Wednesday, March 17

மாத்தியோசி விமர்சனம்


தினகரன் விமர்சனம்

மேட்டுக்குடியினர் வாழும் கிராமத்தில் ஒதுக்குப்புற காலனியில் வசிப்பவர்கள் ஹரீஸ், கோபால், அலெக்ஸ், லோகேஷ். வெற்றுடம்புடன் சுற்றும் நண்பர்கள். இவர்களின் ரவுசு தாங்காமல் ஊரே அலறுகிறது. காலனி சிறுமி ஒருவர் கோயில் தேரில் தூசி துடைத்தார் என்பதற்காக அவரை தண்டிக்கிறார் ஜி.எம்.குமார். இதையறிந்த ஹரீஸ் கோஷ்டி குமாரின் வீட்டுக்குள் புகுந்து அவரது மகளுக்கு முத்தம் கொடுத்து அவமானப்படுத்துகிறது. கொதிக்கும் குமார், அவர்களைத் தாக்க அடியாட்களை ஏவுகிறார்.

அங்கிருந்து தப்பி சென்னை வரும் 4 நண்பர்களும் திருட்டு வேலையில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் மாணவி ஷம்முவை அவரது மாமன் ரவிமரியா காசுக்காக விற்க முயல்கிறார். அவரிடமிருந்து ஷம்முவை காப்பாற்றும் நண்பர்கள் குழு வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற ஷம்முவின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்கின்றனர். விதியின் விளையாட்டு வேறுவிதமாக இருக்க, ரவுடி கூட்டத்திடம் சிக்கும் ஹரீஸ் கோஷ்டி என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.

ஈட்டியும், கோணிப் பையும் கையுமாக பின்னங்கால்கள் பிடறியில் பட, தாவி ஓடும் ஹரிஸ், கோபால், அலெக்ஸ், லோகேஷ் பன்றியை சுற்றிவளைத்து கொல்லும் முதல் காட்சியிலேயே தங்களது கதாபாத்திரங்களை பதிவு செய்கின்றனர். வம்பை விலைக்கு வாங்கும் இவர்கள் வித்தியாசமாக பிரச்னையை அணுகுகின்றனர். கோவில் தேரின் தூசி துடைத்ததற்காக சிறுமியை தாக்கிய குமாரின் வீட்டை கல்லால் தாக்க செல்லும் 4 பேரும் மாத்தி யோசித்து அவரது மகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு ஜூட் விடுவதும், மலைப்பகுதியில் மறைந்திருக்கும் தங்களை பிடிக்க வரும் போலீஸ் அதிகாரியை மொட்டை அடித்து அனுப்புவதும் செம குறும்பு. சென்னைக்கு தப்பி வரும் நண்பர்களை மறுபடியும் திருட்டு வேலைகளை செய்யவிடாமல் இயக்குனர் மாத்தியோசித்திருந்தால் கதைக்களம் திசை மாறி பயணித்திருக்கும்.

பெண்மை கலந்த வில்லன் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் ரவி மரியா. அவரிடமிருந்து ஷம்முவை காப்பாற்றும் நண்பர்கள், அவரை ஆஸ்திரேலியா சென்று படிக்கவைக்கப் போவதாகக் கூறுவது நம்பும்படி இல்லை. அதற்காக மறுபடியும் கொலை, கொள்ளை என்று அடுக்கடுக்கான குற்றங்களை செய்ய வைத்து, கடைசியில் என்ன தண்டனை கிடைக்கப்போகிறதோ என்று யோசிக்க வைத்துவிடுகிறார்கள். நாயகர்களுடன் ஷம்மு, நடந்தும், ஓடியும் காலம் கழிக்கிறார். தம்பியை கைது செய்துவிட்டார் என்பதற்காக போலீஸ் அதிகாரி மனைவியை கடத்திச் செல்லும் ரவுடி ஜே.எஸ், தனது சின்னவீட்டுடன் சல்லாபத்தில் ஈடுபடுவதை பார்க்கச் சொல்லி வற்புறுத்துவது குமட்டல். தொடக்கம் முதல் குப்பை காட்டிலேயே காட்சிகளை வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். குரு கல்யாண் இசை கைகொடுக்கவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் சென்டிமென்ட்டை இன்னும் கூட்டியிருந்தால் படம் மனதை தொட்டிருக்கும்.


