர்களை வேலை வாங்கியிருப்பது மிக அருமை.

ஷக்தியின் ஒளிப்பதிவும், கணேஷ் ராகவேந்திராவின் இசையும் படத்தின் ஆக்ரோஷத்தையும் மீறி நம்மை ரசிக்க செய்கின்றன.

ரேணிகுண்டா : அதிரடி குண்டா(ஸ்). குமுதம் ரேட்டிங் : ஓ.கே.

No comments :

Post a Comment