Monday, March 22

முன்தினம் பார்த்தேனே விமர்சனம்



தினகரன் விமர்சனம்

அழகாகவும், மாடர்ன் பொண்ணாவும் வேண்டும்; அதே நேரத்தில் ஆச்சாரமான குடும்பத்துப் பெண்ணாகவும் இருக்க வேண்டும். இதுதான் ஹீரோ சஞ்சய் தன் வருங்கால மனைவிக்கு போட்டு வைத்திருக்கும் ஸ்கெட். இந்த இலக்கணத்துக்குள் முதலில் வருகிறார் பூஜா. அவர் மீது லவ்வை வளர்த்து சொல்லப்போகும் நேரத்தில், தனக்கு பத்து மாதத்துக்கு முன்பே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதைச் சொல்கிறாள். அடுத்து நண்பர்களால் அறிமுகப்படுத்தி வைக்கப்படும் ஏக்தா. டான்ஸ் டீச்சர். அவளை காதலுடன் நெருங்கும் போது, அவள் ஏற்கெனவே ஒருவனை காதலித்து அது கசந்து போயிருப்பது தெரிகிறது. ஆறுதலாக வந்தவனை அணைத்துக்கொள்ள நினைக்கிறார் அவர். ஆனால் அவளிடமிருந்து விலகும் சஞ்சய், தன்னை ஒரு தலையாய் காதலிக்கும் லிஸ்னா காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். சஞ்சய் ஏக்தாவை பிரிந்தது ஏன்? ஏக்தா என்ன ஆனார்? லிஸ்னாவின் காதல் நிறைவேறியதா என்பதை சொல்கிறது மீதிக் கதை.

ஹீரோ சஞ்சய், கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். குறும்பு பார்வையும், விளையாட்டுத்தனமுமாக ஜாலி உலா வருகிறார். மெல்லிய உணர்வுகளைக் கூட அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஏக்தாவின் ரகசியம் தெரிந்த பிறகும் அமைதியாக அவரிடம் பேசிச் செல்லும் காட்சி ஒரு சோறு பதம். வழக்கம்போல ஹீரோவின் நண்பர்கள் காமெடி செய்கிறார்கள். கல்யாண பெண்ணிடம், ‘ஃபுல் ரம் அடிச்சாலும் ஆடாம நீ நிற்கிறது, உன் புருஷனுக்கு தெரியுமா’ என்று போட்டு வைப்பது, மியூசிக் அகாடமியில், ‘இது உங்க பொண்ணா’ காமெடியும் குபீர் வெடிகள்.
ஹீரோயின்களில் ஏக்தா கடைசி வரை ஏக்கத்துடனேயே இருக்கிறார். மெல்லிய சோகம், சின்ன கோபம் என்று நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். பூஜாவும், லிஸ்னாவும் வந்தார்கள் சென்றார்கள் வகை.

தமன் சாய் இசையில் ஹாரிஸ் ஜெயராஜின் சாயல். மேற்கத்திய மெலடிகளால் கவர்கிறார். பின்னணி இசை மெலிதாகவும், இனிமையாகவும் இருக்கிறது. வின்சென்டின் கேமரா பாடல் காட்சிகளில் வெளிநாட்டின் அழகை அப்படியே பதிவு செய்கிறது. 2010&ம் ஆண்டு காதல், எதை நோக்கி எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்சிப்படுத்துவதில் இயக்குனர் மகிழ் திருமேனி வெற்றி பெற்றிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும், குரு கவுதம் மேனனின் சாயல்.

படத்தை அழகாக எடுத்தவர் கதையை அப்படிச் சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார். ஏகப்பட்ட கேரக்டர்கள் வந்து போவதால், ஹீரோ, ஹீரோயின்கள் தவிர அந்த குண்டு நண்பரும், போதை பெண்ணும் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள். கதை வெளிநாட்டிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடப்பதும் குழப்பம். காதல் படம் என்றாலும் ஹீரோவுக்கு அடுத்தடுத்த பெண்கள் மீது உடனடி காதல் வருவதென்பது லாஜிக்காக இல்லை. வீண் குழப்பம் தவிர்த்து, கேரக்டர்களை குறைத்து, காட்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதைக்கும் கொடுத்திருந்தால் ஹைடெக் காதல் படமாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில் 'முன்தினம் பார்த்தேனே' - 'பார்க்கலாம்'


-நன்றி தினகரன்

No comments :

Post a Comment