Tuesday, September 14

வம்சம் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

தனது முதல் படைப்பான பசங்க படத்தின் மூலம் சிறுவர்களுக்கு நல்ல நீதி கூறிய இயக்குநர் பாண்டியராஜ், தனது இரண்டாவது படைப்பான வம்சம் மூலம் பெரியவங்களுக்கு பிடித்ததும், பிடிக்காததுமான ஜாதியை படமாக்கி இருக்கிறார்.

கதைப்படி மது, சூது என அலைந்து திரிந்து மறைந்த ரவுடி ரத்னத்தின் வாரிசு என்பதால் நாயகன் அன்பரசு எனும் அருள்நிதிக்கு ஊரில் யாரும் பெண் தர மறுக்கிறார்கள். அதனால் பக்கத்து ஊர் மலர்க்கொடி சுனைனா மீது அருளுக்கு பார்த்தவுடனேயே காதல் பற்றிக்கொள்கிறது. இவர்களது காதல் பூத்து காய்த்து கனியாகும் தருவாயில் அன்பரசு என்ற அருள்நிதியின் ஊர் பெரியவர் சீனிக்கண்ணு ஜெயப்பிரகாஷிக்கும் சுனைனாவின் அப்பாவிற்குமிடையில் ஒரு குத்து வெட்டு கேஸ் பஞ்சாயத்து. அதில் ஜெயபிரகாஷின் மானம் மரியாதை எல்லாம் பறிபோக, கோவில் திருவிழா நாளில் அதற்கு பழிக்கு பழியாக சுனைனாவின் அப்பாவை தீர்த்து கட்டுகிறார் ஜெயப்பிரகாஷ். பொட்ட புள்ள என்றாலும் ஒத்த புள்ள என்பதால் ஆண் பிள்ளையாக வளர்ந்திருக்கும் சுனைனா, தன் அப்பாவை தீர்த்து கட்டிய ஜெயப்பிரகாஷை முச்சந்தியில் வைத்து சாணியை கரைத்து ஊற்றி விளக்குமாற்றால் அடிக்க, அருள்நிதி சுனைனாவின் காதலுக்கு எமனாகிறார்கள் ஜெ.பி.,யும், அவரது வாரிசும். ஊர் பெரிய மனிதரை பகைத்துக் கொண்டு அருள்நிதியும் இணைந்தார்களா? அல்லது பிரிந்தார்களா? என்பதற்கு மட்டுமல்ல நாயகரின் அப்பா ரவுடி ரத்தினத்தின் சாவிற்கு யார் காரணம்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடை அளிக்க முயற்சிக்கிறது வம்சம் படத்தின் மீதிக்கதை.

எப்பாடுபட்டாலும் பிற்பாடு கொடாதவர் வம்சத்தில் வாரிசாக பிறந்த அன்பரசாக அருள்நிதி. அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அசத்தலாக நடித்து ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்த பெருமை உடைய முதல்வர் தாத்தா கருணாநிதியின் பெயரை காபந்து செய்து விடுகிறார். நல்ல உயரம், வாட்டசாட்டமான உருவம் சாந்தமான முகம் என தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு தேவையான அத்தனை தகுதிகளும் அருள்நிதிக்கு கொட்டி கிடக்கிறதென்றால் மிகையல்ல.

கிளாமர் ஹீரோயின் சுனைனா இதில் கிராமத்து ஹீரோயினாக மலர்கொடியாக பாவாடை தாவணியில் பளிச்சென்று நடித்திருக்கிறார். அதுவும் பசுமாட்டிற்கு அசின் என்று பெயர் வைத்து அதன் மூலம் அவரும், அருளும் வளர்க்கும் காதல் செம காமெடி! பத்தாததற்கு அருளின் காதலுக்கு உதவும் கஞ்சா கருப்பு வளர்க்கும் பூனைக்கு த்ரிஷா எனப்பெயர் சூட்டி தனக்கேற்ற எள்ளுருண்டையுடன் காதல் வளர்க்கும் கலகலப்பு வேறு.

வில்லன் சீனிக்கண்ணூக ஜெயப்பிரகாஷ், மருதமுத்துவாக வரும் ராஜ்குமார், அருள்நிதியின் அம்மாவாக வரும் அனுபம்குமார், சொம்புமணி கஞ்சாகருப்பு, உள்ளிட்ட எல்லாரையும் விட கொஞ்ச காட்சிகளே வந்து மடிந்து போகும் ரவுடி ரத்னம் கிஷோர்குமாரின் நடிப்பு பிரமாதம்.

