Monday, February 8

புகைப்படம் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

கல்லூரி காதல்களையும், காதல் இல்லாத நல்ல நட்பையும் படம் பிடித்துக் காட்டியிருக்கும் திரைப்படம் புகைப்படம்!

நான்கு ஆண் நண்பர்கள், மூன்று பெண் தோழிகள், இவர்களுக்குள் அந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் ஏற்படும் நெருக்கமான நட்பையும், நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் உருவாகும் கிறக்கமான காதலையும், அது ஏற்படுத்தும் பாதிப்பையும் அழகாக பதிவு செய்திருக்கும் புகைப்படத்தில் நட்பு, உதவி, கோபம், ஏமாற்றம், துக்கம், காதல், காதலையும் தாண்டிய அம்பு என ஏகப்பட்ட விஷயங்கள் ஒரு கோர்வையாக இந்த குளிர் காலத்திற்கு இதமான போர்வையாக சொல்லப்பட்டிருக்கும் விதம் பிரமாதம்!

நிஜத்திலும் கிருஷ்ணனாக, பார்க்கும் பெண்களிடம் எல்லாம் பட்டறை போடும் கிருஷ்ணாவாக அம்ஜத், கோபக்கார... குடிகார... குருவாக சிவம், நக்கலும் நையாண்டியுமான நந்தாவாக நந்தா, தஞ்சை பக்கத்து தமிழ் மீடியம் மாணவர் பாலாவாக ஹர்ஷ். அலட்டல் இல்லாத ஆந்திர பெண் கே.கே.வாக யாமினி, கிருஷ்ணாவின் காதலி ஷைனியாக ப்ரியா ஆனந்த், சீனியம் கவுரியாக குரு மீது ஒரு கண்ணுடன் திரியும் மிருணானிளி என ஏழு பாத்திரங்களும் நடிப்பால் நம்மையும் நம் கல்லூரி நாட்களுக்கு அழைத்து போகின்றன என்றால் மிகையல்ல!

மேற்படி எழுவர் மாதிரியே ஹெச்.ஓ.டி., சண்முகசுந்தரம், கல்லூரி சேர்மன் - பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், அனிதா மேடமாக வரும் நீலிமா ராணி, அவரது காதல் கணவராகும் சின்னத்திரை வெங்கட் உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்து படத்தை தூக்கி நிறுத்த ஒத்துழைத்துள்ளனர்.

கரகாட்டக்காரன் கனகாவின் அப்பாவும், கரகர குரலுக்கு சொந்தக்காரருமான சண்முக சுந்தரத்தை துணிந்து கோர்ட்டும் - சூட்டும் போட்டு காலேஜ் எச்.ஓ.டி., ஆக்கி விட்டு, ஆங்கிலம் பேச வைத்திருப்பதும், இளம் நாயகி ஷைனியின் அப்பாவாக்கியிருப்பதற்காகவுமே இயக்குனரை பாராட்டலாம். என்ன துணிச்சி்ல! கலக்கிட்டீங்க சண்முகசுந்தரம் மாடர்ன் கெட்அப்பிலும்!

இயக்குனர் ராஜேஷ் லிங்கம், செல்வராகவனின் சிஷ்யராம். அதற்காக காதலர்களை பிரிக்க வேண்டும், எதிர் மறையான முடிவினை காட்டிட வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா என்ன?

படத்தின் ஆரம்ப காட்சிகளில் பார்க்கும் பாத்திரங்கள் எல்லாம் பேசிக் கொண்டே இருப்பதையும், இறுதிக் காட்சிகள் இழுவையாக இருப்பதையும் தவிர்த்திருந்தால் கங்கை அமரனின் இசையும், விஜய் ஆம்ஸ்டராங்கின் ஒளிப்பதிவும், பி.லெனின் படத்தொகுப்பும் மேலும் பளிச்சிட்டிருக்கும்! எனினும் ரா‌ஜேஷ்லிங்கம் எதிர்பார்ப்பிற்குரிய இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டார் என்றால் மிகையல்ல!

புகைப்படம் : வித்தியாசமான தமிழ்ப்படம்! வெற்றி பெற வேண்டிய திரைப்படம்!

----------------------------

குமுதம் விமர்சனம்

ஆரவாரமான நட்புக்கும், அமைதியான காதலுக்கும் நடக்கிற கல்லூரி கண்ணாமூச்சிதான் புகைப்படம்!

ஆரம்பத்தில் டென்ஷன், அப்புறம் தெனாவட்டு என இன்ஜினீயரிங் மாணவர்களின் கேரக்டர் குரு அண்ட் கோவிடம் இயல்பாக வெளிப்படுகிறது. அண்ணா என்ற ஒரே வார்த்தையில் சிநேகப் புன்னகை வரவழைக்கிற யாமினி, வாட்ச் அணிந்த கையை உதறியபடி அடிக்கடி சண்டைக்குத் தயாராகும் சிவம், கிராமத்து வெகுளித்தனத்தை நகரத்து வகுப்பறையில் அப்படியே அவிழ்த்துவிடுகிற ஹரீஷ் ஆகியோர் இந்தக் கல்லூரி புகைப்படத்தில் முதல் வரிசையில் இடம் பிடிக்கிறார்கள்.

கலாட்டா நண்பர்களோடு சற்று தாமதமாக வந்து கைகோர்க்கிற ப்ரியாவுக்கு மேக்கப் இல்லாவிட்டாலும், ரசிக்கலாம். ஹரிஷின் ஊருக்குப் போகும் சமயத்தில் அம்ஜத்துக்கும் ப்ரியாவுக்கும் இடையே பூக்கிற காதல் சத்தம் போடாத கவிதை. முதல் பையன் பாம்பு கடித்து இறந்ததால், ஹரீஷின் பெற்றோர் அசைவம் தவிர்க்கிற காட்சி, போகிற போக்கில் அறிமுக இயக்குநர் ராஜேஷ்லிங்கம் எடுத்துப் போடுகிற அடடே அப்சர்வேஷன். காதல் பந்தயத்தில் முந்திவிட்ட நண்பனை கட்டிப்பிடித்து வாழ்த்தி தனது வேதனையை ஹரீஷ் மறைக்கிற காட்சியும் அருமை.

விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவில் செம ஸ்ட்ராங். பின்னணி இசையைவிட பாடல்களுக்கு கங்கைஅமரன் சற்று சிரத்தை எடுத்திருக்கிறார். நண்பனின் தற்கொலை ஏற்படுத்தும் குற்ற உணர்வை சொல்ல நினைத்தது தப்பில்லை. இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். முன்பாதி முழுவதும் ஸ்லோ ரேஸ்! ஹீரோக்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகும்வரை ஏதோ டி.வி. காமெடி நிகழ்ச்சியின் ஆடிஷனுக்காக வந்தவர்கள் மாதிரியே பேசி சலிப்பூட்டுகிறார்கள். லெக்சரர்கள் வெங்கட்டும், நீலிமாவும் சைக்கிள் கேப்பில் காதலிப்பது, சிவத்தை விரட்டி, விரட்டி காதலிக்கும் சீனியர் மிருணாளினி, அதே கல்லூரிக்கு லெக்சரராக வருவது, தேவையே இல்லாமல் சிவம் அவ்வப்போது முரண்டு பிடிப்பது போன்றவை காலேஜ் எக்ஸ்பிரஸை கூட்ஸ் வண்டியாக்கி விடுகிறது.

புகைப்படம்: சரியான ஆங்கிள், ஜஸ்டு மிஸ்டு.
குமுதம் ரேட் : ஓ.கே.

No comments :

Post a Comment