Monday, February 8

நாணயம் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

நாணயம் மிகுந்த ஒருவனை நாணயமே இல்லாதவர்கள் கூட்டு சேர்ந்து படுத்தும் பாடுதான் நாணயம் படத்தின் மொத்த கதையும்!

கதைப்படி நாயகன் பிரசன்னா, நாயகி ரம்யா திருமணமாகி விவாகரத்து ஆனவர் என ‌தெரிந்து, அவர் மீது காதல் கொள்கிறார். ஆனாலும் இவர்களது காதலுக்கு குறுக்கே வருகிறார் ரம்யாவின் மாஜி கணவர். அவரை தீர்த்துக் கட்டும் வில்லன் சிபிராஜ் அண்ட் கோவினர் கொலையை பிரசன்னா செய்ததாக ஜோடித்து அதற்கு தகுந்த சாட்சியையும், புகைப்பட ஆதாரத்தையும் தயார் செய்து பிரசன்னாவை மிரட்டுகின்றனர். ஏன்? எதற்கு? பிரசன்னா வேலை பார்க்கும் பேங்க் லாக்கரை கொள்ளையடிக்க தங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனும் திட்டத்துடன்தான்! அப்புறம்? அப்புறமென்ன...? சிபிராஜ் சகாக்களின் பிளாக்மெயிலுக்கு பயந்தபடியும், மற்றொரு பக்கம் தனது மனசாட்சியின் உறுத்தலுக்குள் உறைந்தபடியும் வங்கிக் கொள்ளைக்கான நாள் குறித்து காரியத்தில் இறங்குகிறார். சிபிராஜின் திட்டப்படி வங்கி கொள்ளையடிக்கப்பட்டதா? பிரசன்னாவின் காதல் இடையூறுகள் தீர்ந்து நிறைவேறியதா, இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல சந்தேகங்களுக்கு சாதாரண ரசிகர்கள் யூகிக்க முடியாத சவாலான பதில் தருகிறது நாணயம் படத்தின் மீதிக்கதை!

பிரசன்னா ஹீரோவா, வில்லனா, வில்லானிக் ஹீரோவா? என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கடைசி வரை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். ஆங்காங்கே அஞ்சாதே பட பிரசன்னா தெரிவதால் அவரை இறுதிவரை யூகிக்கவே முடியவில்லை. சபாஷ். சவாலான நடிப்பு!

சிபிராஜ், வில்லனுக்காக இன்னும் சற்றே தன்னை தோற்றத்திலும் நடை-உடை-பாவனைகளிலும் மாற்றிக் கொண்டு நடித்திருந்தால் நம் மனதில் இடம்பிடித்திருப்பார். இப்போதைக்கு சாரி! சாதாரணமாகவே தெரிகிறார்.

ரம்யா - யாஸ்மின் இருவரும் பெயருக்கு நாயகிகள் என்றாலும், ரம்யா பல கோடிகள் இருக்கும் பேங்க் லாக்கரின் கதிர்வீச்சுகளுக்கு இடையே நடனமாடி புகுந்து லாக்கரை இடத்தில் மட்டும் நம் மனதை கொள்ளை கொள்கிறார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வங்கியின் முதலாளியாக பெரிய மனிதராக வந்து, தன்னை ஆரம்ப காட்சியில் காபந்து செய்யும் பிரசன்னாவிற்கு வேலை தந்து, நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். இறுதியில் அத்தனை கொள்ளைக்கும், குழப்பத்திற்கும் காரணகர்த்தா அவர்தான் எனத் தெரியும்போது உயர்ந்த நம் உள்ளத்தில் இருந்து பொத்தென்று விழுகிறார்.

ஓம்.பிரகாஷின் ஒளிப்பதிவும், ஜேம்ஸ் வசந்தனின் இசையும், தமனின் பின்னணி இசையும் இயக்குனர் சக்தி எஸ்.ராஜனின் இயக்கத்திற்கு சில இடங்களில் பலம். சில இடங்களில் பலவீனம்! சிலபல ஆங்கில படங்களின் சாயல் தெரிந்தாலும்... நாணயம் - நயம்!

