Wednesday, June 2

கனகவேல் காக்க விமர்சனம்


தினமலர் விமர்சனம்

நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கிலும் சாட்சிகளின் அடிப்படையில் மட்டும் தீர்ப்பு சொல்லும் வழக்கத்தை விட்டு, உண்மை நிலவரம், மனிதாபிமானம் உள்ளிட்டவைகளுக்கும் தீர்ப்பில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனும் புதிய நீதியை நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் பரிந்துரைத்திருக்கும் ப(பா)டம்!.

கதைப்படி திறமையான வக்கீல், சட்டத்தின் ஓட்டை உடைசல்கள்..., சந்து ‌பொந்துகளை பயன்படுத்திக் கொண்டு செய்த படுபயங்கர குற்றங்களில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகளை சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு போட்டுத் தள்ளுகிறார் கோர்ட் டவாரியான ஹீரோ கரன். அவர் இவ்வாறு செய்யக் காரணம் நேர்மையான நீதிபதியான அவரது அப்பாதான். நீதிபதியான அவர் எடுத்த ஓர் முடிவு உள்ளூர் எம்.எல்.ஏ. கோட்டா சீனிவாசராவை உசுப்பி விட, அவர் கரனின் பாசமான குடும்பத்தையே தீர்த்துக் கட்ட, அதைப்பார்த்து கரனின் நீதிபதி அப்பாவும் மனநிலை பாதிக்கப்படுகிறார். இதனால் சட்டம் படித்து முடித்த கரன், வக்கீல் ஆகாமல் கோர்ட் டவாலியாகி, பணத்தாலும் பலத்தாலும் நீதிதேவதையின் கண்களில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகளை கொடூரமாக ‌கொலை செய்கிறார். தன் தந்தையின் அந்த நிலைக்கும், தனது இந்த நிலைக்கும் காரணமான கோட்டா சீனிவாசராவ் அதற்குள் அமைச்சர் ஆகிவிட, அவரையும் போட்டுத் தள்ளப் பார்க்கும் கரன், அதில் வெற்றி பெற்றாரா? அதற்குள் அவரையும் கொலைகார குற்றங்களையும் காவல்துறை கண்டுபிடித்ததா? என்பது உள்ளிட்ட இன்னும் பல ‌வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது கனகவேல் காக்க படத்தின் மீதிக் கதை! இதனூடே நாயகி ஹரிப்ரியா - கரன் இடையே ஏற்படும் காதல் - மோதல் கலாட்டாக்களையும் கலந்து கட்டி படம் பிடித்து நம் கண்ணை கலர்புல்லாக்குகிறார் அறிமுக இயக்குனர் கவின்பாலா.

கரன், கோர்ட் டவாலியாக நீதிபதி முன் உஷ் சொல்லி நடந்து வரும்‌போதும் சரி, கொலையாளியாக குற்றவாளிகளை ‌கொடூரமாக தீர்த்துக் கட்டும்போதும் சரி... நடிப்பில் மிரட்டியிருக்கிறார். துரத்தி துரத்தி காதலிக்கும் ஹரிப்ரியாவிடம் தன் நிலைமையை சொல்ல முடியாமல் தவிர்க்கும் இடங்களிலும் சரி... காதலியுடன் கைப்பிடித்து டூயட் பாடும் போதும் சரி... கரன் கச்சிதமாக தன் பாத்திரத்துடன் ஒன்றிப் போய் பரிணாமித்திருக்கிறார். ‌பேஷ். ‌பேஷ்..!

புதுமுகம் ஹரிப்ரியா, வழக்கம்போல ஆக்ஷன் தமிழ் படத்தில் ஹீரோயினுக்கு என்ன வேலையோ, அதை சரியாக ‌செய்திருக்கிறார். வில்லன் கோட்டா சீனிவாசராவும், வையாபுரியும் செய்யும் காமெடி கலாட்டாக்கள் செம சிரிப்பு. ஆனாலும் கோட்டாவின் குரலும், உருமலும் பல இடங்களில் பயமுறுத்துகிறது. நல்ல வில்லன். இவரை மாதிரியே நீதிபதி அவினாஷ், சம்தபத், பாண்டு, ராஜ்கபூர், சபீதா ஆனந்த் உள்ளிட்ட பாத்திரங்களும், தங்கள் பங்கை சரியாக செய்து சபாஷ் வாங்கி விடுகிறார்கள்.

மந்திரியே தனது பாதுகாப்பு அதிகாரியை தீர்த்துக் கட்ட ஆள் ஏற்பாடு செய்வது, படிக்க வழிதேடி தன்னிடம் வரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் கல்யாளர், வயதானவர்களிடம் வீடு, மனை தருவதாக பணத்தை வாங்கிக் கொண்டு தான் ரியல் எஸ்டேட் பிஸினசே செய்யவில்லை என பல்டி அடிக்கும் தொழிலதிபர் என சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் இயக்குனர் கவின்பாலா, சில இடங்களில் லாஜிக்கை மீறி மேஜிக் செய்து கனகவேல் காக்க படத்தை கலக்கலாக தூக்கி நிறுத்தி உள்ளார். விஜய் ஆண்டனியின் இசை பலவீனம். ஷாஜியின் ஒளிப்பதிவு பலம்.

கனகவேல் காக்க - சமீபத்திய தமிழ் படங்களில் ரசிகர்களை போரடிக்காமல் காக்கும் படம்!

-நன்றி தினமலர்

No comments :

Post a Comment