Tuesday, September 14

பாணா விமர்சனம்


தினமலர் விமர்சனம்

மூன்றாம் பிறை, இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து அளித்த பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி மூவிஸ் டி.ஜி.தியாகராஜனின் லேட்டஸ்ட் தயாரிப்பு,"பாணா காத்தாடி". நடிகர் முரளியின் மகன் அதர்வா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். பத்ரி வெங்கடேஷ் இயக்கும் முதல் படம் இது. முதல் மேட்சிலேயே செஞ்சுரி அடிப்பது போல் அதர்வா, பத்ரி வெங்கடேஷ் இருவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் சிறு தொய்வு இல்லாமல், விறுவிறுப்பாக செல்கிறது படம்.

சென்னையில் ஒரு குடிசை மாற்றுவாரிய குடியிப்பை கதையின் தளமாக அமைத்திருப்பதே வித்தியாசமான முயற்சி. ப்ளஸ் டூ மாணவரான அதர்வாவும், அவரது நண்பர்களும் காத்தாடி விடுவதையே உயிர் மூச்சாக நினைக்கிறார்கள். அறுந்து போன காத்தாடியை அதர்வாவும், நண்பர்களும் துரத்தும் போது, ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் பணக்கார மாணவியான சமந்தா மீது அதர்வா மோதுகிறான். சமந்தா கல்லூரி ப்ராஜெக்ட் உள்ளடங்கிய பென்-டிரைவ், அதர்வாவிடம் சென்று விடுகிறது. அதை தேடும் சமந்தா, சண்டையில் ஆரம்பித்து பின்பு நல்ல சிநேகிதியாகிறாள். தன் காதலை அவளிடம் அதர்வா சொல்லும் போது எதிர்பாராத நிகழ்ச்சியால் கோபமடையும் சமந்தா அவனை வெறுக்கிறாள். அதே பகுதியில் வசிக்கும் லோக்கல் தாதா பிரசன்னா, முன்னாள் எம்.எல்.ஏ.,வை கொல்வதை, அதர்வா நேரில் பார்க்க நேரிடுகிறது. அதைத் தொடர்ந்து, பல பிரச்னைகள், போலீஸ் தேடல் என எதிர்பாராத கிளைமாக்சுடன் படம் முடிகிறது.

இதுதான் முதல் படம் என்றாலும் அதர்வா, இயல்பாக, யூத் புல்லாக நடித்திருக்கிறார். பசங்களுடன் கலாய்க்கம் போதம் சரி, சமந்தாவுடன் பழகும் போதம் சரி முழுமையான ஓ.கே. போலீஸ் ஸ்டேஷனில் அவமானப்படும் போது, தாயுடன் பாசமான காட்சிகளிலும் சரி, மேலும் சிறப்பாக செய்திருக்கிறார். சில காட்சிகளில் சிம்புவை நினைவுபடுத்துகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாசமிக்க தாயாக வரும் மெளனிகாவிற்கு ஒரு சபாஷ் போடலாம்.கருணாசின் காமெடி படத்திற்கு நிச்சயம் ஒரு பிளஸ் பாயிண்ட். தந்தை டி.பி.கஜேந்திரன் தன் சட்டை பையில் வைக்கம் நூறு ரூபாய் நோட்டுக்களை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று கருணாஸ் பல தடவை முயல்வதும், ஒவ்வொரு முறையும் ஏமாந்து போவதும், அதற்கு தந்தை தரும் விளக்கமும் புதுமையான நகைச்சுவை. படத்தின் முக்கிய திருப்பமும் கருணாஸால் ஏற்படுகிறது.

ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறாள் என்று கதையில் வருவதால் டைரக்டர், சமந்தாவின் ஆடையில் அதிக அக்கரை செலுத்தியிருக்கிறார் போலும். கிளாமரான லேட்டஸ்ட் டிசைன்களில் உடைகள் அணிந்து வரும் சமந்தாவின் நடிப்பு கச்சிதம்.பல புதுமைகளை டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் இப்படத்தில் செய்திருக்கிறார்.நண்பர்கள் மற்றும் தாய் சமந்தாவின் காதலைஆதரித்து பிரம்மாண்டமான தியேட்டரின் வெள்ளித்திரையில் தோன்றி பேசுவது, தமிழ் சினிமாவில் புதுமை. குஜராத், ஆமதாபாத் நகரின் நூற்றுக் கணக்கான வீடுகளிலிருந்து பறக்க விடப்படும் ஆயிரக்கணக்கான காத்தாடிகள் வானில் நிரம்பி பறக்கும் காட்சிகள் புதுமை.