---------------------------

விகடன் விமர்சனம்

ஒரு வங்கியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வடிவமைத்த அதிகாரியைக் கொண்டே, அந்த வங்கியைக் கொள்ளையடிக்க முயலும் நாணயமற்ற செயலே "நாணயம்!''.

பிரசன்னா, யாரும் எளிதில் நுழைய முடியாதபடி வங்கியில் பக்கா பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் செக்யூரிட்டி ஆபீஸர். வங்கிக் கடன் வாங்கி சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்பது பிரசன்னாவின் கனவு. அப்போது ராகினியின் காதலில் விழுகிறார். ராகினி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில், ராகினியின் முன்னாள் கணவர் மர்மமான முறையில் இறந்துபோக, அதைக் கொண்டே பிரசன்னாவை பிளாக்மெயில் செய்து, வங்கிக் கொள்ளைக்குத் திட்டம் போடுகிறது சிபிராஜ் அண்ட் கோ. வேறு வழியே இல்லாமல் பிரசன்னாவும், சிபியின் திட்டங்களுக்கு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறார். ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட, வங்கிக் கொள்ளை நடந்ததா, உண்மையில் அந்தத் திட்டத்தின் பின்னணியில் இருந்தது யார், நோக்கம் என்ன என்பதுதான் பின்பாதி.

பிரசன்னா பேங்க் செக்யூரிட்டி ஆபீஸர் பாத்திரத்துக்கு இயல்பாகப் பொருந்துகிறார். சில நாட்களே பழகிய காதலிக்காக அவர் எடுக்கும் ரிஸ்க் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், அந்தப் பதற்றத்தையும் தவிப்பையும் இயல்பாகக் கொண்டு வந்திருக்கிறார். "அஞ்சாதே'' அடியாளைக் கவிழ்ப்பதாக நினைத்து, பிரசன்னா போடும் திட்டம் மாறிப்போகும்போது, அவரது எக்ஸ்பிரஷன்கள் குட். காதலியாக வரும் ராகினி ஓகே ரகம். அவர் வில்லனின் ஆளாகத்தான் இருப்பார் என எளிதாக யூகித்துவிட முடிவது திரைக்கதையின் பலவீனம். அதேபோல பிரசன்னா - ராகினி காதலில் அழுத்தமில்லை என்பதால், ராகினி கடத்தப்படும்போது நமக்கு எந்தப் பதற்றமும் இல்லை.

வில்லனாக சிபிராஜ். அப்பா சத்யராஜை அப்படியே கொண்டுவர முயற்சிக்கிறார். ஆனால், சிபி பேசும் வசனங்களில் மட்டுமே சத்யராஜின் அசால்ட் தனம் தெரிகிறது. சிபிராஜூக்கு சத்யராஜ் டப்பிங் பேசியதைப் போலத்தான் இருக்கிறது. அமைதியான வங்கி அதிகாரி கேரக்டரில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொஞ்சமாக மனதில் நிற்கிறார்.
படத்தை ஸ்டைலிஷாகக் கொடுத்திருக்கும் விதத்தில் புதுமுக இயக்குனர் சக்தி.கே.ராஜனைப் பாராட்டலாம். வங்கி அடைய படிப்படியாக இருக்கும் தடைகள், வளைந்து நெளிந்து டான்ஸ் ஆடிலேசர் தடையைக் கடக்கும் ஐடியா போன்றவை க்யூட்.

பாடல்களுக்கு மட்டும் இசை அமைத்திருக்கும் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் "நான் போகிறேன் மேலே மேலே'' பாடல் ஈர்க்கும் இனிமை. தமனின் பின்னணி இசையும், ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

ஒரு த்ரில்லருக்கு தேவையான ட்விஸ்ட்டுகள் திரைக்கதையில் உண்டு என்றாலும், அவை அனைத்தையும் நம்மால் முன்கூட்டியே யூகிக்க முடிவது பெரிய பலவீனம். வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலாவில் இருந்து விலகி எடுக்கப்பட்டது என்ற அளவில் நாணயம் கவனம் பெறுகிறது.

விகடன மார்க் : 40/100

No comments :

Post a Comment