Monday, April 26
ரெட்டச்சுழி விமர்சனம்
தினமலர் விமர்சனம்
இமயமும், சிகரமும் ரெட்டச்சுழி எனும் டைட்டில் கார்டு மற்றும் சென்சார் சர்டிபிகேட்டிலேயே தெரிந்து விடுகிறது, இது இயக்குனர் இமயம் பாரதிராஜாவையும், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பது...
கதைப்படி ஊர் பெரிய மனிதர்களான ராமசாமி வீட்டு வாண்டுகளுக்கும், சிங்காரவேலர் வீட்டு வாண்டூஸ்களுக்கும் இடையில் மட்டுமல்ல... பெரிய மனுஷங்க இருவருக்குமிடையில் கூட செத்தாலும், வாழ்ந்தாலும் முகத்துல முழிக்கக் கூடாதுங்கிற அளவுக்கு பகை. எதிர் எதிர் வீட்டில் இருந்து கொண்டு இப்படி இரண்டு குடும்பமும் வெறுப்பு வளர்த்து வந்தாலும், இந்த வீட்டுப் பையனுக்கும், அந்த வீட்டுப் பொண்ணுக்கும் இடையில் காதல் நெருப்பு பற்றிக் கொள்கிறது. அப்புறம்? அப்புறமென்ன... அந்த காதல் கசிந்து உருக... இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்ததா அல்லது மேலும் பிரிந்ததா என்பது மீதுக்கதை!
இந்த கதையை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியுமோ... அத்தனை வித்யாசமாகவும், அதில் பாதி விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தாமிரா. சில இடங்களில் அந்த வித்தியாசமே சினிமாத்தனத்தையும், செயற்கைத் தனத்தையும் கூட்டி விடுவதுதான் ரெட்டச்சுழி படத்தின் பலவீனம். ஆனால் அந்த பலவீனத்தையும் பவ்யமாய் பகுமானமாய் மறைந்து குறைத்து காட்டுகிறது செழியனின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் பின்னணி மற்றும் பாடல்கள் இசையும். இவை இரண்டும் மாதிரியே ஆங்காங்கே வெளிப்படும் இயக்குனர் தாமிராவின் கிரியேட்டிவ் குறும்புகளும், சமூக அக்கறைகளும், ஆதங்கங்களும் படத்தின் பெரும் பலம் என்றால் மிகையல்ல.
குறிப்பாக, நீ பேசினாலே பிரச்னை ஆயிடும்... என குஷ்பு எனும் குழந்தை கேரக்டர் மூலம் ஜாலியாக சமூகத்திற்கு சவுக்கடி தர முனைந்திருக்கும் இயக்குனர், ஓர் இடத்தில் இலங்கை தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் பெயரில் விளையாட்டுத் திடல் வைத்து, தன் தமிழ் - தமிழர் பற்றையும் காட்டி இருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.
கே.பாலசந்தர், பாரதிராஜா, கருணாஸ், ஆரி, அஞ்சலி, அழகம்பெருமாள், இளவரசு, ஜெயச்சித்ரா, பிரகதி, சுப்பிரமணியபுரம் மோகன் உள்ளிட்டவர்களுடன் இந்த பக்கம் ஒரு டஜன், அந்த பக்கம் ஒரு டஜன் குழந்தைகள் என படம் முழுக்க பாத்திரங்கள் கூட்டமாக இருந்தாலும், இராமசாமியாக காங்கிரஸ்காரராக வரும் பாலசந்தருக்கும், காம்ரேட் சிங்காரவேலராக கம்யூனிஸ்காரராக வலம் வரும் பாரதிராஜாவுக்கும்தான் படம் முழுக்க வேலை. அவர்களைப் போல ஹீரோ ஆரி(மூர்த்தி)க்கும், ஹீரோயின் அஞ்சலி (சுசீலா)வுக்கும் இடையே ஏற்படும் காதலும், அதைத் தொடர்ந்து கிளம்பும் கலாட்டாக்களும், பிளாஷ்பேக்களும்தான் ரெட்டச்சுழி படத்தின் கதை, களம் எல்லாம். என்றாலும் காதல் ஜோடியில் அஞ்சலியும், கலாட்டா தாத்தாக்களில் பாரதிராஜாவும் கலக்கியுள்ள அளவிற்கு காதலன் புதுமுகம் ஆரியும், பாலசந்தரும் பிரகாசிக்கவில்லை என்பது குறை. அங்காடித்தெரு படத்தில் அப்படி நடித்த பெண்ணா இப்படி டீச்சராக அசத்தியிருக்கிறார் என கேட்க வைக்கிறார் அஞ்சலி.
ப்ளாஷ்பேக்கில் தன் தங்கையின் குழிதோண்டி புதைத்து, அவரது சாவிற்கு தானே காரணமாக இருந்து கொண்டு பாரதிராஜா மீது பழிபோட்டு அவர் மீதும், அந்த குடும்பத்தின் குழந்தைகள் மீதும் பாலசந்தர் பகைமை பாராட்டுவதும், பிடிவாதம் கொள்வதும் செயற்கைத்தனமாகவும், சினிமாத்தனமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஸ்டைலுக்கே காரணகர்த்தாவான பாலசந்தரின் ஸ்டைலும், சேஷ்டைகளும் ஒருவேளை பாலசந்தரை பிடித்தவர்களுக்கு வேண்டுமானால் பிடிக்கலாம். அதேநேரம் பாரதிராஜாவின் இயல்பான நடிப்பு அவரை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும் என்பது நிதர்சனம். சிறுவயது பாரதிராஜாவாக வலம் வரும் இளைஞரும் இந்த பாராட்டுக்கு உரித்தானவரே.
அதெப்படி, இளம்பிராயத்தில் பிளாஷ்பேக்கில் சிங்காரவேலரின் காதலிக்கும் கல்யாணத்திற்கும் கொள்ளி வைத்துவிட்டு, அத்தனை பேர் நிரம்பிய பள்ளிக்கூட பெற்றோர் ஆசியர் கூட்டத்தில் குழந்தை இல்லாதவன் குடும்பம் இல்லாதவன் என பாரதிராஜாவை பாலசந்தரால் எப்படி பரிகாசிக்க முடிகிறதோ... தெரியவில்லை...? இதை பா.ரா. போஸ்வர்களை தேடிப்பிடித்து கிழிக்கும் பாலசந்தரின் குழந்தைத்தன குறும்பாகவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குரூரமாகவும் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதுமாதிரி சில காட்சிகளால் பாலசந்தரை பாரதிராஜா ஓவர்டேக் செய்து ஓரங்கட்டி விடுகிறார் நடிப்பில் என்றால் பொய்யல்ல. ஒருவேளை நிஜத்தில் பாலசந்தர் பலரை நடிக்க வைத்தவர் என்றாலும் பாரதிராஜா நிஜமாகவே நடிக்க வந்தவர் என்பதால் இந்த வெற்றி இரண்டாமவருக்கு கிடைத்திருக்கும் போலும்!
ஆக மொத்ததில் இமயமும் சிகரமும் தயாரிப்பாளர் ஷங்கர் எனும் பிரமாண்டத்தால் பிரகாசித்தாலும் கார்த்திக் ராஜாவின் அசத்தல் பாடல்களும், பின்னணி இசையும் செழியனின் அழகிய ஒளிப்பதிவும்தான் ரெட்டச்சுழி. குறையோ... நிறையோ.... பசங்க படம் மாதிரி ரெட்டச்சுழி தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான மற்றுமொரு பிள்ளையார் சுழி!
-நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment