Monday, February 8
குட்டி விமர்சனம்
தினமலர் விமர்சனம்
வளைந்து நெளிந்து கொடுப்பது மட்டும் அல்ல... வலிந்து நலிந்து பெறுவதும்தான் காதல்! எனும் புதிய தத்துவம் சொல்லி வந்திருக்கும் படம்தான் குட்டி. தெலுங்கில் ஆர்யா எனும் பெயரில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் தமிழ் ரீ-மேக் என்றாலும் குட்டியில் தமிழுக்காக நிறையவே மாற்றங்கள் செய்திருக்கின்றனர். அந்த மாற்றங்கள் சில, பல இடங்களில் குட்டிக்கு ஏற்றம்! சில இடங்களில் ஏமாற்றம்!
கதைப்படி தற்கொலை நிர்பந்தத்தால் ஆளுங்கட்சி எம்.பி.,யின் மகன் அர்ஜூனை காதலிக்க தொடங்கும் ஸ்ரேயாவை குட்டி தனுஷூம் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஸ்ரீநாத், மொட்டைத்தலை தேவிசரண், வின்சென்ட் அசோகன் என தன் மற்றும் தனது தந்தையின் படைபலம் காட்டி, குட்டியை விரட்டி அடிக்கும் அர்ஜூனையும், அவரது சகாக்களையும் தனது புத்திசாலித்தனமான பேச்சு சாதுர்யத்தால் சரிகட்டும் தனுஷ், பின்பாதியில் ஸ்ரேயா - அர்ஜூன் காதலுக்கு உதவி செய்வதுபோல் செய்து ஸ்ரேயாவின் மனதை கொள்ளை கொள்வதே குட்டி படத்தின் மொத்த கதையும்!
ஒன் சைடு லவ்வர் குட்டியாக தனுஷ், அடிக்கும் லூட்டி வழக்கம் போலவே செம ப்யூட்டி! வில்லன் அர்ஜூனை என்மேல கைய வச்ச..., நான் இந்த காலேஜை விட்டு போயிடுவேன்... உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்... என்று சொல்லி அடிக்கடி கலாய்ப்பதிலும் சரி., உடம்பு சரியில்லாத ஸ்ரேயாவை பார்க்க பழங்கள் வாங்க போகும் அர்ஜூனை தடுத்து அவரது பைக்கிலேயே போய் தான் மட்டும் பழம் கொடுத்து அசத்துவதிலும், ஸ்ரேயாவின் பர்த்டேக்கு அர்ஜூனின் பிரேம் செய்த போட்டோவை கிப்ட்டாக கொடுத்து அசத்தி விட்டு, எனக்கு பிடிச்ச அவளுக்கு இன்று அவளுக்கு பிடிச்ச உன் போட்டோ... நாளைக்கு என் போட்டோ கொடுப்பேன் என டயலாக் விடுவதிலாகட்டும் தனுஷூக்கு நிகர் தனுஷ்தான்!
நாயகி ஸ்ரேயா., தனுஷ் படத்தில் மட்டு எப்படி இவ்வளவு அழகாக, அம்சமாக தெரிவாரோ தெரியவில்லை! வாவ்! இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், ஜாகரபி, ஹிஸ்ட்ரி எல்லாம் ரொம்ப சூப்பரா ஒர்க் அவுட் ஆகுதுங்கோ! கீப் - இட் - அப்!
புதுமுக வில்லன்., ஸ்ரேயாவின் காதலன் அர்ஜூனாக தியான் பல இடங்களில் ஹீரோவாக தெரிந்தாலும் மெனக்கெட்டு வில்லனாக்கி இருக்கிறார்கள். காமெடிக்கு ஸ்ரீநாத், ஆர்த்தி, நீலிமா, மொட்டைத்தலை தேவிசரண், சிலோன் மனோகர் உள்ளிட்டவர்களும், வில்லத்தனத்திற்கு ராதாரவி, வின்சென்ட் அசோகன் உள்ளிட்டவர்களும் இருக்கின்றனர்.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் யாரோ என் நெஞ்சை..., நீ காதலிக்கும் பொண்ணு உள்ளிட்ட பாடல்கள் இதம். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு பளிச்!. படத்தொகுப்பாளர் கோவா பாஸ்கரின் கத்திரி பின்பாதியில் பெரிதாக வேலை செய்யவில்லை போலும். அதனால் இரண்டு மூன்று முஐற படம் முடிந்த பீலிங்! மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் குட்டி.., முன்பாதி சுட்டி, பின் பாதி செம லூட்டி!
குட்டி : சுட்டி - லூட்டி!
----------------------------------
குமுதம் விமர்சனம்
தான் காதலிக்கும் பெண் தன்னைக் காதலிக்காமல் இன்னொருவனை விரும்புகிறாள். அதனாலென்ன? நானும் கொஞ்சம் காதலிச்சுக்கறேனே என உள்ளேன் ஐயா போடும் குறும்புப் பையன்தான் குட்டி.
