Tuesday, April 6

பாடக சாலை விமர்சனம்


தினமலர் விமர்சனம்

காதலால் பல வருடங்களுக்கு முன் பிரிந்த ஊர் மீண்டும் அதே காதலால் இணையும் கதை!

ஜாதி விட்டு ஜாதி காதலித்த ஜோடி பல வருடங்களுக்கு முன்பே ஊரை விட்டு ஓடிப்‌போக., அதனால் ஊர் ரெண்டு பட்டுக் கிடக்கிறது. அதை எப்பாடு பட்டாவது ஒன்று சேர்த்து விட வேண்டுமென இளைஞர்கள் முயற்சிக்கிறார்கள். இந்நிலையில் ஓடிப்‌போன காதல் ஜோடியின் மகள், அதே ஊருக்கு படிக்க வருகிறாள். அவளை வைத்‌தே அந்த ஊரை ஒன்று சேர்க்க, இரண்டு பக்கத்திலும் இளைஞர்கள் முயற்சிக்கிறார்கள். இரண்டு பக்கமும் கதாநாயகிக்கு முறை மாமன்கள் இருப்பதால் ஊரில் மீண்டும் பிரச்னை. ஊர் ஒன்று சேர்ந்ததா? கதாநாயகி யாரை கைப்பிடித்தார்? இரண்டு நாயகர்களில் யார் விட்டுக் கொடுத்தார்? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது பாடகசாலை படத்தின் மீதிக்கதை!

அரவிந்த், சத்யா என இரண்டு நாயகர்கள். ஸ்ருதி கதாநாயகி. ப்ரீத்தி புஸ்பன் இரண்டாம் நாயகி. சஞ்சய் வில்லன் என இந்த ஐந்து புதுமகங்களில் ஸ்ருதி, சஞ்சய் இருவரும் நம்பிக்கைக்குரிய வரவு. சத்யாவும் ஓ.கே.! போண்டாமணி, சிசர் மனோகர், ஷிவானந்தம் என மூன்று காமெடியன்களின் குஞ்சுமணியாக வரும் ஷிவானந்தம் சூப்பர்.

ஹித்தேஷின் இசையில் கரிசல்முத்து எழுதியுள்ள உயிரின் உயிரே... பாடலும், பி.கே., ஷிவாஸ்ரீ எழுதியுள்ள நிலவே பனியோ... பாடலும், கோவை முஸ்தபா எழுதி பாடியுள்ள தெருக்கூத்து... பாடலும் யார் இந்த ஹித்தேஷ் என கேட்க வைக்கிறது. பேஷ்! பேஷ்!!. ராமகிருஷ்ணனின் நடன அமைப்பில் பாடல் காட்சிகள் இப்படத்திற்கு ‌பெரும் பலம்!

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் புதியவர் தமிழ் .ஜெ., ஒளிப்பதிவிலும், இயக்கத்திலும் கோட்டை விட்டிருக்கிறார். பாவம்!

பாடகசாலை படத்தின் கேட்சிங்- கேப்ஷன் இனிமேல்தான் படிக்கப்போறோம் என்பதாகும். இப்படத்தின் தயாரிப்பாளர் அனில்.டி., இப்படத்தை தயாரித்ததன் மூலம் நிறைய படித்திருப்பார் என்பது புரிகிறது. தமிழ்.ஜெ., நிறைய படிக்க வேண்டும் என்பதும் தெரியவருகிறது.

பாடகசாலை : பாலைவனச் சோ‌லை அல்ல...!

No comments :

Post a Comment