Monday, February 8
அதே நேரம் அதே இடம் விமர்சனம்
தினமலர் விமர்சனம்
அப்பா காசில் குட்டி சுவரு, கெட்ட நண்பர்கள், குரூப் தம், தண்ணி என
ஊரை சுற்றும் ஜெய்க்கு அதே ஏரியாவில் அடிக்கடி தட்டுப்படும் (தென்படும்)
விஜயலட்சுமி மீது காதல். விஜியும், காதலாகி கசிந்துருக..., இந்த சமயத்தில்
ஹீரோ ஜெய்யின் காதல், அவரது அப்பா நிழல்கள் ரவிக்கு தெரிய வருகிறது. ஆனால்
வழக்கமான சினிமா அப்பாக்கள் மாதிரி குய்யோ, முறையோ என்று குதிக்காமல்,
அப்பா காசில் சுற்றித்திரியும் உனக்கு பொறுப்பு வர வேண்டும்... எனக் கூறி
மகன் ஜெய்க்கு ஒரு கண்டிஷன் போடுகிறார். அதாகப்பட்டது.., ஒரு வருடம் உன்
காதலியை பார்க்கமாமல், பேசாமல் ஆஸ்திரேலியா போய் சம்பாதித்து கொண்டு
வா... அதன் பின் நீ விரும்பும் பெண்ணையே திருமணம் செய்து வைக்கிறேன்
என்கிறார். அதன்படி அத்தகவலை காதலியிடம் தெரிவித்து விட்டு ஆஸ்திரேலியா
கிளம்பும் ஜெய்க்கு, திரும்பி வரும்போது பெரும் அதிர்ச்சி
காத்திருக்கிறது. அது என்ன? அதற்கு காரணம் என்ன? அதற்கு ஜெய்யின்
ரீயாக்ஷன் என்ன? என்பது அதே நேரம் அதே இடம் படத்தின் மீதிப் பாதி!
கார்த்திக் எனும் பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்திருக்கும் ஜெய்,
முன்பாதியில் காதல் நவரச கார்த்திக்காகவும், பின்பாதியில் ஆக்ரோஷ
விஜய்(சாயலில்)யாகவும் மாறி தன் பாத்திரத்திற்கும் பலம்
சேர்த்திருக்கிறார்.
ஜனனி எனும் பாத்திரத்தில் விஜயலட்சுமின் செயல்கள் படம் பார்ப்போரை ஜன்னி
காண வைக்கிறது. ஜெய்யை காதலிப்பதும், பணத்தாசை பிடித்து, புதுமுகம் ராகுலை
கல்யாணம் கட்டிக்கொண்டு செட்டில் ஆவதும் க்ளைமாக்ஸில் ஜெய்யிடம் உனக்கு
வேண்டுமானால் ஒருநாள் மனைவியாக இருக்கிறேன்... என குடும்ப உறவுகளையே
கொச்சைப்படுத்தி குத்துப்பட்டு சாவதும், எதிர்பாராத திருப்பங்களை
கொடுத்து படத்தை சுவாரஸ்யப் படுத்துவதுடன் விஜி மீது பரிதாபத்தையும்
அனுதாபத்தையும் ஏற்படுத்துகிறது.
ஜெய், விஜயலட்சுமி மாதிரியே புதுமுகம் ராகுல், லொல்லுசபா ஜீவா, நிழல்கள்
ரவி, ஸ்ரீகலா, ரவிபிரகாஷ் உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் உணர்ந்து
நடித்திருக்கின்றனர்.
பிரேம்ஜி அமரனின் இசையில் பின்னணி இசையும் சரி, பாடல்கள் இசையும் சரி,
படத்திற்கு பலம்! பவன் சேகரின் ஒளிப்பதிவும், ஜி.பி.வெங்கடேஷின்
படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கும் மேலும் சில சமாச்சாரங்கள்.
ஆனால், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், அதே நேரம் அதே இடம் படத்தில்
ஏதோ ஒன்று இல்லாத குறை! அது என்ன என்பது இப்படத்திற்கு புதிய கதையும்,
திரைக்கதையும் எழுதி, இயக்கி இருக்கும் பிரபு.எம்மிற்கே வெளிச்சம்.
அதே நேரம் அதே இடம் : சரியான நேரம் சுமாரான படம்!
-----------------------------------
குமுதம் விமர்சனம்
காதலிகளுக்கு ஒரு எச்சரிக்கை! ஃபாரின் மாப்பிள்ளை... பணக்கார பையன்னு டாவடிச்சவனை டபாய்க்க நினைச்சா, மவளே "காவு'' கொடுத்துருவோம். இதான்பா படத்தோட ஒன்லைன் மேட்டரு.
ஹீரோ "ஜெய்'' பைக் ஓட்டுகிறார். குட்டிச்சுவரை தேடிப்பிடிச்சு அரட்டை அடிக்கிறார். பய புள்ளைகள்லாம் ஒண்ணுகூடி சிலபல சமயங்களில் தண்ணி அடிக்கிறாங்க. குட்டிச் சுவரும் பாரும்தான் யூத்துக்கான சூத்திரம்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல. அதே இடம்... அதே மாதிரியான அலுப்புக்காட்சிகள்...!
இரவுக்கான இரண்டு மாத்திரை, பகலுக்கு ஒண்ணுன்னு காய்ச்சலுக்கு வைத்தியம் சொல்லுற கணக்கா இரண்டு சந்திப்பு, ஒரு குட்டி சண்டைன்னு சடார்னு ஜெய்விஜயலட்சுமி ஜோடிக்குள்ளே காதல் வந்துடுது. அப்புறமென்ன? பார்க், பீச், காபி ஷாப்..அதே புளித்துப் போன காதல்.
ஜீவா கோஷ்டி பஸ் ஸ்டாண்ட் ஃபிகரிடம் மொபைல் நம்பர் வாங்கும் காட்சியை மட்டும் ரசிக்கலாம்.
விஜயலட்சுமியை இனிமே பக்கத்து வீட்டுப் பொண்ணுன்லாம் சொல்ல முடியாது. இலைமறைக் காயாகவே கவர்ச்சி காட்டியிருக்கிறார். சட்டென்று ""ஜெய்''க்கு எதிராக விஜி திரும்புவதை நம்ப முடியலையே.
அம்மாவை இழந்து காதலியிடம் அன்புக்காக ஏங்கும் இளைஞன், பணவசதிக்காக காதலையே கொச்சைப்படுத்தும் காதலி, பழி வாங்கல் இதெல்லாம் ஓகேதான். ஆனா,
காதலியோட கணவனின் தம்பிக்கும் காதல் தோல்வின்னு காட்டி, அதை ஏதோ உலகளாவிய பிரச்னையாக கொண்டுபோகிற பில்டப் தேவையா?
பின்னணி இசை வெகு சுமார். பாடல்கள் பரவாயில்லை ரகம். என்ன கொடுமை பிரேம்ஜி இது ?
"அதே நேரம் அதே இடம்'' : அதான் சொல்லிட்டாங்கல்ல "அதே பழசு''தான்!
குமுதம் ரேட்டிங் : சுமார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment