Thursday, July 15

வெளுத்துகட்டு விமர்சனம்


தினமலர் விமர்சனம்

வீட்டுக்கும் அடங்காமல், ஊருக்கும் அடங்காமல் வெட்டும் குத்துமாக திரியும் நாயகர், நாயகி சொன்ன ஒரே காரணத்திற்காக உருமாறி... ஊர் மாறி... உழைத்து முன்னேறி காதலி முன் போய் நிற்கும் கதை!

கதைப்படி, பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே உ‌டன் படிக்கும் நாயகி அருந்ததிக்கு பாடிகார்டாக வலம் வருகிறார் நாயகர் கதிர். ஐந்தாம் வகுப்பில் அருந்ததியை அடித்து கண்டித்தத குற்றத்திற்காக ஆசிரியர் மண்டையை உடைத்த கதிருக்கு, அதன்பிறகு பள்ளிக்கூடத்தில் இடமில்லை. ஆனால் தொடர்ந்து படித்து கல்லூரி வரை போன அருந்ததியின் நெஞ்சாங்கூட்டிற்குள் பெரிய சிம்மாசனமே கதிருக்காக போடப்பட்டுள்ளது இவர்களது நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து காதலாக காய்த்து குலுங்க ஆரம்பிக்கிறது. பெரிய இடத்து பெண்ணாயிற்றே...! சும்மா இருப்பார்களா? அருவாளும் சாராயமுமாக திரியும் கதிரை யாருக்குத்தான் பிடிக்கும்? காதலி சொன்ன காரணத்துக்காக கோயில் கட்டுகிறார். காதலியை பிடித்து இழுத்ததற்காக அவரது முறைமாமனின் கையை வெட்டுகிறார். இவ்வாறெல்லாம் செய்யும் கதிர், அதே காதலி சொன்ன காரணத்திற்காக சென்னைக்கு போகிறார். ஒரே பாடலில் என்றில்லாமல் படிப்படியாக உழைத்து முன்னேறுகிறார். பெரிய ஹோட்டல் அதிபர் ஆகிறார். இதற்குள் ஊரில் அருந்ததிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அருந்ததி ஆசைப்பட்ட மாதிரியே பெரிய மனிதர் ஆகும் கதிருக்கு, கதிர் ஆசைப்பட்ட மாதிரி அருந்ததி கிடைத்தாளா? இல்லையா?என்பது க்ளைமாக்ஸ்!

கதாநாயகன் கதிர்., ஒடிசலான உருவம் அடர்த்தியான தாடி, மீசை என ஆரம்ப காட்சிகளில் பயமுறுத்தினாலும் அடுத்தடுத்து பழகி விடுகிறார். படத்தில் படிப்படியாக உழைத்து முன்னேறுவது போன்றே அந்த கதாபாத்திரமாக மாறவும் நிறையவே உழைத்திருக்கிறார்.

அருந்ததி, கிராமத்து அருக்காணியாகவும் அழகுராணியாகவும் சகல உணர்ச்சிகளையும் காட்டி சபாஷ் வாங்கி விடுகிறார். அருந்ததியின் தந்தையாக இயக்குனர் ராஜா மற்றும் சென்னையில் கதிருக்கு உதவிகள் செய்யும் அர்ச்சனா சகோதரிகள் உள்ளிட்டவர்களின் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும், பரணியின் இசையும் வெளுத்து கட்டு படத்தை மேலும் தூக்கி காட்டுகின்றன. முன்பாதி படத்தை விட பின்பாதி விறுவிறு்பை கூட்டுகிறது. முன்பாதியின் பாதி 'பசங்க' பட பாதிப்போ என கேட்க தூண்டுவது உள்ளிட்ட இன்னும் பல இழுவை விஷயங்களை இயக்குனர் சேனாதிபதிமகன் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்! தயாரிப்பாளர், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனாவது எடுத்து சொல்லி இருக்கலாம்!

நடிகர் விஜய்யின் அப்பா தயாரித்திருக்கும் படமென்று விஜய் ரசிகர்கள் படையெடுத்தால் வெளுத்துகட்டு - பொளந்து கட்டு(ம்)!

No comments :

Post a Comment