Tuesday, September 14
புழல் விமர்சனம்
தினமலர் விமர்சனம்
படிப்பு, வேலை, காதல், கல்யாணம் என கனவுகளுடன் திரியும் மூன்று இளைஞர்கள் கொலை குற்றவாளிகளாக புழல் ஜெயிலுக்கு வரும் விதத்தையும், வந்த இடத்தில் நண்பர்களாகும் மூவரும் சேர்ந்து செய்யும் கொலையும், அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் ஜாமீனையும், அதன் பின் என்ன? என்பதையும் சூடாகவும், சுவையாகவும் சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் புழல்!
முரளி, ஹேமச்சந்திரன், மனோ ஆகிய மூன்று புதுமுகங்களும்தான் ஹீரோக்கள். அர்ச்சனா, அசுவதா, சோனம்சிங் ஆகிய மூவரும் கதாநாயகிகள். காதல் தண்டபாணி, காதல் சுகுமார், பொன்னம்பலம், ஷகீலா, ஆதவன், ஜூனியர் நமீதா ஆகியோருடன் இப்படத்தின் தயாரிப்பாளர் தமிழ்அமுதனும் பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.
ஏதோ புழல் சிறைச்சாலையின் அருமை பெருமைகளையும் வெறுமைகளையும் சொல்லப்போகிறார்கள் எனப் பார்த்தால், அவற்றையெல்லாம் ஊறுகாய் போல் வைத்துக் கொண்டு, புழல் சிறைச்சாலைக்கு கொலை குற்றவாளிகளாக வரும் மூன்று இளைஞர்களையும் அவர்களது காதலையும் கடமையையும், கயமையை எதிர்த்து போராடும் தூய்மையையும் சொல்லி புழலை பணால் ஆக்கி விடுகின்றனர்.
நல்லதம்பியின் இசையும், கே.நித்யாவின் ஒளிப்பதிவும் புழல் சிறைச்சாலைக் காட்சிகளை பிரமாண்ட படுத்தி காட்டுவதைக் காட்டிலும் அந்த மூன்று இளைஞர்களின் காதல் களியாட்ட காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறது.
இண்டர் காலேஜ் டான்ஸ் போட்டியில் இன்ஜினியரிங் படிக்கும் ஒரு ஹீரோ, கமல் மாதிரி பேசி கைத்தட்டலுடன் ஆளுயர கோப்பையையும் பரிசாக பெறுவதில் தொடங்கி, கல்லூரி தாளாளர் பொன்னம்பலம் பீஸ் கட்ட முடியாத மாணவரின் வீட்டிற்கே சென்று அந்த மாணவரின் தாயின் கற்பை சூறையாடுவது, குப்பத்து தலைவரும், அவரது மகனும் ஒரே பெண்ணுடன் சல்லாபம் கொள்வது, கபடி வீரனாக திரியும் ஒரு ஹீரோவுக்கு வலிய சென்று காதல் தூது விடும் நாயகி திடீரென்று பொறுக்கியாக திரியும் முறைமாமனுக்கே கழுத்தை நீட்டுவது, அந்த பொறுக்கிக்கு எய்ட்ஸ் இருப்பதாக கேள்விப்பட்டதும் அவரது முதல் இரவிலேயே நாயகியை தன் காதலியை காப்பாற்றுகிறேன் பேர்வழி என ஜன்னல் வழியாக நாயகி புருஷனின் மர்ம உறுப்பை அறுத்து கொல்லுவது என ஏகப்பட்ட அபத்தங்கள், ஆபாசங்கள்! இவை எல்லாம் போதாதென்று புழல் சிறையில் அருமை அலைஸ் எருமை என்ற பெரயில் ஒரு ரவுடி சிறைக்கு வரும் இளைஞர்களுடன் எல்லாம் ஹோமோ செக்ஸ் செய்வதை கிட்டத்தட்ட செயல்முறை விளக்க படமாக படம் பிடித்திருப்பது என புழல் மொத்தமும் ஒரே புகைச்சல்! படம் பார்ப்பவர்களுக்கும் அதே புகைச்சல் கண்களிலும் - காதுகளிலும் உருவாகிறது என்பதாலும், இயக்குனரின் பெயரில் இருக்கும் அழகு படத்தில் இல்லாததாலும் புழல் - ஜெயில்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment