Wednesday, June 2

கற்றது களவு விமர்சனம்


நடிகர் : கிருஷ்ணா

நடிகை : விஜயலட்சுமி

இயக்குனர் :பாலாஜி டி.

தினமலர் விமர்சனம்

தனது அறிவை களவாழ், அதை காசாக்கி, பணமாக்கி பெரும் பேரும் புகழும் சம்பாதிக்கும் நம்பிக்கை துரோகியை பழி வாங்கிடவும், பணம் பறிக்கவும் களம் இறங்கும் கதாநாயகர், அதையே தொழிலாக கொள்கிறார். அவருக்கு கதாநாயகியும் உடந்தையாக இருக்கிறார். மத்திய அமைச்சர் வரை நீளும் நாயகன், நாயகியின் களவு, உளவு... சமாச்சாரங்களால் இருவரும் சந்திக்கும் தொந்தரவுகளும், துரத்தல்களும்தான் கற்றது களவு திரைப்படம்!

கதைப்படி தனது கிளார்க் அப்பா மாதிரி மாத‌ச்சம்பளம், மந்த வாழ்க்கை என வாழ்ந்து, வீழ்ந்து விடக்கூடாது என படிக்கும் காலத்திலேயே சிந்திக்கும் கற்றது களவு கதாநாயகர் கிருஷ்ணா, ஸ்டூடண்ட் பேங்க் எனும் அபார வங்கி திட்டம் ஒன்றை தீட்டிக் கொண்டு தனியார் வங்கி அதிகாரி சந்தான பாரதியை சந்திக்கிறார். கிருஷ்ணாவை அலட்சியப்படுத்தி திருப்பி அனுப்பும் சந்தானபாரதியோ, அவரது ஐடியாவை மட்டும் தனதென்று சொல்லி மத்திய அமைச்சர் வி.எம்.சி.ஹனிபா தலைமையில் அந்த புதுமையான வங்கித் திட்டத்தை அறிமுகம் செய்து பெரும் பேரும், புகழும், பணமும் சம்பாதிக்கிறார். இதில் கடுப்பாகும் நாயகர் கிருஷ்ணா, வில்லன் சந்தானபாரதியை தனது புத்திசாலித்தனத்தால் பழி தீர்த்து பணம் பறிக்கிறார். கிருஷ்ணாவுக்கு விமான பணிப்பெண் ஆசையில் வீட்டை விட்டு ஓடி வரும் கதாநாயகி விஜயலட்சுமி இவ்விஷயத்தில் உதவுகிறார். அதன் பின் இருவரும் இணைந்து, தவறென்று தெரிந்தும் நகைக்கடை அதிபரில் தொடங்கி, மத்திய அமைச்சர் வரை பலரிடமும் பலவித திருட்டு புரட்டுகளை செய்கின்றனர். இந்த ஜோடியிடம் பல லட்சங்களை இழந்த மத்திய அமைச்சர், தன் அடியாட்களையும், அதிகாரிகளையும் விட்டு சட்டத்திற்கு புறம்பாக இவர்களை தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார். அமைச்சரின் ஆசை நிறைவேறியதா? நாயகரும், நாயகியும் தப்பி பிழைத்தார்களா? அவர்களுக்கு உதவியது யார்? உபத்திரவத்தில் மாட்டி விட்டது யார்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் அளிக்க முயற்சித்து, அதில் பாதி வெற்றி பெற்றிருக்கிறது கற்றது களவு படத்தின் மீதிக்கதை! உருப்படியான ஒரே விஷயம் ஸ்டூடண்ட் பேங் திட்டம் மட்டும்தான். இது ஒன்றுக்காகவே டைரக்டரை பாராட்டலாம்.

கிருஷ்ணாவாக கிருஷ்ணா ஓடி ஆடி உழைத்து நடித்திருக்கிறார். மீசை இல்லாமல் நடித்திருப்பது, அதுவும் திருடனாக நடித்திருப்பது மைனஸ். முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் நல்ல தேர்ச்சி. கீப் இட் அப் கிருஷ்ணா. கிருஷ்ணவேணியாக விஜயலட்சுமி, சென்னை 28, அஞ்சாதே படங்களின் நாயகி விஜியா இது? என அதிசயிக்கும் வகையில் ‌மோசமாக நடித்திருப்பது கொடுமை. நடிப்புதான் அப்படி என்றால், அவரது பரபர பேச்சும் புரியாத புதிர். இயக்குனர் பாலாஜி சற்றே சிரத்தை எடுத்திருக்கலாம்.

இந்த தில்லுமுள்ளு ஜோடியை தீர்த்துக் கட்டும் எண்ணத்தில் டெல்லியில் இருந்து வரும் அதிகாரியாக டான்ஸ் மாஸ்டர் கல்யாணும், காப்பாற்ற போராடும் லோக்கல் போலீஸ் அதிகாரியாக சம்பத்தும், யூனிபார்ம் இல்லாமலேயே மிரட்டலாக நடித்திருக்கின்றனர். இவர்களை மாதிரியே சந்தான பாரதி, வி.எம்.சி.ஹனீபா, சின்னி ஜெயந்த், நெல்லை சிவா, கிறிஸ்டோபர் உள்ளிட்டவர்களும் நச் என்று நடித்திருக்கின்றனர். நாலு நிமிஷமே வந்தாலும் ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் முமை‌த்கானும் ஓ.கே.!

காமெடி எனும் பெயரில், அதுவும் படத்தோடு ஒட்டிய காமெடி எனும் பெயரில் கஞ்சா கருப்பு அண்ட் கோவினர் படுத்தும் பசடு படு கொடுமை!

ஏவி.எம். ஸ்டூடியோவை கஞ்சா மூலம் ஜப்பான் ஆசாமிக்கு கிருஷ்ணா விற்பது, அதே கிருஷ்ணா கண்ணாடி கல்லையெல்லாம் விலையுயர்ந்த கல் என நகைக்கடை அதிபர் சின்னி ஜெயந்த்திடம் விற்பது உள்ளிட்ட இன்னும் சில நம்ப முடியாத காட்சிகள் படம் முழுக்க பரவிக் கிடப்பது கற்றது களவு படத்தின் வேகத்தை விளையாட்டாக்கி, விறுவிறுப்பை குறைத்து விடுகிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் பெரும் பலம் .பால் ஜேக்கப்பின் இசை பெரும் பலவீனம்.

கற்றது களவு : ரசிகர்களுக்கு வைத்தது வீண் செலவு!

No comments :

Post a Comment