Tuesday, September 14

சிந்து சமவெளி விமர்சனம்


தகாத உறவுகளை தவறான உறவு என தம்பட்டம் அடித்து சொல்லும் படம்தான் சிந்து சமவெளி! இந்த தம்பட்டத்திற்கு நிறைய தப்பாட்டங்களை காட்சிகளாக்கி கல்லா கட்ட முயற்சித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். ஆனாதல் அதுவே பெண்களுடன் படம் பார்க்க வரும் ஆண்களுக்கும், படம் பார்க்க வரும் குடும்ப பெண்களுக்கும் தர்மசங்கடம்!

கதைப்படி, மிலிட்டரிக்காரரான அப்பாவுக்கும், டீச்சர் அம்மாவுக்கும் பிறந்த மகன்தான் ஹீரோ ஹரீஸ் கல்யாண். அவர் வளர்ந்து பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது பார்டரில் நடந்த ஒரு சண்டையில் குண்டடி படுகிறார் அப்பா. இனி, ராணுவத்தில் செயல்பட முடியாது எனும் நிலையில் வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு மனைவி மகனுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மிலிட்டரிக்காரர் ஊருக்கு வருகிறார. வந்த சில நாட்களிலேயே டீச்சர் மனைவி பாம்பு கடித்து இறந்து போக., மனைவியை இழந்த கணவரும், அம்மாவை இழந்த மகனும், ஆக்கிப்போட ஆளில்லாமல் அல்லாடுகறிார்கள். அப்புறம்? அப்புறமென்ன...? அதையே காசாக்கி மகனுடன் ப்ளஸ்-டூ படித்து முடிக்கும் மாணவியை மருமகளாக்கிக் கொள்கிறார் மிலிட்டரி. இதற்கு அப்புறம்தான் கதையே!

அதாகப்பட்டது.., பள்ளி இறுதி ஆண்டில் ஸ்கூல் பர்ஸ்ட் வரும் மகனை அவனது அம்மா மாதிரி டீச்சர் ஆக்க வேண்டும் என்ற லட்சியத்திற்காக டீச்சர் டிரைனிங் கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் மிலிட்டரி, மருமகளை மருமகளாக நடத்தாமல் மனைவி ஆக்கிக் கொள்வதுதான் சிந்து சமவெளி படத்தின் திடுக்கிடும் மீதிக்கதை!

அன்பழகனாக புதுமுகம் ஹரீஸ் கல்யாண் நல்ல நடிப்பின் மூலம் நம்பிக்கைக்குரிய ஹீரோவாக திகழ்கிறார். தமிழ் சினிமாவிற்கு நடிக்கத் தெரிந்த அழகான இளம் ஹீரோ ரெடி! சுந்தரியாக அமலாபால் அலைஸ் அமலா செம கச்சிதம். முத‌ல் படமான வீரசேகரன் படத்தில் நடித்ததை விட எக்கச்சக்க ஸ்கோர் செய்திருக்கிறார். காதலித்து கல்யாணம் செய்து கொண்ட அன்பழகனுக்கு எதிர்பாரதவிதமாக இவர் செய்யும் துரோகம், அனகா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தாமல் அனுதாபத்தை ஏற்படுத்துவதுதான் படத்தின் பெரும் பலம்.

மிலிட்டரி மாமனாராக வரும் வீராச்சாமி எனும் கஜினி மகன் மீது பாசம் காட்டும்போதும் சரி, மனைவி மீது காதல் கொள்ளும்போதும், மருமகள் மீது காமம் கொள்ளும்போதும் வெவ்வேறுவித பரிமாணங்களில் நடித்து தனக்கும் பேசத்தக்க எதிர்காலம் இருக்கிறது என்பதை தன் படிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். ஆனால் 17 ஆண்டுகள் பார்டரில் போராடி தேசத்தை காப்பவர், மகன் விட்டுச்சென்ற தேகத்தை சூறையாடுவது என்னதான் சந்தர்ப்ப சூழ்நிலை என்றாலும் கொடூரம். கஞ்சா கருப்பு சர்ச் பாதராக சிரிக்க வைக்க முயன்று சிரிப்பாய் சிரிக்கறார்.

ஆணுறையையும், அட்வைசையும் படகில் முதலிரவு கொண்டாட போகும் நண்பனுக்கு கொடுத்து அனுப்பும் பறவை முருகேஷனில் தொடங்கி, வீராசாமிக்கு அட்வைஸ் பண்ணும் மீசை பெரியவர் வரை சகலரும் பாத்திரம் அறிந்து நடித்திருப்பது படத்தின் பெரும்பலம். பொம்பளைங்களை பத்து தடவை பார்த்தாலே அழகா இல்லாத பொம்பளைங்களும் அழகா தெரிவாங்க. அதுதான் பொம்பளைங்களோட மந்திர சக்தி. இதுல இருந்து விடுபட முடியாது. மருமகள்கிட்ட இருந்து விலகலன்னா வீட்டுல பிணம் விழும் என்று அந்த பெரியவர் சொல்வது க்ளைமாக்ஸில் பலித்துபேவது நெஞ்சை உருக்குகிறது.

உத்பல்வி நாயனாரின் ஒளிப்பதிவில் கடலும் மலையும் யானைகளும் படகுகளும் கண்களுக்கு குளிர்ச்சி என்பது ப்ளஸ். சுந்தர்சி பாபுவின் இசையில் யார் இங்கு நல்லவர்கள் பாடல் தவிர வேறு எதுவும் காதுகளுக்கு குளிர்ச்சி இல்லை என்பது மைனஸ்.

கொச்சையான கதை என்றாலும் இச்சையான காட்சிகளை மட்டுமே நிரப்பி காசு பார்க்க நினைக்காமல், சமூகத்திற்கு சமூகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செக்ஸ் கொடூரங்களை வைத்தே பாடம் கற்பிக்க முயற்சிக்கும் இயக்குனர் சாமிக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். உயிர், மிருகம் படங்களை அடுத்து சமூக பிரக்ஞையுடன் சாமி இயக்கியிருக்கும் சிந்த சமவெளியும் நாகரீகமே!

மொத்தத்தில் சிந்து சமவெளி சொல்கிறது நாகரீக உறவிற்கான வழி!

No comments :

Post a Comment