Wednesday, June 2

கோரிப்பாளையம் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

பெற்றோர்களின் நடவடிக்கைகளால் தடம் மாறிப்போன நான்கு இளைஞர்களின் கதைதான் கோரிப்பாளையம். 24 வயதில் ஆரம்பிக்கப்பட வேண்டிய அவர்களது அழகான வாழ்க்கை தெரிந்தும், தெரியாமலும் அவர்கள் செய்யும் தவறுகளால் ஆரம்பமாகாமலேயே அழிந்து போவதுதான் கொடூரம்.

பெற்ற அப்பனாலேயே தம்மு, தண்ணி என கெட்டுப்போகும் அழகர், பிள்ளை கண் முன்பே பக்கத்து வீட்டு வாலிபனுடன் கள்ள உறவுகொண்டு அவனே கதியென்று ஓடிப்போகும் தாய்க்கு பிறந்த இனிப்பு முருகன், ஏ, பி, சி, டி 26 எழுத்தில் ஏதாவது ஒரு எழுத்தில் நிச்சயம் தன் தகப்பன் பெயரும் இருக்குமென கருதி ஏ டூ இசட் என தனக்குத்தானே பெயர் சூட்டிக் கொண்டு திரியும் அனாதை இளைஞன், அப்பா இருக்கும்போதே அடுத்து ஒரு கல்யாணம் கட்டிக் கொண்டு அப்பாவையும், தன்னையும் அனாதையாக்கி விட்டுப் போன அம்மா இருக்கும் இடம் தெரிந்தும்... அவரை பார்க்கக் கூட பிடிக்காமல் வாழும் சங்கு கணேசன் இந்த நால்வரும் மதுரை - கோரிப்பாளையம் பகுதி அடாவடிப் பேர்வழிகள். மற்றவர்களின் பார்வையில் வெறும் கஞ்சா குடிக்கிகளாக தெரியும் இவர்களுக்கு அன்பு, அடைக்கலம் உள்ளிட்ட அனைத்தையும் தருவது குடும்ப வாழ்க்கையில் இருந்து ரிட்டயர்டு ஆன மயில்சாமி, எம்.ஜி.ஆர்., நினைப்பில் சுருள்முடியும் கையுமாக டூயட் பாடித்திரியும் சின்னச்சாமி, ஹோட்டல் முதலாளி மகன் அழகப்பா ஆகிய மூவரும்தான்.

இந்த மூவரும் தரும் தைரியத்தில் அநு்த நால்வரும் பண்ணும் காதலும், கலாட்டாக்களும் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் பண்ணாத காதலுக்காகவும், செய்யாத மோதலுக்காகவும் ஊர் பெரிய மனிதர் கழுவநாதனுக்கும், அவரது வாரிசுகள் வருமன், கருத்தப் பாண்டி ஆகியோருக்கும் தெரிந்தும், தெரியாமலும் விரோதி ஆகின்றனர். அந்த விரோதம் நண்பர்கள் நால்வரையும் தீர்த்துக் கட்டியதா? அல்லது ஊர் பெரிய மனிதரையும் அவரது வாரிசுகளையும் போட்டுத் தள்ளியதா? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்கிறது கோரிப்பாளையத்தின் மீதிக்கதை!

அழகராக ஹரீஷ், ஏ டூ இசட்டாக ராமகிருஷ்ணன், சங்கு கணேசனாக இயக்குனர் ஜெகன்நாத், இனிப்பு முருகனாக புதியவர் பிரகாஷ், ஹோட்டல் அதிபர் வாரிசு அழகப்பாவாக ரகுவண்ணன், எம்ஜிஆர் சின்னசாமியாக சிங்கம்புலி, ரிட்டயர்டு பெரிசாக மயில்சாமி என ஹீரோக்களுக்குள்ளும், அவர்களுக்கு உதவுபவர்களுக்குள்ளும் ஒரு சோகத்தையும், சுகத்தையும் வைத்து அழகாக கதை பண்ணி அவர்களை சம்பந்தப்பட்ட பாத்திரமாகவே மிளிரச் செய்திருக்கும் இயக்குனர் இராசு. மதுரவன், வில்லன்களுக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுத்து படத்தை பக்குவமாக இயக்கியிருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.

