Wednesday, June 2

குரு சிஷ்யன் விமர்சனம்



தினகரன் விமர்சனம்

பட்டாசு கம்பெனி முதலாளியின் வாரிசு சரண்யா. அவரை சத்யராஜ் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். சத்யராஜின் தங்கை திருமண விஷயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருகிறது. இந்நிலையில் சத்யராஜின் தங்கை தற்கொலை செய்து கொள்கிறார். தங்கை சாவுக்கு சரண்யாவின் பணத் திமிர்தான் காரணம் என நினைத்து தானும் பணக்காரனாகி அவரை பழிவாங்க புறப்படுகிறார் சத்யராஜ். உள்ளூர் மந்திரியின் பினாமியாகி கோடி கோடியாக சம்பாதிக்கிறார். பட்டாசு தொழிற்சாலை எரிந்து விட்டதால் ஏழையாகி விடுகிறார் சரண்யா. பூ விற்று வாழ்கிறார். அவரது ஏழ்மையை பார்த்து சந்தோஷப்படுகிறார் சத்யராஜ்.

இந்த நேரத்தில் சத்யராஜிடம் அடியாளாக வந்து சேர்கிறார் சுந்தர்.சி. அவருக்கு சேவை செய்து அவரது அன்பை பெற்று சிஷ்யனாகிறார். ஒரு கட்டத்தில் சரண்யாவை தீர்த்துக்கட்ட சத்யராஜ் ஆள் அனுப்பும் போது சரண்யாவை காப்பாற்றுகிறார் சுந்தர். அதன் பிறகுதான் தெரிகிறது, அவர் சரண்யாவின் தம்பி என்று. சின்ன வயதில் காணாமல் போன தம்பி அக்காவின் நிலையை கேள்விப்பட்டு சத்யராஜையும் சரண்யாவையும் சேர்த்து வைக்க வந்திருக்கிறார். ஆனால் சத்யராஜ் சுந்தரை எதிரியாக பார்க்கிறார். குருவும் சிஷ்யனும் மோதுகிறார்கள். வெற்றி பெற்றது யார்? சத்யராஜும், சரண்யாவும் சேர்ந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்.

சத்யராஜும் சுந்தர்.சியும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டும் சவால் விட்டுக் கொண்டும் படத்தை ஜாலியாக கொண்டு செல்ல முயல்கிறார்கள். சவாலுக்கு சவால், எத்தனுக்கு எத்தன், வில்லாதி வில்லன் என அவர்கள் போடும் ஆட்டத்தை ரசிக்கலாம். அதே நேரம், சில இடங்களில் கடுப்பூட்டுகிறது. ஸ்ருதி கவர்ச்சியாக வந்து, சுந்தரை காதலித்து, வெளிநாட்டு கடற்கரையில் டூயட்பாடி தன் பங்கை செய்கிறார். சந்தானம் சிரிக்க வைக்கிறார். முறைப்பெண் ஸ்ருதியை கவர சுந்தர் மூலம் அவர் போடும் திட்டம் சுந்தருக்கே சாதகமாக முடிவதும் இவர் தவிப்பதும் சிரிப்பு. ஆனாலும் அந்த பாத்ரூம் காட்சி கொஞ்சம் அதிகம். Ôவாங்கோண்ணாÕ பாட்டில் கிரண் கவர்ச்சியாக வந்து போகிறார். Ôகதற கதற காதலித்தேன்Õ பாட்டு இளசுகளை ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும். தினாவின் இசையில் பாடல்கள் குத்தாட்ட வகை. பின்னணி இசை காதை கிழிக்கிறது.
கவர்ச்சி, ஆக்ஷன், ஏட்டிக்கு போட்டி காட்சி என கலகலப்பான படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். பக்கம் பக்கமாய் வசனம், நீளும் காட்சிகள், லாஜிக்கே இல்லாத திரைக்கதை இவற்றை சரி செய்திருந்தால் முயற்சி திருவினையாகியிருக்கும்.



-நன்றி தினகரன்

1 comment :

  1. very good movie but crazy tamilans made it failure by making illogic movies like enthiran I jit...

    ReplyDelete