Monday, February 8

தம்பிவுடையான் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

தண்ணீர் கேட்டு போராடும் தஞ்சை மாவட்டத்து இளைஞனின் கதை! சுதந்திர போராட்டத்தில் எல்லாம் பங்கெடுத்த பாரம்பரியம் மிக்க வசதியான குடும்பத்தில் பிறந்த இளைஞன் தம்பியுடையான். காவிரியில் தண்ணீர் இல்லாமல் ஊரே வறண்டு போவது கண்டும், விவசாயிகள் எலிக்கறி சாப்பிடுவதைப் பார்த்தும், உயிரை விடுகிறார் ஹீரோவின் தாத்த‌ாவும், சுதந்திர போராட்ட தியாகியுமான சாருஹாசன். அவரது மரணத்தால் மனநிலை மாற்றம் கொள்ளும் ஹீரோ, தன் கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்களை திரட்டிக் கொண்டு காவிரியில் தண்ணீர் கேட்டு போராட்டத்தில் குதிக்கிறார். அந்த போராட்டம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்க, அதுவரை ஆற்றுநீரை அரசியலாக்கி காற்று வாங்கி வந்த ஆளுங்கட்சியினரின் தூக்கம் தொலைகிறது. நிம்மதி கெடுகிறது. சும்மா இருப்பார்களா? தம்பியுடையானையும், அவனுக்கு தோள் கொடுக்கும் இளம் புரட்சியாளர் இளமாறனையும் தீர்த்துக் கட்ட அந்த ஏரியா அமைச்சர் காதல் தண்டபானி தலைமையில் ஒரு குழுவே செயல்படுகிறது. தம்பியுடையான் ஆளும் வர்க்கத்தில் அநீதி‌களை எல்லாம் எதிர்த்து போராடி ஜெயித்தாரா? அல்லது மடிந்து வீழ்ந்தாரா? என்பதுவே மீதிக் கதை!

தம்பியுடையானாக புதுமுகம் ஆதித்யா அன்பு நல்ல உடற்கட்டு - முகவெட்டுடன் டான்ஸ், உடான்ஸ், ஆக்ஷன், ரியாக்ஷன் என அனைத்திலும் பர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் செய்து விடுகிறார். பேஷ் பேஷ்! தமிழ் சினிமாவிற்கு தரமான நியூ பேஸ்! தம்பியுடையானின் காதலியாக, சக கல்லூரி மாணவியாக மனிஷா சட்டர்ஜி, பெயரைப் போலவே முகத்திலும் வட இந்திய வாடை. சாரி! தஞ்சை பெண்ணாக மனதில் ஒட்ட மறுக்கிறார்.

அராஜகம் செய்யும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டும் புரட்சியாளர் இளமாறனும், அவரது காதலி ஹீராவும் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு. இவர்களை மாதிரியே தியாகி சாருஹாசன், நாயக0னின் தந்தை நிழல்கள் ரவி, வில்லன் காதல் தண்டபானி, நாயகனின் தாய்மாமா முத்துக்காளை, கெஸ்ட்ரோலில் கல்லூரி முதல்வராக வந்து அறிவுரை கூறும் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் உள்ளிட்டவர்களும் நச் செலக்ஷன்.

மாதவராஜ் தத்தரின் ஒளிப்பதிவும், பொன்மூர்த்தியின் படத்தொகுப்பும் தம்பியுடையான் படத்திற்கு அண்ணன்களாக இருந்து அசத்துகின்றன என்றால், ஷரவணின் இசை ஊதாரித் தம்பியாக இருந்து உதறல் எடுக்க வைக்கிறது.

இயக்குனர் ராஜா மகேஷின் கதை, திரைக்கதை, வசனத்தில் இருக்கும் ஆழமும், ஆர்ப்பாட்டமும் காட்சி படுத்தலிலும், இயக்கத்திலும் இல்லாதது வருத்தம். ஆயினும் சமூக பிரச்னை உடைய கதை என்பதால் சபாஷ் சொல்வோம்.

தம்பியுடையான் : ரசிகர் படையின் எதிர்பார்ப்புகளுக்கு அஞ்சான்.

No comments :

Post a Comment