மேற்படி நட்சத்திரங்களும் பாத்திரம் உணர்ந்து பக்குவமாக நடித்திருப்பது மேலும் ஒரு சபாஷூக்கு வழிவகுக்கிறது. அதேநேரம் கதாநாயகிகள் பூமயிலுவாக வரும் பூங்கொடி, பார்‌வதி - சுவாஷிகா, பேச்சி - ஜாகர்த்தி அகர்வால் ஆகியோருக்கு படத்தில் பார்ட்- டைம் முக்கியத்துவம் கூட தரத் தவறியிருப்பது ஏனோ புரியவில்லை? இளவரசு, ராஜ்கபூருக்கு படத்தில் இருக்கும் முக்கியத்துவம் கூட கதாநாயகிகளுக்கு இல்லாதது படத்தின் கலர்புல் இமேஜூக்கு கல்தா கொடுத்து விடுகிறது. சாரி! காசுக்கு கொலை பண்ணும் விக்ராந்துக்கு கூட ஒரு பேக்ரவுண்டும், பெரிய பிளாஷ்பேக்கும் வைத்த டைரக்டர் நாயகிகளுக்கு நாலு ஷாட் நச்சுனு வைக்காதது வருத்தம்தான்.

சபேஷ் முரளியின் இசையில் ஏழு பாடல்கள். அதில் பாதி தாளம் போட வைக்கின்றன. மீதி சாதாரணமாய் இருக்கின்றன. பாலபரணியின் ஒளிப்பதிவு கோரிப்பாளையத்தையும், மதுரையையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது. பேஷ்... பேஷ்...!

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் 10 இயக்குனர்களை நடிக்க வைத்து ஒரு பாசப் போராட்டத்தை நம் கண் முன்னே நடத்திக் காட்டிய இயக்குனர் இராசு மதுரவன், சிங்கம்புலி, ஜெகன்நாத், ரவிமரியா, நந்தா பெரியசாமி, ராஜ்கபூர் என அரைடஜன் இயக்குனர்களை மீண்டும் பாத்திரமாக்கி பந்தி வைக்க முனைந்திருக்கிறார். மாயாண்டி குடும்பத்தார் தலை வாழை இலை விருந்து என்றால், கோரிப்பாளையம் இளம் ரவுடியிசங்களுக்கு எதிரான மருந்து எனலாம்.

படத்தின் பின்பாதியில் அடிக்கடி விழும் மரணங்களையும், மரண ஓலங்களையும் சற்றே குறைத்திருந்தால், கோரிப்பாளையம் - தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு வசூல் மழை பொழியும் குபேர பாளையமாக அமைந்திருக்கும்!!

----------------------------
கல்கி விமர்சனம்

* உறங்கா நகரமான மதுரையில் உறக்கத்தை தொலைத்துத் திரியும் கூட்டாளிகளின் கதை
* பார்ப்பவர்களின் உறக்கத்துடன் உற்சாகமும் தொலைந்து போகும் அளவுக்கு இவ்ளோ... ரத்தக்களறி ஏன்?
*ஏற்கெனவே மதுரையை பின்னணியாக கொண்டு வந்து வெற்றி பெற்ற படங்களையும், அந்தப் படத்தின் கேரக்டர்களையும் ஞாபகப்படுத்துவது முக்கியமான குறை.
* உபரியாக, அபத்தமான காட்சிகளும், வாசனங்களும், கண்களையும், காதுகளையும் மூடிக்கொள்ள வைப்பது கூடுதல் குறை.
* எல்லாத் தப்பையும் பிள்ளைகளை செய்ய விட்டு விட்டு பெற்றவர்களை குத்தம் சொல்வது.,... இயக்குநர் ராசு மதுரவன் ஸார், எந்த விதத்தில் நியாயம்?
* மயில்சாமி, சிங்கம்புலி காமெடி, திரையையும் தியேட்டரையும் கலகலப்பாக்குகின்றன.
* ஒளிப்பதிவு, எடிட்டிங் இதையெல்லாம் பேசாமல் விடுவதே நல்லது.
*அழகுக் காட்டேரியே... என்ன இந்த மாற்றமோ... இரண்டு மெலடிகளுகளும் படத்தின் மென்மையான பக்கங்கள்...
* வழி தவறும் கூட்டாளிகளை படம் பிடிக்க வந்த ராசுமதுரவன், எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பதென தெரியாமல் தொலைந்து போயிருக்கிறார்.
கோரிப்பாளையம் வரைபடத்தின் இல்லாத வில்லங்க சிற்றூர்.

No comments :

Post a Comment