Wednesday, March 24

கச்சேரி ஆரம்பம் விமர்சனம்


தினகரன் விமர்சனம்
அழகம் பெருமாள், ஸ்ரீரஞ்சனியின் அவ்வளவு சொத்துக்கும் ஒரே செல்லப்பிள்ளை ஜீவா. அப்பா சம்பாதித்ததை மற்றவருக்கு தானம் கொடுக்கும் வள்ளல். ‘டேய், கொடுக்கிறது சுலபம். சம்பாதிக்கிறது கஷ்டம்’ என்று நொந்துகொள்ளும் அப்பா, ‘நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில் எனக்கு வேட்டியும், உன் அம்மாவுக்கு புடவையும் எடுத்து கொடுடா’ என்று உருகுகிறார். இது போதாதா? ரோஷம் பொங்க, கடிதம் எழுதிவிட்டு, சென்னைக்கு எஸ்ஸாகிறார் ஜீவா.

வடிவேலுவின் கடையில் வேலைக்கு சேரும் அவர், மோத வந்த தண்ணீர் லாரியில் இருந்து தன்னை காப்பாற்றிய பூனம் பஜ்வாவை காதலிக்கத் தொடங்குகிறார். பூனத்தை யார் பார்த்தாலும், ஜே.டி.சக்ரவர்த்தியின் அடியாட்கள் நையப்புடைக்கிறார்கள். ஏன், எதற்கு? என்று ஜீவா கேட்கும்போது, பிளாஷ்பேக்குகிறார் பூனம். ஒரு மழைநாளில் பூனத்தை காமுகர்களிடம் இருந்து காப்பாற்றும் சக்ரவர்த்தி, பிறகு பூனம் நினைவிலேயே மூச்சுவிடுகிறார். ஒரு முறையாவது தன்னிடம் ‘ஐ லவ் யூ’ சொல்ல மாட்டாரா என்று ஏங்க, பூனம் கண்டுகொள்வதே இல்லை. இதனால், பூனத்திடம் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை காவு வாங்குகிறார். இதில் ஜீவாவும் ஒருவர் என்கிறார் பூனம்.

முள்ளை முள்ளால் எடுக்கிறேன் என்று, சக்ரவர்த்தியிடம் வேலைக்கு சேர்ந்து, ‘பூனம் பஜ்வாவை எப்படியாவது உன்னுடன் சேர்த்து வைக்கிறேன் அண்ணா’ என்று, தம்பியாக மாறுகிறார் ஜீவா. கடைசியில் பூனம் பஜ்வா சக்ரவர்த்தியை மணக்க சம்மதிக்கிறார். பிறகு ஜீவாவின் காதல்? அதுதான் கிளைமாக்ஸ்.

வடிவேலுவுடன் சேர்ந்து ஜீவா அடிக்கும் லூட்டிகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. சக்ரவர்த்தியின் ஆட்களுடன் மோதும் ஆக்ரோஷ சண்டைக் காட்சிகளில், எதிரிகளின் எலும்புகள் நொறுங்குகிறது. பாடல் காட்சிகளில் ஜீவாவின் அதிவேக ஸ்டெப்ஸ், ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பூனத்தை அவர் விரட்டி விரட்டிக் காதலிப்பது, சக்ரவர்த்தியுடன் பழகி அவருக்கே ஆப்பு வைப்பது என தெனாவட்டு காட்டியிருக்கிறார். பர்மா பஜார் வியாபாரிகள் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் தீபாவளி கேரக்டரில் வரும் வடிவேலு, கிரேன் மனோகர், கிங்காங் கோஷ்டியின் காமெடி, ரகளை.

ராயபுரம் சிவமணியாக வரும் சக்ரவர்த்தி, காதலுக்காக உருகும் வித்தியாசமான ரவுடி. ‘3 வருஷமா அவளையே நினைச்சுட்டிருக்கேன். இப்பதான் ஐ லவ் யூ சொன்னா’ என்று, ஜீவாவுக்கு பூனம் சொன்ன வார்த்தையை தனக்கு சொன்னதாக நினைத்து உருகும்போது, கவனிக்க வைக்கிறார். கிளாமருக்காக ஒரு பாடலில் வந்துபோகிறார் நிஷா கோத்தாரி. பூனம் பஜ்வாவிடம் பசுமை இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோயினுக்கு என்னென்ன வேலையோ அதை செய்திருக்கிறார். பூனத்தின் கடைக்கண் பார்வைக்காக ரோஜாப்பூவுடன் அலையும் காதல் தண்டபாணியின் முடிவு, ‘காதல்’ படத்தின் கிளைமாக்ஸில் வரும் பரத்துடன் முடிச்சு போட்டதை ரசிக்கலாம்.

வைத்தியின் ஒளிப்பதிவு, காட்சிகளை வேகமாக நகர்த்துகிறது. பாடல்களை கமர்சியல் பஞ்சாமிர்தமாக கொடுத்துள்ள இமான், ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார். பின்னணி இசையில், இரைச்சலைக் குறைத்திருக்கலாம். மாபெரும் ரவுடி சக்ரவர்த்தி, திடீரென்று வரும் ஜீவாவை நம்பி, காதலியுடன் தன்னை சேர்த்து வைப்பார் என்று நம்புவதும், தம்பியாக அவரை ஏற்பதும் காதில் பூச்சுற்றும் ரகம். சக்ரவர்த்தியின் சித்ரவதைக்கு ஆளானவர்களைப் பற்றி ஒரு முறை கூடவா போலீஸ் விசாரிக்காது? இன்னும் எத்தனை படங்களில் இரும்பு குடோனில் கிளைமாக்ஸ் சண்டையை வைத்து, மழை பொழியச் செய்வார்களோ தெரியவில்லை. ஜனரஞ்சகப் படத்தைக் கொடுப்பதில் ஆர்வம் காட்டிய இயக்குனர், இன்னும் உழைத்திருக்கலாம்.

மொத்தத்தில் 'கச்சேரி ஆரம்பம்' - 'கமர்சியல் பஞ்சாமிர்தம்'



-நன்றி தினகரன்

No comments :

Post a Comment