Monday, February 8

சா.. பூ.. த்ரீ.. விமர்சனம்



தினமலர் விமர்சனம்

இரண்டு மூன்று ஐ.டி., இளைஞர்களுக்கும், அவர்களை எல்லாம் 'அந்த' விஷயத்தில் மிஞ்சிடும் ஒரு மாணவனும் இவர்கள் சந்திக்கும் பெண்களும்தான் சா... பூ... த்ரீ..!

கம்ப்யூட்டர் கம்பெனி யுவன், யுவதிகளின் காதல் லீலைகளையும், காம சேட்டைகளையும் சொல்கிறேன் பேர்வழி என இரட்டை அர்த்த வசனங்களையும், காட்சிகளையும் திணித்து கல்லா கட்ட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். கதை என்று ஒன்றும் பெரிதாக கிடையாது. ஆனால் காட்சிகள் உம் (பல இடங்களில்) உவ்வே (சில இடங்களில்)! மொத்தத்தில் ஏ சர்டிபிகேட் வாங்கிய சி கிளாஸ் படம்!

பால் எனும் பெயரில் பள்ளி(யறை) மாணவராக வலம் வரும் அர்ஷத்கான் ஆகட்டும், பெண் பார்த்தே வீட்டில் காதலை சொல்லி களேபரம் ஏற்படுத்து பாலா எனும் அக்ஷய் ஆகட்டும், மனைவிக்கே அவர் எனத் தெரியாமல் வேறு பெயரில் மெசேஜ் தூது விடும் கீர்த்தி எனும் பிரஜின் ஆகட்டும்... மூன்று நாயகர்களுமே தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். சபாஷ்!

இந்த மூவர் மாதிரியே மிதுனா, சாரா, அக்ஷா, உஜ்ஜயினி, பிங்கி, ரிஷ்வந்த் ஆகிய 6 நாயகியரும் அவரவர் பங்கை அழகாக செய்திருக்கின்றனர். அதிலும் பால் துரத்தி துரத்தி காதலிக்கும்அஞ்சு ஆண்ட்டி கேரக்டர் பிரமாதம்.

அப்பாஸ் ரபியின் இசையைக் காட்டிலும் பின்னணி இசை நச். பி.எல்.சஞ்சய்யின் ஒளிப்பதிவும், எல்.வி.கே. தாஸின் படத்தொகுப்பும் அர்ஷத்கானின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்திற்கு பக்கபலம்! பால் எனும் பாத்திரத்தில் பள்ளி(யறை) மாணவராக படம் முழுக்க பவனி வந்தாரே... அந்த அர்ஷத்கான்தான் படத்தின் இயக்குனரும் கூட! அதுதான் படம் முழுக்க ஒரே (பால்) செக்ஸ் வாடை போலும்!

சா.. பூ... த்ரீ...: புஸ்வானமும் இல்லை! பூத்ரியும் இல்லை!! கா'மத்தாப்பூ!!!

No comments :

Post a Comment