Monday, February 8

போர்க்களம் விமர்சனம்



தினமலர் விமர்சனம்


ஹாலிவுட் படங்களுக்கு போட்டியான கோலிவுட் படம் என விளம்பரப்படுத்தப்பட்டு, சில ஹாலிவுட் பட கதைகளை காப்பி ரைட்‌ஸோ, ராயல்டியோ இல்லாமல் அப்படியே காப்பியடித்து எடுக்கப்படும் ஒரு சில மெகா பட்ஜெட் தமிழ் படங்களுக்கு மத்தியில் நிஜமாகவே ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் டெக்னிக்கல் அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் வித்தியாசமான தமிழ் படம்தான் போர்க்களம்!

கதைப்படி ஆந்திராவில் உள்ள லங்கா எனும் பகுதியில் இருவேறு குரூப்களிடையே பரம்பரை பகை! அதில் ஒரு குரூப்பின் தலைவன் திருமணம் செய்து கொள்ள துடிக்கும் பெண்ணை, மற்றொரு குரூப் கடத்துகிறது. இரண்டு குரூப்களிடம் இருந்தும் தப்பிக்கும் நாயகி, நேஷனல் பர்மிட் லாரி ஏறி சென்னைக்கு வருகிறாள். வந்த இடத்தில் புரியாத புதிராக திரியும் ஹீரோ கிஷோரிடம் அடைக்கலம் ஆகிறார். பல கொலைகள், பல கற்பழிப்புகள் செய்த முகம் தெரியாத ஒருத்தனுக்கு தண்டனை தர வேண்டும் எனக்கூறி பத்து மாடி கட்டிடத்தில் இருந்து தற்கொலைக்கு எல்லாம் முயற்சிக்கும் பொதுநலவாதியான ஹீரோ சும்மா இருப்பாரா? ஆரம்பத்தில் நாயகி ஸ்மித்தாவிற்கு ஆதரவு கரம் நீட்டாமல் அலட்சியப்படுத்தினாலும், அதன் பிறகு அவரிடம் அன்பு காட்டுகிறார். அடைக்கலம் தருகிறார். அந்த அன்‌பை காதலாக கருதி, கசிந்துருகும் கதாநாயகி‌யை கட் பண்ண விரும்பி, ஒரு கட்டத்தில் போலீசில் ஒப்படைக்கிறார். பொல்லாத போலீஸ், அம்மணியை அந்த ஆந்திரா பார்ட்டிகளிடமே தாரை வார்க்கிறது. விஷயம் தெரிந்ததும் ஆந்திரா கிளம்பும் கிஷோர், அங்கு அத்தனை வில்லன்களையும் ஆவக்காய் ஊறுகாய் போட்டு கதாநாயகியின் கரம் பிடிப்பதே மீதிக்கதை!

இந்த கதையை எத்தனைக்கு எத்தனை மிரட்டலாகவும், விரட்டலாகவும் படம் எடுக்க முடியுமோ... அத்தனைக்கு அத்தனை அசத்தலாக படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் பண்டி சரோஜ்குமார். தாய்லாந்தில் டைரக்ஷன் கோர்ஸ் படித்தவராம் இந்த 24 வயது இளைஞர். எனவே, தான் படித்த இடத்தையும் மறந்து விடாமல் ஹீரோவின் சின்ன வயது ப்ளாஷ்பேக்கை தாய்லாந்தில் ஆரம்பித்து ஒரு ஹய் வோல்டேஜ் ஆக்ஷன் படத்தில் தாய்மார்களை கவரும் பெரிய செண்டிமென்ட் சீன்களையும் திணித்திருப்பதுடன், கதையின் முக்கியமான திருப்பத்தையும் அதில் புதைத்து வைத்து பொருள் பொதிந்த படத்தை எடுத்து சபாஷ் வாங்கி விடுகிறார். க்ளைமாக்ஸ் போர்க்களம் ஒன்று போதும் இவரது திறமையை உலகிற்கு பறை சாற்றுவதற்கு...! வாவ்! இப்படியொரு சண்டைக்காட்சியை இதுவரை தமிழ்சினிமா பார்த்திராது.

பொல்லாதவன் படத்தில் பொல்லாத வில்லனாகவும், வெண்ணிலா கபடிக்குழுவில் வைராக்கியம் நிரம்பிய கபடி மாஸ்டராகவும் ரசிகர்களை கவர்ந்த கிஷோர், இதில் ஹீரோவாக, அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக புரமோஷன் பெற்றிருக்கிறார். மனிதரின் நாடி நரம்பெல்லாம் நடிப்பு நர்த்தனமாடுகிறது. சபாஷ்! அடுத்து கதாநாயகி ஸ்மித்தா. ஆக்ஷன் படங்களில் நாயகிகளுக்கு என்ன பங்கோ., அந்த பங்‌கில் பாக்கி வைக்காமல் இவரது பாங்கு பளிச்சிட்டிருக்கிறது.

ஹீரோவின் குருஜியாக ராஜேஷ், டிரைவர் கம் எல்லாமுமாக சத்யன், வில்லன்களாக சம்பத், லால், பிஜூமேனன், அத்தீஷ்வர், டினு ஆனந்த், பொன்வண்ணன் என ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் மிரட்டுகின்றனர். அதிலும் பர்மா அத்தீஷ்வரின் அட்டகாசமும், பிஜூமேனனின் துப்பாக்கி சாகசமும் பிரமாண்டம்! பிரமாதம்!

காட்சிக்கு காட்சி மிரட்டும் ரோஹித் குல்கர்னியின் இசையும், மகேந்திரன், டி.தேவா, தேவராஜ் உள்ளிட்டவர்களின் ஒளிப்பதிவும் இயக்குனர் பண்டி சரோஜ்குமாருக்கு பக்கா பலம்! படம் முழுக்க குழுமி இருக்கும் கும்மிருட்டும், முன்பாதியின் மெதுவான நகர்தலும் படத்திற்கு மைனஸ் என்றாலும், இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத யதார்த்தத்தையும் தாண்டிய ஏதோ ஒன்று போர்க்களத்தில் படம் முழுக்க மிதமிஞ்சி இருப்பது போதும் இப்படத்தை பார்க்கலாம்... பாராட்டலாம்... என மனதார சொல்ல...!

போர்க்களம் : பலமுறை பார்க்கலாம்...! பாராட்டலாம்!!

No comments :

Post a Comment