படத்தில் ஒரு காட்சியில் நடிகர் முரளி தோன்றுகிறார். " காதல் வந்தால், இதயத்திலே வைச்சுக்காம, தைரியமாக சொல்லுங்க" என்று அதர்வாவிற்கு அட்வைஸ் கொடுப்பார். நீங்க என் பண்றீங்க? என்று அதர்வாவின் நண்பர் கேட்க, முரளி எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படிக்கிறேன் என்பார். பதிலுக்கு அந்த நண்பர், எவ்வளவு வருஷமாடா இவர் காலேஷிலேயே படிச்சுக்கிட்டே இருப்பாரு? என்பார். நல்ல நக்கல்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஐந்து நல்ல பாடல்கள். "குப்பத்து ராஜாக்கள்" பாட்டு ஹிட் ஆகலாம். குஜராத்தில் வரும் காட்சிகளில் மாறுபட்ட பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.ஜி.ராதாகிருஷ்ணனின் வசனங்கள்,பல இடங்களில் நச் சென்று இருக்கின்றன. "அழுடா, நல்லவன் தான் அழுவான்" என்று அதர்வாவின் அம்மா கூறுவார். ரிச்சர்ட் நாதன் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதர்வா-பத்ரி வெங்கடேஷ் காம்பினேஷனில் பாணா காத்தாடி உயரத்தில் பறக்கும்.பத்ரி வெங்கடேஷ் திரைப்படக் கல்லூரியில் சில ஆண்டுகள் லெக்சரராக பணி புரிந்திருக்கிறார். எந்த டைரக்டரிடமும் பயிற்சி பெறாமல் முதல் படத்தை இயக்கியிருக்கிறார், பாராட்டுக்கள்.

- எஸ்.ரஜத்

------------------------------------
குமுதம் விமர்சனம்

படியில் பயணம், நொடியில் மரணம். இந்த ஒரு வரியை உபதேசிக்க, வடசென்னை விடலைகளை வைத்துபட்டம் விட்டிருக்கிறார் இயக்குநர், டீலில் பட்டம் கிடைப்பதற்கு பதில் காதலி கிடைக்கிறார். நல்ல டீல். காத்தாடி விடுவதில் சாம்பியனான அதர்வாவும் கோபுரத்தில் வாழும் சமந்தாவும் மோதிக் கொள்கிறார்கள். மோதல் காதலாவது வழக்கத்தை விட பழசு. டீலில் கிடைத்த பாணா காத்தாடிக்காக அடுத்த ஏரியாக்காரர்களுடன் மோதும் அளவுக்கு துணிச்சலான இளைஞனை, ஒரு கொலையை பார்க்கவைத்து, ஊரை விட்டே ஓட விட்டு ஒளிய வைப்பதில் திரைக்கதை சறுக்குகிறது. நடிகர் முரளியின் மகன்தான் அதர்வா, பட்டம் விட்டு கொண்டு பொறுப்பில்லாமல் திரியும் விடலை கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு, காதலும் வருகிறது. படிக்கவும் வருகிறது. காதலியிடம் கிப்ட்க்கு பதிலாக நிரோத்தை காட்டி மாட்டிக்கொள்ளும்போதும், போலீஸில் அடி வாங்கும்போதும், இயல்பான நடிப்பு. ஒரு ஹீரோயிஸத்துக்கான காட்சியாமைப்புகள் கதையில் இல்லாததால் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

கதாநாயகி சமந்தா அழகு. கல்லுõரி மாணவி, பிளஸ்2 பையனைக் காதலிக்கிறார். பென் டிரைவ் காணாமல்போய், அதர்வாவின் சேரி வீட்டிற்கே வந்து போகும் ஆர்ப்பாட்டம், நிரோத் விஷயத்தில் காதலனை தணக்கு யார் என்றே தெரியாது என்று நழுவுவதும், உண்மையறிந்து காதலனை சமாதானப்படுத்த துரத்துவதும் டாப்.

பிரசன்னா பணத்துக்காக பொருள், தூக்கும் ரௌடி. விடலைகள் வழி தவறி போகாமல் அவர் போடும் மிரட்டல் ஏ ஒன்.

கருணாஸ், டி.பி.கஜேந்திரன் காமெடி டிராக் படத்திற்கு ரொம்பவே கை கொடுக்கிறது. அப்பா கஜேந்திரன் சட்டைப்பையில் வைக்கும் பணத்தை மகன் கருணாஸ் அபேஸ் செய்ய முயற்சிக்கும் போதெல்லாம் பணம் காணாமல் போவது செம காமெடி. கை கொடுப்பது வசனமும் தான். கத்தி கத்தி பேசினாலும் மௌனிகா சேரி அம்மாவாக மனதில் நிற்கிறார். யுவன் ஷங்கர் ராஜா தேவலை ரகம். இன்னும் மெனக்கெட்டிருக்கலாமோ?

பாணா காத்தாடி என்று பெயர் இருப்பதால் ப்டம், மாஞ்சாக்கயிறு. டீல், அதில் வரும் ஆபத்துக்கள் என்று நிறைய எதிர்பார்ப்புகள் . அதை விட்டு வழக்கமான கொலை, சேரி வாழ்க்கை என்று போவதால் ஏமாற்றம், குஜராத்தில் பட்டம் விடும் திருவிழாவையாவது திருப்புமுனையாக்கியிருக்கலாம். அதுவும், சப் கிளைமாக்ஸின் பரிதாப முடிவு கதாநாயகனுக்கு மட்டுமா படம் பார்த்தவர்களுக்கும் தான்.

பாணா காத்தாடி - காதல் காத்தாடி.

No comments :

Post a Comment