Wednesday, June 2

காதலாகி விமர்சனம்




தினமலர் விமர்சனம்

மூன்று இளைஞர்கள், மூன்று யுவதிகள்... இவர்களுக்கு இடையேயான காதலும், ஒரு ஜாதி வெறி பிடித்த பெரிய மனுஷனின் காட்டு மிராண்டி தனத்தால் இந்த காதல் ஜோடிகள் படும் பாடும்தான் காதலாகி படத்தின் மொத்த கதையும். இதை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியுமோ... அத்தனை அழகாகவும், அசத்தலாகவும் சொல்லி இருப்பதுதான் ஹைலைட்.

மூன்று மாணவிகள், இரண்டு மாணவர்கள் கல்லூரி தோழர், தோழிகளான ஐவரும் கல்லூரி இறுதியாண்டு முடிந்ததும், பிரிவது பற்றிய வருத்தத்துடன் பிரிகின்றனர். ஆனாலர் அவர்களை பிரிய விடாமல் தனது மேஜிக்குகளை காட்டி ஒரு குழுவாக ஒன்று திரட்டுகிறார் ஆறாவதாக ஒருவர். அவர், அதில் ஒரு மாணவியின் பள்ளித் தோழர். கூடவே காதலர் என்பதால்... இவர்களது நட்பு மேலும் பலப்படுகிறது. அதன் மூலம் சொந்தமாக பிஸினஸ் ஆரம்பிக்க எண்ணும் அந்த மூன்று ஜோடியும் பழைய காதலர், புதிய தோழரின் வித்தியாசமும் விறுவிறுப்புமிக்க மேஜிக்குகளையே ஷோவாக்கி பிரபல சேனலில் பிரைம் டைம்மை பிடித்து பெரிய ஆளாகின்றனர். இந்த நிலையில் அந்த மூன்று நாயகியரில் ஒருவரின் அக்கா புருஷனும், ஆள்பலம், அரசியல் பலம் நிரம்பிய ஜாதி வெறி பிடித்தவனுமான வில்லன் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். அவனது வில்லத்தனம் வென்றதா? நாயகியர் - நாயகர்களின் புத்திசாலித்தனம் வென்றதா? என்பது காதலாகி படத்தின் அழகிய மீதிக் கதை!

ஹீரோக்கள் தியாகுவாக கிருஷ்ணக்குமார், மகேஷ் முத்துச்சாமியாக அஜய், அஸ்லாமாக ரோஷன், நாயகிகள் நந்தினியாக சிருஷ்டிடாங்கே, ரேஷ்மியாக அம்ரிதா சுப்ரியா, கிறிஸ்டியாக நட்சத்திரா, ஜாதி வெறி பிடித்த வில்லன் ராஜராஜசேகரனாக விஜயகோபால், சிவபிரபுவாக சந்தோஷ், கடமை தவறாத லேடி கமிஷனராக கஷிஷ் கபூர், சங்கரனாக எம்.ஏ.ஜார்ஜ் உள்ளிட்ட புதுமுகங்கள் அனைவரும் பலே பலே. பேஷ்... பேஷ... எனச் சொல்லும் அளவுக்கு பிரமாதமாக நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இவர்களது கதையை உச் கொட்டியும், ப்ச் சொல்லியும் இச் கொடுத்தும், ரயிலில் சக பயணியைப் போன்று கேட்டபடி வரும் சிபிஐ ஆபீஸர் பிரகாஷ் ராஜின் நடிப்பும், பாத்திரமும் கூட பிரமாதம்.

வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரைஹானாவின் பாடல்கள் இசையும் படத்திற்கு பெரிய பலம். தமனின் பின்னணி இசை ஓ.கே.! கே.ஆர்.விஷ்வாவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் மோதலாகி, முடிவாகி, அதன்பின்பும் அழகாக தொடரும் கருத்தாகிய படமான காதலாகி கலக்கலாகிய படம்.

காதலாகி : கலக்கலாகிய படம்!

No comments :

Post a Comment