Monday, February 8

அசல் விமர்சனம்




தினமலர் விமர்சனம்

ஆக்ஷன் படம் என்றாலும் அஜித்தின் அசல் குடும்ப கதைதான்! ஆமாம் பின்னே., சொத்துக்காக அஜித்தை கொல்லத்துடிக்கும் அவரது அண்ணன் - தம்பிகளின் ஆக்ஷனும், அதற்கு இவரது ரீயாக்ஷனும்தான் படம் என்றால் அசல் குடும்ப கதைதானே?

கதைப்படி பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறது அஜித்தின் மொத்த குடும்பமும். அஜித்தின் அங்கீகாரமில்லாத மனைவியின் வாரிசு அஜித். (என்ன குழப்பம்? படத்துல தல... அப்பா - மகன்னு டபுள் ஆக்ட்டுங்க!) அவரை அப்பா அஜித்தின் அங்கீகரிக்க்பட்ட மனைவியின் வாரிசுகள் சம்பத்துக்கும், ஆஹா ராஜீவ் கிருஷ்ணாவுக்கும் சின்ன வயது முதலே ஆகாது. எனினும் அப்பாவின் ஆசைப்படி அண்ணன் - தம்பியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து நேர்மையாக தொழில் செய்யத் துடிக்கும் அஜித்துக்கு குறுக்கே நிற்கின்றனர் மேற்படி இருவரும். அஜித்துக்கு தெரியாமல் ஆயுதக் கடத்தல், சட்டவிரோதம், தப்பு தண்டாக்கள் என வாழ ஆரம்பிக்கும் சகோதரர்கள் இருவரும் ஆரம்ப கட்டத்திலேயே சிக்கலில் மாட்டிக் கொள்ள, அவர்களுக்காக இந்தியா வரும் அஜித் சகோரர் ராஜீவ் கிருஷ்ணாவை கடத்தி வைத்திருக்கும் மும்பை நிழல்உலக தாதாவிடம் இருந்து அவரை அதிரடி ஆக்ஷனில் இறங்கி மீட்கிறார். ஆனாலும் அண்ணனுக்கும், தம்பிக்கும் அஜித் மீது பாசம் வரவில்லை. பகையே கூடுகிறது. மொத்த சொத்தையும் அப்பா அஜித், மகன் அஜித்துக்கு எழுதி வைத்திருப்பதால் மகன் அஜித்தை சுட்டு விட்டு மீண்டும் பிரான்ஸ் சென்று பெரிய வாழ்வு வாழ ஆரம்பிக்கின்றனர். அஜித் உண்மையிலேயே இறந்தாரா? இல்லை மீண்டும் உயிர்த்தெழுந்து பிரான்ஸ் சென்று சகோதரர்களை பழிவாங்கினாரா? சமீரா ரெட்டி - பாவனா என இரண்டு கதாநாயகிகளுக்கு படத்தில் என்ன வேலை.? யூகி சேது, பிரபு உள்ளிட்டவர்களுக்கு படத்தில் என்ன கேரக்டர்..? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது அசல்!

கதை, திரைக்கதை, வசனம் என மூன்றிலும் அஜித், சரண், யூகிசேது கூட்டணி சும்மா ஜமாய்த்திருக்கிறது சபாஷ்!!

அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் அஜித் சும்மா தாடியும் - மீசையுமாக சக்கை போடு போடுகிறார். ராயல் லுக்கில் கோட்டும் சூட்டுமாக கலக்குகிறார். சண்டைக் காட்சிகளில் கரா‌த்தே, குங்பூ என அதிக சிரத்தை எடுத்திருக்கும் அஜித் அதை சாங் - டான்ஸ் காட்சிகளிலும் எடுத்திருந்தால் இன்னும் பேஷாக இருந்திருக்கும்.

பாவனா, சமீரா ரெட்டி என இரண்டு நாயகிகள். 15 வருடமா அஜித்துடன் பிரான்சில் இருந்தே பழகும் சமீராவைக் காட்டிலும், பத்தே நாளில் பாவனா அஜித்துடன் பச்சக் என ஒட்டிக் கொள்வது போலவே நம் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். பலே பாவனா!

வில்லன்கள் சம்பத், ராஜீவ்கிருஷ்ணா, பிரான்ஸ் போலீஸ் சுரேஷ் (அட... நம்ம மாஜி ஹீரோ சுரேஷா இது?), பிரபு, சம்பத்தின் மாமா, யூகி சேது என ஒவ்வொருத்தரும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கின்றனர்.

பிரசாந்த் டி.மிஸ்சாலேவின் ஒளிப்பதிவு பிரான்ஸிலும் சரி, இந்தியாவிலும் சரி பிரமாதம்! பரத்வாஜின் பின்னணி இசை சூப்பர். பாடல்கள் ப்ச்!

க்ளைமாக்ஸில் போலீ்ஸ் சுரேஷ் பேசும் வசனங்களை தவிர்த்து அதுமாதிரி சீன்களை காட்சிப்படுத்தலிலேயே புரிய வைத்திருக்கலாம் என்பது உள்ளிட்ட இன்னும் சில குறைகளை நிறை செய்திருக்கலாம் இயக்குனர். என்றாலும் முதன் முதலாக அஜித்தின் இணை இயக்கமும், சரனின் இயக்கமும் ராயல்!

அசல் : ராயல் - ஸ்டைல்!

No comments :

Post a Comment