படம் முழுக்க செல்போனை சிக்னலுக்காக மரத்தில் கட்டி தொங்கவிட்டு நாயகன் நாயகி உள்ளிட்ட எல்லோரும் மரத்தின் மீது ஏறி பேசுவது, பசுவுக்கு அசின் என்றும், பூனைக்கு த்ரிஷா என்றும் பெயர் சூட்டி தங்கள் காதலை வளர்ப்பது என காட்சிகளுடன் ஒட்டியே காமெடி காட்சிகளை நிறைவே இருந்தும் ஆரம்பம் முதல் கோவில் திருவிழா, அதை ஒட்டிய நீண்டநெடிய பாடல்காட்சி முதல் நாள், இரண்டாவது நாள் என பத்து பதினைந்து நாட்களும் மண்டகப்படி செய்வோரின் பெயர் பட்டியலை மைக்கில் வாசிப்பது... என நிறையாவே இழுவையாக இருப்பதை தவிர்த்திருந்தால் வம்சம் மேலும் அம்சமாக இருந்திருக்கும்.

வம்சம் - அம்சமும் அல்ல! துவம்சமும் அல்ல!

--------------------------------
குமுதம் விமர்சனம்

பிரமாதமான "பசங்க'' படத்தின் இயக்குனர் பாண்டிராஜின் இரண்டாவது படம். தமிழக முதல்வரின் பேரன் அருள்நிதி ஹீரோவாக அறிமுகமாகும் படம். எனவே, படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்திருப்பவர் அருள்நிதி. முதலுக்கு மோசமில்லை.

வம்சங்களுக்கிடையே உள்ள பகை. அந்தப் பகைக்குள் பூக்கும் காதல். அந்தக் காதலுக்கு வரும் எதிர்ப்பு. அந்த எதிர்ப்பைத் தாண்டிய திருமணம். தமிழ் சினிமாவுக்குப் பழக்கமான கதைதான். ஆனால், அதை வித்தியாசமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக இயக்குனர் திருவிழா, கள்ளி விஷக்கத்தி, அசின் மாடு, அருவாள், மரஉச்சி செல்போன், ரிக்கார்ட் டான்ஸ், பிணவாசம், பன்றிக்கறி என அலை பாய்ந்து க்ளைமேக்ஸை நெருங்குவதற்குள் களைப்படைய வைத்துவிடுகிறது.

புது ஹீரோ அருள்நிதி உயரம் அதிகம். நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்த் திரையுலகில் அவர் தொடப் போகும் உயரமும் அதிகமாயிருக்கும். சற்றே தெரியும் கேமரா கூச்சத்தைத் தவிர்த்துப் பார்த்தால், தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல ஹீரோ கிடைத்து விட்டார். சுனைனா ஒரு மாறுதலுக்கு தனது நடிப்பைக் காட்டியிருக்கிறார். கிராமத்துப் பெண்ணின் அரைத்தாவணியில், கண் பார்வையில் சுனைனா சுறுசுறுனா. படம் முழுவதும் சிரிப்பூட்ட வருகிறார் கஞ்சா கறுப்பு. ஆனால் சொல்லிக் கொள்ளும்படி வரவில்லை.

படத்தின் முக்கியமான பலவீனம் இது. எந்த கதாபாத்திரத்திலும் முழுமை இல்லை. திக்குத் தெரியாத காட்டில் சுற்றுபவர்கள் போல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். மரத்தில் ஏறி செல்போன் பேசும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. அசின் மாடும் அலம்பல் செய்கிறது. ஆனால், அதையே அரைமணிநேரம் காட்டுவது அலுப்பூட்டுகிறது. அரசு செய்திப்படங்கள் போல் வரும் திருவிழாக் காட்சிகள், கொலை செய்யத் திட்டம் போட்டுக் கொண்டே இருக்கும் வில்லன்கள் போன்றவையும் இந்த ரகம்.

இசையமைப்பாளருக்கு ரசிகர்கள்மீது என்னகோபம் என்று தெரியவில்லை. காது ஜவ்வைக் கிழிக்கிறார். பின்னணி இசை என்பது இசைக் கருவிகளை அலற விடுவது அல்ல என்று யாராவது சொன்னால் நலம். இசை விட்ட கோட்டையை ஒளிப்பதிவு பிடித்துவிடுகிறது. படத்துக்கு வேகத்தைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது எடிட்டிங். ஆனால், கலை இயக்குனரும் அழகான கிராமத்துச்சூழலை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். கிராமத்தின் பலமுகங்களை, பல குணங்களை ஒரே படத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். அவை மனதில் பதிய மறுப்பது திரைக்கதையின் சறுக்கல். "பசங்க'' படத்தில் செஞ்சுரி அடித்த பாண்டிராஜ் இதில் ஜஸ்ட் பாஸ்தான்.

வம்சம் : பேர் சொல்லவில்லை. குமுதம் ரேட்டிங் : ஓ.கே.

No comments :

Post a Comment