Wednesday, March 17

அழகான பொண்ணுதான் விமர்சனம்


தினகரன் விமர்சனம்

பதினெட்டு வயது விடலை பையனுக்கு 30 வயதை தாண்டிய ஆன்ட்டி மீது காதல் பிளஸ் காமம். இந்த ஒரு வரிக்கதையை கமர்ஷியலாகவும் எடுக்கலாம், ஆர்ட் பிலிமாகவும் எடுக்கலாம். இரண்டும் கெட்டானாக வந்திருக்கிறது ‘அழகான பொண்ணுதான்'. நமீதா என்று நினைத்துக் கொண்டு அம்மாவை வர்ணிக்கிறார் ஹீரோ. அப்பாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

நமீதாவை பார்த்து பித்து பிடித்துப் போயிருக்கும் ஹீரோவுக்கு அவரது மாமா கொடுக்கும் ட்ரீட்மென்ட் வக்கிரத்தின் உச்சம். சர்ச்சில் ஹீரோ பேசும் வசனங்கள், சின்ன குழந்தைகள் குச்சி ஐஸ் கேட்டு அழுவது போல இருக்கிறது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஒரு ராணுவ அதிகாரியின் மனைவி யாருமற்ற அனாதை போல ஊரில் வசிப்பதும். அங்கு ஒரு ஆண் கூட யோக்கியனாக இல்லாமல் அவரை விழுங்கிவிட துடிப்பதும், கடைசியில் ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் அவரை அடித்து உதைத்து ஊரைவிட்டே விரட்டியடிப்பதும்... என்ன கொடுமை சார் இது? இந்த மாதிரி கதையைத்தான் ரூம் போட்டு யோசிக்கிறாங்க போலிருக்கு.

30 வருடங்களுக்கு முன்பு நடக்கிற கதையில் நவீன கார்கள் சினிமா சி.டிக்கள் இடம் பெறுவது என்று கவனக் குறைவுகள் ஏராளம். கிளைமாக்சில் 'அழகா பொறந்தது என் தப்பா?' என வசனம் பேசி உருக்கமாக நடிக்க முயல்கிறார் நமீதா. கடைசிவரை ஹீரோவும், நமீதாவும் பேசிக் கொள்ளாதது, ஹீரோவின் மனசாட்சியாக மயில்சாமி வருவது என்று ஆங்காங்கே சில விஷயங்களை ரசிக்கலாம். ஆனால் முழுமையாக ஒரு படத்தை வழங்கியதில் வழுக்கி இருக்கிறார் இயக்குனர் திரு.

மொத்தத்தில் 'அழகான பொண்ணுதான்' வக்கிரத்தின் உச்சம்!


- நன்றி தினகரன்


தினமலர் விமர்சனம்

நடுத்தர வயது அம்மணி மீது சிறுவயது பையனுக்கு ஏற்படும் காதலும், காமமும்தான் அழகான பொண்ணுதான் படத்தின் ‌மொத்த கதையும்! அதை அழகாகவும் சொல்லாமல், ஆபாசமாகவும் சொல்லாமல் அய்யோ பாவம் என சொல்லியிருப்பதுதான் பலவீனம்!

கதைப்படி இராணுவத்தில் இருக்கும் கணவனின் வரவுக்காக காத்திருக்கும் நமீதாவை அடைய முடியாத வருத்தத்தில் ஆண்களும், அவரை வளைத்து விடுவார்களோ தங்கள் வீட்டு ஆண்கள் எனும் பயத்தில் பெண்களும் அந்த ஏரியா முழுக்க வயது வித்தியாசமின்றி நமீ பற்றிய சிந்தனையிலேயே இருக்க., நம் விடலைப் பருவத்து ஹீரோ மட்டும் நமீயோடு கனவு‌லகிலேயே வாழ்கிறான். கட்டில் அதிரவும் செய்கிறான். கணவன் இருக்கிறான் நமீக்கு என தெரிந்தும், அவன் மரித்துப் போக வேண்டும் என நமீ போகும் சர்ச்-க்கே சென்று ‌சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இயேசுவிடம் வேண்டுகிறார். இப்படி எல்லாமும் செய்யும் ஹீரோ நமீதாவை அவரது புருஷன் இறந்ததும், தங்களது சுய லாபத்தறி்காக ஊரே திரண்டு நடத்தை கெட்டவள் என அடித்து உதைத்து துரத்தும்போது அரவணைத்தோ, அடைக்கலம் தந்தோ அழைத்து சென்றிருந்தால் சபாஷ் சொல்லியிருக்கலாம்!

விடலைப்பருவத்து ஹீரோவாக புதுமுகம் கார்த்திக். துள்ளுவதோ இளமை தனுஷை ஞாபகத்தில் வைத்துக் கொண்டே நடிக்க வந்திருப்பார் போலும். நமீதா சோக காட்சியிலும் கவர்ச்சி பதுமையாக பளீச் என்று பவனி வருகிறார். பார்த்திபன், நிழல்கள் ரவி உள்ளிட்டவர்களும் இருக்கிறார்கள்

மெலினா எனும் சவுத்ஆப்ரிக்கன் படத்தை உல்டா செய்திருக்கும் இயக்குனர் திரு, அதை உருப்படியாக செய்திருந்தால் ஜெயித்திருக்கலாம். நாமும் ரசித்திருக்கலாம்!!

அழகான பொண்ணுதான் : நமீதா மட்டுமல்ல; அய்யோ பாவம் நாமும்தான்

-நன்றி தினமலர்

No comments :

Post a Comment