Tuesday, June 8

பெண் சிங்கம் விமர்சனம்


நடிகர் : உதய்கிரண்

நடிகை : மீரா ஜாஸ்மின்

இயக்குனர் :பாலி ஸ்ரீரங்கம்


தினமலர் விமர்சனம்
நல்லவர்களுக்கும் நய வஞ்சகர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் பெண்சிங்கம் படத்தின் மொத்த கதையும். அதை, பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் திரைக்கதை அமைத்து, வசனமெழுதி வடித்தெடுக்க முற்பட்டு, தான் ஒரு 'பென்' (பேனா) சிங்கம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் முதல்வர் மு.கருணாநிதி.

கதைப்படி, உதய்கிரணும், ரிச்சர்டும் நண்பர்கள். காட்டிலாக்கா அதிகாரி உதய்கிரணும், அவரது நீதிபதி அம்மா ரோகினியும் சேர்ந்து ரிச்சர்டை விரும்பும் வசதியான வீட்டுப்பெண் புதுமுகம் சுதர்சனா சென்னை அவருக்கு முன்னின்று மணம் முடித்து வைக்கின்றனர். பெண்உரிமை, பெரியார், அண்ணா... என பொதுமேடைகளில் வாய் கிழிய பேசும் ரிச்சர்ட் பெரிய நயவஞ்சகன் என்பது முதலிரவின்போதே சுதர்சனாவிற்கு தெரியவருகிறது. அதுமுதல் அனுதினமும் ரிச்சர்ட் பணத்திற்காக தன்னை படுத்தும்பாட்டை, ஒருகட்டத்தில் உதய்கிரணிடம் சொல்லி நியாயம் கேட்கச் செல்கிறார் சுதர்சனா சென். இருவரும் நியாயம் கேட்க போகும் இடத்தில், உதய்கிரணுக்கு உபத்திரவம் கொடுத்து வரும் வில்லன் கூட்டத்தாருடன் குடியும், கூத்துமாக இருக்கிறார் ரிச்சர்ட். அப்போது வில்லனின் ஐடியாப்படி, தன் மனைவி சுதர்சனாவை சுட்டுக் கொன்று விட்டு பழியை உதய்கிரண் மீது போடுகிறார். இது ஒருபக்கம் என்றால், மற்றொருபக்கம், உதய்கிரணால் ஐ.பி.எஸ். படித்து பெரிய ‌போலீஸ் ஆபீசராக திரும்பும் உதய்கிரணின் காதலி மீராஜாஸ்மின், இந்த கேஸை கையில் எடுத்துக் கொண்டு போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பி தலைமறைவாக இருக்கும் ஹீரோவை தேடி புறப்படுகிறார். உதய்கிரணின் நீதிபதி அம்மாவான ரோகினியோ, தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மகனுக்காக வக்கீலாக அந்த கேஸில் ஆஜராகிறார். மீரா உதய்கிரணை பிடித்தாரா? உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா? ரோகினி சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியாக தெரியும் தன் மகனை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றினாரா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக வி‌டையளிக்க முயற்சிக்கிறது பெண்சிங்கம் படத்தின் மீதிக்கதை.

உதய்கிரண், ரிச்சர்ட், வாகை சந்திரசேகர், தலைவாசல் விஜய், மாணிக்க விநாயகம், ஓ.ஏ.கே.சுந்தர், நிழல்கள் ரவி, மதன்பாப், மீராஜாஸ்மின், சுதர்சனா சென், ரோகினி, ஸ்ரீரஞ்சனி, லாவன்யா, ரம்பா என ஒரு ‌பெரும் நட்சத்திர கூட்டமே படம் முழுக்க பவனி வருகிறது. ஆனால் இவர்கள் எல்லோரையும் விட, அடி ஆடி அசையும் இடுப்பு... பாடலுக்கு அசத்தலாக ஆடி ஓடிப்போகும் ராகவா லாரன்சும், லட்சுமிராயும் அதிக ஸ்கோர் செய்து விடுகின்றனர் என்பது ஹைலைட்.

தேவாவின் இசையில் கல்யாணம் ஆகாத பெண்ணே... எனும் பாவேந்தர் பாரதிதாசன் பாடலும், ஆஹா வினையில் எழுவது எனத் தொடங்கி தொடரும் முதல்வர் கருணாநிதியின் பாடலும் தாளம் போட வைக்கும் சுகமான ராகம் என்றால் வாலியின் அடி ஆடி அசையும் இடுப்பு... எழுந்து ஆட வைக்கும் அதிரடி ரகம்.

விஜய் ராகவ்வின் ‌ஒளிப்பதிவும், வி.டி.விஜயனின் படத்தொகுப்பும் பெண்சிங்கத்தின் பெரும் பலம்!

பெண் விடுதலை, பெண் உரிமை, பெரியார், அண்ணா எல்லாம் மேடையில் மட்டும்தான் என பேசும் ரிச்சர்ட் கேரக்டர் மூலம் வசனகர்த்தா கருணாநிதி, யாரை குத்திக் காட்ட முனைகிறார் என்பது புரியாத புதிர். வீரமங்கை வேலுநாச்சாயர் ஓரங்க நாடகத்திலும், ஐஏஎஸ் படிக்க விரும்பும் நாயகியை, நாயகர் ஐபிஎஸ் படிக்க சொல்லி, அதற்கு விளக்கம் சொல்லும் இடத்திலும், இன்னும் உருக்கமான கோர்ட் சீன்களிலும் அந்த காலத்து கதை வசனகர்த்தா கருணாநிதியை அப்படியே பார்க்க முடிவது ஆறுதல்! அதேநேரம் அவரது கதை, வசனத்தில் இருக்கும் அழுத்தம், திரைக்கதையில் பாலிஸ்ரீரங்கத்தில் இயக்கத்திலும் போதுமான அளவு இல்லாதது வருத்தம்!

பெண் சிங்கம் : முதல்வர் கருணாநிதியை PEN சிங்கம் என மீண்டும் நிரூபித்திருக்கிறது.

No comments :

Post a Comment