தெலுங்கு சினிமாவை கலக்கிய ஆர்யா படத்தின் ரீமேக். ஸ்ரேயாவின் கொலுசை கன்னியாகுமரி கடலில் குதித்தெடுக்கப் போனவன் யார் என்ற சஸ்பென்ஸ் காட்சியம், இதுபற்றின ஸ்ரேயாவின் ஆரம்ப மிரட்சியும் துவக்கத்திலேயே நம்மை நிமிர வைக்கின்றன.
காதலனை வைத்துக் கொண்டே ஸ்ரேயாவிடம் தனுஷ் "ஐ லவ் யூ' சொல்வது ஜிவ். அதற்குப்பிறகு நடப்பதெல்லாம் காதல் போட்டி ஆட்டங்கள்தான். இந்த மாதிரியான கேரக்டரென்றால் தனுஷ் அநாயசமாகச் செய்து விடுகிறார். ஊரிலிருந்து திரும்பும் அர்ஜுன் தன் நண்பர்களோடு சேர்ந்து மிரட்ட வரும்போது பேசியே அவர்களை சமாளிப்பதாகட்டும், போட்டி காதலனை பாஸ் என்று அழைப்பதாகட்டும், எல்லா இடங்களிலும் தனுஷ் முத்திரை.
காதலில் மாட்டிக் கொள்ளும் வேடம் ஸ்ரேயாவுக்கு. தப்பித் தவறிக்கூட சிரிக்க மாட்டேங்கிறார். படம் முழுக்க சோகமாகவே வர்றது நல்லாவே இல்லை. ரெயிலில் தனுஷை கடுப்பேற்ற சாப்பாடு பொட்டலத்தை வெடுக்கென பறிப்பது ச்சோ.... ஸ்வீட் கோபம். தெலுங்கில் அல்லு அர்ஜுனனுடன் ஒப்பிடும்போது தனுஷிடம் கொஞ்சம் துள்ளல் குறைவுதான். ஆனாலும் க்ளைமாக்ஸில் அடி பின்னுகிறார்.
கலகலப்பாக போய் கொண்டிருக்கும் படம், தனுஷ் அடிவாங்கும்போது சட்டென்று சறுக்குகிறது. மகனின் காதலுக்கு எம்.பி., ராதாரவி ஒப்புக்கொள்வது செயற்கைத்தனம். இரண்டாவது பாதியில் ஸ்ரேயாவை கூட்டிக் கொண்டு கிராமத்திற்கு தனுஷ் பயணப்படுவதும், அங்கே பூசாரி சொல்லும் ப்ளாஷ்பேக்கும் கொஞ்சம் மொக்கை. ஸ்ரீநாத் செய்யும் காமெடிகள் அத்தனையும் உப்பில்லாத தயிர் சாதம்தான்.
பாலசுப்ரமணியம்மின் ஒளிப்பதிவு மகா துல்லியம். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் யாரோ என் நெஞ்சில், பீல் மை லவ் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.
குட்டி : பாதி கெட்டி! பாதி வெட்டி!!
குமுதம் ரேட்டிங் : ஓகே!
----------------------------------
கல்கி விமர்னம்
* தன் காதலியை, அவள் காதலனோடு சேர்த்து வைக்க முயற்சிக்கும் காதலனின் கதை. என்ன குழப்புதா ?
* தனுஷ், ஸ்ரேயாவை காதலிக்கிறார், ஆனால் ஸ்ரேயா காதலிப்பதோ சமீர் தத்தானியை.
* என் காதலை ஃபீல் பண்ணினா போதும் : லவ் பண்ண வேண்டாம் என்று காதலுக்கு புது வடிவம் கொடுக்கிறார் தனுஷ்.
* ஸ்ரேயா ஃபீல் பண்ணியது சமீர் காதலையா, தனுஷ் காதலையா... என்பது க்ளைமாக்ஸ்.
* துறுதுறு காலேஜ் பையன் கேரக்டரில் தனுஷ் பாந்தமாகப் பொருந்துகிறார்.
* பார்ப்பவர்களெல்லாம் காதலைச் சொல்ல ஸ்ரேயா என்னப் பொதுச் சொத்தா ? அட்லீஸ்ட் அவங்க அம்மா, அப்பா யாருன்னாவது காண்பிச்சிருக்கலாம்.
* ஸ்ரீநாத் காமெடியில், ""நடிகர் சிவக்குமார் அட்வைஸ், இயக்குனர் விக்ரமன் பட ஹீரோ'' என வந்துபோவது படத்தை கலகலப்பாக்குக்கிறது.
* இயக்குனர் மித்ரன் ஜவஹர், பழைய படங்களின் வாசனை வீசுவதைக் கவனித்தாரா ?
* ஸ்ரேயாவை ஃபீல் பண்ண வைக்க தனுஷ் செய்யும் சேஷ்டைகளை ரசிக்கலாம்.
* இசை,திரைக்கதை, எடிட்டிங் பற்றி எதுக்குச் சொல்லலைன்னு கேட்கறீங்களா... பாவம், வேணாம் விட்டுடுவோம்.
* ஒரே ஆறுதல் அரைகுறை ட்ரெஸ்ஸில் ஆட்டம் போடாத ஸ்ரேயாதான்.
குட்டி : ஃபீலிங் பார்ட்டி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment