Tuesday, September 14

விருந்தாளி விமர்சனம்




தினமலர் விமர்சனம்

காதல் ஜோடிக்கு, அவர்கள் சேர்த்து வைக்கும் ஒரு காதல் ஜோடியின் உற்றார் உறவினர்களாலேயே எதிர்ப்பு கிளம்புவதும் அதை எதிர்த்து அந்த காதல் ஜோடி போராடுவதுமான வழக்கமான காதல் கதைதான்! ஆனால் அதை வசதியில்லாத நண்பன், அவனது வசதியான காதலி, அவளது சொத்துக்காக அவளை கடத்தி கொல்ல திட்டமிடும் சொந்தபந்தம், அவர்களால் நாயகன் - நாயகிக்கு ஏற்படும் உருட்டல், மிரட்டல்கள் என வித்தியாசமாக கதை சொல்ல முயற்சித்திருக்கிறது விருந்தாளி திரைப்படம்! அதை விறுவிறுப்பாகவும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் எதிர்பார்ப்பு!

வட்டிக்கு பணம் கொடுக்கும் புதுமுகம் ஈஸ்வருக்கும், அந்த ஊரின் தபால்காரர் பாலாசிங்கின் மகள் தியானாவுக்கும் காதல். இந்த காதலுக்கு ‌ஜெயிலி்ல இருந்து திரும்பும் ஈஸ்வரின் அப்பா நாசரும் எதிர்ப்பு காட்டில்லை. பாலாசிங்கும் படுத்தி எடுக்கவில்லை. பிறகு? ஈஸ்வர் தன் ஆருயிர் நண்பனுக்கு செய்து வைக்கும் திருட்டு கல்யாணம்தான் ஈஸ்வர் - தியானாவின் காதலுக்கு வேட்டு வைக்கிறது. அது எப்படி? என்பது விருந்தாளி படத்தின் மீதிக்கதை!

ஈஸ்ராக புதுமுகம் ஈஸ்வரே நடித்திருக்கிறார். ஹீரோவுக்கான எல்லா தகுதியும் இருந்தும் படம் முழுக்க மீசை வரை கிருதாவுடன் முகத்தை மறைத்துக் கொண்டு வருவதால் வில்லனாகவே தெ‌ரிகிறார். அவரது அம்மாம் ‌பெரிய கிருதா மீசைக்கும் படம் முழுக்க பல்லைக் காட்டிக் கொண்டே திரிவதற்கும் காரணம் என்ன? என்பதை டைரக்டர் வாட்டர்மேன்தான் விளக்க வேண்டும். கூடவே இயக்குனரின் பெயர் காரணத்தையும் விளக்குவது நலம்!

கதாநாயகி தியானா, அவள் பெயர் தமிழரசி படத்தில் இரண்டாம் நாயகியாக அத்தனை அழகாக வந்து அம்சமாக நடித்த தியானாவா இது? எனக் கேட்க வைக்கறிது. தியானாவின் பொம்மை மாதிரியான முகஅமைப்பும், அதற்கு போட்டிருக்கும் மேக்-அப்பும். நல்லவேளை நடிப்பு ஓ.கே.!

சிங்கம்புலி, கதையோடு ஒட்டிய காமெடி எனும் பெயரில் கடிக்க ஆரம்பித்து விட்டார்... என விமர்சனத்தில் எழுதியே ஆக வேண்டுமென படத்தில் அவர் வர ஆரம்பிக்கும் முதல் சீனிலேயே தோன்றி விடுகிறது. படம் முழுக்க ஹீரோ ஈஸ்வருடன் சேர்ந்துகொண்டு நம்மை சிரிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு சிங்கமும் புலியுமாக கடித்து குதறி விடுகிறார் மனுஷர். காமெடி என்றால் சத்தம் போட்டுத்தான் பேச வேண்டுமா என்ன? இதில் அவரது வழுக்கை தலையே பரவாயில்லை எனும் அளவிற்கு டோப்பா வேறு! சிங்கம்புலி சார்... விக் வேண்டாம் இனி வரும் படங்களிலம்... ஜோக் போதும்! பேபி கோபிகா ராஜேஷில் தொடங்கி, நாசர், பாலாசிங்,‌ போலீஸ் வில்லன் சேரன்ராஜ் என மற்ற எல்லோரும் தங்கள் பங்கை சரியாகவே செய்திருக்கின்றனர்.

படத்தின் பெரிய பலம் எஸ்.எஸ்.குமரனின் இசையும், புதியவர்கள் விக்டர்தாஸ், முருகன் மந்திரம் ஆகியோரின் 6 பாடல்களும்தான்! ஒளிப்பதிவும் ஓ.கே.! சக்கர நாற்காலியில் கோரமுகத்துடன் திரியும் வில்லன், சிகரெட்டும் கையுமாக திரியும் வில்லி, க்ளைமாக்ஸில் அனுதாபத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்பதற்காக நாயகி தியானாவை தூக்கில் தொங்க விடுவது உள்ளிட்ட எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத் தனம். இதுபோன்ற இன்னும் பல விஷயங்கள் கையில் திண்பண்டங்கள் இல்லாமல் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை வெறுந்தாளிகளாக சிறுவர்கள் பார்ப்பது போன்ற மனநிலை ரசிகர்களுக்கு வருவது விருந்தாளி படத்தின் பெரிய பலவீனம். மொத்தத்தில் விருந்தாளி வீட்டிலும் தங்கவில்லை... மனக்கூட்டிலும் தூங்கவில்லை!

விருந்தாளி : வெறும் ஜாலி!

No comments :

Post a Comment