Thursday, July 15

பவுர்ணமி நாகம் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

பாம்பு பழிவாங்கும் வழக்கமான கதைதான்! அதை கிராபிக்ஸ் உத்திகளின் வளர்ச்சியையும், முமைத்கானின் கவர்ச்சியையும் வைத்து பிரமாண்டப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வளவே!

கதைப்படி, பவுர்ணமி நாளில் கூடும் இரண்டு பாம்புகளின் தலையில் ஜொலிக்கும் மாணிக்க கல்லை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துக் கொண்டால் இந்த உலகையே தங்கள் வசப்படுத்திக் கொள்ளலாம் எனும் பேராசையில் மாந்தரீகம், தாந்தரீகங்களை நம்பி அது மாதிரி ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றனர் மந்திரவாதி காந்தாரி எனும் நளினியும் அவரது கூட்டாளிகளும். அதுமாதிரி ஒரு நாளில் கூடும் இரண்டு பாம்புகளில் ஒன்றை அவசரப்பட்டு சுட்டு, அதன் தலையில் இருக்கும் கல்லை கைப்பற்றி விடுகறிார் நளினியின் அவசரபுத்திக்கார கூட்டாளிகளில் ஒருவர். அதுவரை யாகத்திலும், தியானத்திலும் கண்களை மூடி இருக்கும் நளினி இதுகண்டு அதிர்ச்சி அடைவதுடன், ஒரு கல்லை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது எனும் உண்மையையும் உரைக்கிறார். அப்புறம்....? அப்புறமென்ன... அடுத்த பிறவியில் முதுகில் நாக மச்சத்துடன் பிறக்கும் பெண்தான் அந்த ஓடிப்போன பாம்பு என்பதை தனது மந்திர தந்திர சக்திகள் மூலம் கண்டுபிடிக்கும் நளினி., அதுமாதிரி நாக மச்சம் உடைய பெண்ணை தூக்கி வர தன் அடிபொடிகளை அனுப்பி வைக்கிறார். அவர்கள் ஒருபக்கம் தீவிரமாக தேடித்திரிய, அப்படிஒரு மச்சத்துடன் பிறந்த முமைத்கான் வலிய வந்து மந்திரக்காரி காந்தாரி நளினியிடம் சிக்குகிறார். நளினியின் எண்ணம் ஈடேறியதா? நாகமச்சத்துடன் பிறந்த முமைத்கான் நாகமாக மாறி பேராசை பிடித்த நளினி மற்றும் அவரது கூட்டாளிகளை பழி தீர்த்தாரா? என்பது மீதிக்கதை.

மானாசா, நாகக்கன்னி என இரண்டு வேடங்களில் மும்தாஜ் நாகமாக படமெடுத்து பயமுறுத்தினாலும், கவர்ச்சி பாடத்திலும் ரசிகர்களை காப்பாற்றவே செய்கிறார். பேஷ். பேஷ். மந்திரக்காரி காந்தாரியாக நளினி பிரமாண்டமாக கருப்பு புடவையில் வந்து கதறடிக்கிறார் என்றாலும் பல டி.வி., சீரியல்களில் தோன்றி நடிப்பதாலோ எனு்னவோ... சீரியல் எபெக்ட்டை ஏற்படுத்தி விடுகிறார். பாவம்!

கருணாஸ், மயில்சாமி இருவரும் புதிய காமெடி கூட்டணி அமைத்திருக்கின்றனர். சிரிப்புதான் வரமாட்டேன் என்கிறது. வெ.ஆ.மூர்த்தி, நிழல்கள் ரவி, ஆதித்யா மேனன், பாலு ஆனந்த், நெல்லை சிவா, ஆர்த்தி, உள்ளிட்ட ஒரு பெரும் பட்டாளமே பவுர்ணமி நாகத்தில் இருக்கின்றது.

முமைத்கான் ஒவ்வொரு முறையும் பாம்பாகும் விதம், சாலையே சுருண்டு பிரமாண்ட பாம்பாகி, அதில் வரும் ஜீப்பை பயமுறுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளிட்டவைகளுக்காக இயக்குனர் யார் கண்ணனுக்கு சபாஷ் சொல்லலாம். பெர்னாட் எஸ்.‌டேவிட்டின் ஒளிப்பதிவும், எஸ்.ஏ.ராஜ்குமாரின் பின்னணி இசையும் இப்படத்தின் பெரிய பலம்.

மொத்தத்தில் பவுர்ணமி நாகம் - பொழுதுபோக்கிற்காக பார்க்கலாம் எனும் ரகம்!

No comments :

Post a Comment