மொத்தத்தில் 'மாத்தியோசி' - சென்டிமென்ட் தேவை!

- நன்றி தினகரன்


தினமலர் விமர்சனம்

ம..ம...ம...ம..மாத்தியோசி என இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை ஒரே பல்லவியையும், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பாட்டையும் இசையமைப்பாளரிடம் கேட்டு வாங்கி போட்டிருக்கும் இயக்குனர், மாத்தி மட்டுமல்ல... யோசிக்கவே மறந்திருக்கும் படம் மாத்தியோசி என்றால் மிகையல்ல!

சேரிக்குள் கோவில் தேரை இழுத்து வந்து விட்டு குதூகலிப்பது... காலனி பெண்ணை கல்யாணம் கட்டிக் கொள்வதாக கூறி கற்பழித்து கொலை செய்யும் உயர்சாதி ஊர் பெரிய மனிதரின் மகனை போட்டுத்தள்ளுவது உள்ளிட்ட இன்னும் பல மாத்தியோசி(?) சமாச்சாரங்களை செய்யும் மதுரைப் பக்கத்து தாழ்ந்த சாதி இளைஞர்கள் நால்வர், இதையெல்லாம் உயர்சாதி திமிரோடு தட்டிக் கேட்கும் இன்ஸ்பெக்டரைகடத்தி, அவருக்கு மொட்டை அடித்துவிட்டு சென்னை சிட்டிக்கு வந்து, இதே மாதிரியான திமிர்தண்டி காரியங்களை செய்து பிழைப்பு நடத்துவதும், அவர்களை நம்பி வந்த பெண்ணுக்கு அடைக்கலம் தருவதும், அதையெல்லாம் கண்டும் காணாமலும் போகும் போலீஸ் ஆபீஸருக்காக ரவுடி ஒருவரை போட்டுத் தள்ளுவதும் அதனால் போய்ச் சேருவதும்தான் மாத்தியோசி படத்தி்ன் மொத்த கதையும்!

ஹரீஷ், கோபால், அலெக்ஸ், லோகேஷ் என நான்கு புதுமுகங்கள் பாவம் இப்படி ஒரு கதைக்கு உயிரை கொடுத்து நடித்திருக்கின்றனர். கதாநாயகி ஷம்மு முந்தைய படங்களைக் காட்டிலும் அழகாக வந்து போகிறார். அரவாணி புரோக்கராக ரவிமரியா அட்டகாசம். பொன்வண்ணன், ஜி.எம்.குமார் உள்ளிட்டவர்களும் இருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் கஷ்டங்களை சொல்கிறேன் பேர்வழி... என காட்சிக்கு காட்சி அவர்களை தரம் தாழ்த்தி காட்டுவது, ரவுடி - போலீஸ் அதிகாரியை பழிவாங்க அவரது மனைவியை கடத்தி வந்து கட்டிப்போட்டு, அவரது கண் எதிரே தன் சின்ன வீட்டோஐ குரூரமாக சல்லாபம் செய்வது... அதனால் அந்த போலீஸ் அதிகாரியின் மனைவி தூக்கில் தொங்குவது... என நிறையவே(!) மாத்தி யோசித்திருக்கும் இயக்குனர் நந்தா பெரியசாமிக்கு, புதியவர் குரு கல்யாணத்தின் இசையும், விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவும் பெரியபலன்!

மாத்தியோசி : மாத்தியோசிக்க வேண்டியது தயாரிப்பாளர்தான்!


-நன்றி தினமலர்

No comments :

Post a Comment