Tuesday, November 16

பாஸ் (எ) பாஸ்கரன் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

நடிகர் : ஆர்யா

நடிகை : நயன்தாரா

இயக்குனர் :ராஜேஷ்

பலமுறை ‌பரீட்சை எழுதியும் டிகிரி பாஸ் பண்ண முடியாத ஹீரோ டூடோரியல் காலேஜ் அதிபர் ஆகி தான் விரும்பியவரை கரம் பிடிப்பதுதான் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் மொத்த கதையும். இதை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடி‌யுமோ... அத்தனை அசத்தலாக சொல்லி காமெடியாகவும் கலக்கியிருக்கிறார்கள். சபாஷ்.

கதைப்படி, எந்த வேலையும் இல்லாமல் எந்நேரமும் பிஸியாக இருக்கும் ஆர்யா, ஆண்டாண்டு காலமாக தான் வைத்திருக்கும் அரியர்ஸ் பேப்பர்களை முடிக்க உடம்பு முழுக்க பிட்டுகளுடன் காலேஜூக்கு தேர்வு எழுதப் போகிறார். பஸ்ஸிலேயே இவர் பிட்ஸை பார்த்துவிடும் ட்ரைனிங் லக்சரர் நயன்தாராதான், இவரது தேர்வு எழுதும் அறைக்கு பொறுப்பாளர். விடுவாரா அம்மணி? அத்தனை பிட்களையும் பிடுங்கிக் கொண்டு ஆர்யா அடுத்த ஆண்டும் பெயிலாக காரணமாகிறார். இந்நிலையில் யதேச்சையாக ஆர்யாவின் அண்ணனிற்கும், நயன்தாராவின் அக்காவிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, கல்யாணமும் நடக்கிறது. அதுமுதல் நயன்தாரா மீது காதல் கொள்ளும் வெட்டி ஆபீஸர் ஆர்யாவின் காதல் அங்கீகரிக்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதை சிரிக்கவும், சிந்திக்கவும் சொல்லியிருக்கிறார்கள்.

வேலைவெட்டி இல்லாமல் ஊதாரித்தனமாக சலூனில் சிப்பும் கையுமாக திரியும் இளைஞர்களை அழகாக தன் பாஸ் என்கிற பாஸ்கரன் பாத்திரத்தின்மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆர்யா. அவருக்கு நயன் மீது காதலும், பொறுப்பும் வந்ததும் வித்தியாசமாக வெற்றி பெற முயலுவதும் இயல்பு. சென்னை வாழ் ஆர்யாவை கும்பகோணத்து குமரனாக ஏற்றுக் கொள்வதிலும், பார்ப்பதிலும் சற்றே தயக்கம் இருந்தாலும் போகப் போக சரியாகி விடுகிறது. கொடுத்த கடனை திருப்பி வாங்க அவன் நடையா நடப்பான் என தெனாவட்டாக பேசும் ஆர்யாவாகட்டும், உடம்பு முழுக்க பிட்டுடன் பரீட்சை எழுத போவதிலாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ஆர்யா, பாஸ்கரன் பாத்திரமாகவே பொருந்தி இருக்கிறார்.

இன்னொரு ஹீரோ என சொல்லும் அளவிற்கு காமெடி சந்தானமும் ஒரே ஒரு நண்பனை வைத்துக் கொண்டு படாத பாடுபடுவது செம காமெடி!

நயன்தாராவின் இயல்பான நடிப்பும், காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படும் பாடும் செம டாப் டக்கர். ஆனால் உடம்பைதான் எடை குறைக்கிறேன் பேர்வழி எனஎலும்பும் தோலுமாக ஆக்கி வைத்துக் கொண்டு நம் கண்களில் குளிர்ச்சிக்கு பதில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார். ஆர்யாவின் அண்ணன் கால்நடை மருத்துவராக, கல்யாணம் பற்றி பேசினா‌லே கடுப்பாகும் கேரக்டரில் வரும் சுப்பு பஞ்சுவும், அவரது ஜோடி விஜயலட்சுமியும் கூட சூப்பர் பர்பார்மன்ஸ்.

யுவனின் இதமான இசை ஷக்தி சரவணனின் இனிமையான ஒளிப்பதிவு இவற்றின் உதவியுடன் காதலையும், காமெடியையும் கலந்து காக்டெயில் பார்ட்டி கொடுத்து கலக்கியிருக்கிறார் எம்.எஸ்.எஸ். இயக்குனர் ராஜேஷ் எம்.

பாஸ் (எ) பாஸ்கரன் - பர்ஸ்ட் கிளாஸ்.

---------------------------
குமுதம் விமர்சனம்

இப்படி ஒரு ஜாலியான காதல் படத்தைப் பார்த்து எத்தனை நாளாயிற்று?

கதை என்று பார்த்தால் எஸ்.எம்.எஸ்.(!)ஸில் அனுப்பிவிடலாம். படிப்பு ஏறாமல் தண்டமாய் சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்யா, படித்த நல்ல வேலையில் இருக்கும் தன் அண்ணியின் தங்கை நயன்தாராவை ரூட் விடுவதுதான் படம். கடைசியில் ஒரு டுடோரியல் ஆரம்பித்து மாணவர்களை ""பாஸ் செய்ய வைக்கிறார் பாஸ்கரன்!

அடுத்து என்ன நடக்கும் ? என்று நாம் யூகித்தபடியே காட்சிகளை நகர்த்தினாலும் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல், திடீர் திருப்பங்கள் எல்லாம் நிகழாமல், ஒரு வினாடி கூட போரடிக்காமல், கலகலப்பாகக் கொண்டு சென்றிருப்பது இயக்குனர் ராஜேஷின் சாமர்த்தியம்.

நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார் ஆர்யா. அந்த ஆறடி உயரமும், அப்பாவியாய் நயனைச் சுற்றிச்சுற்றி வருவதும், நயன்தாரா லெக்சரர் என்று தெரியாமல், அவரிடமேதான் ஜட்டியில் பிட் வைத்திருக்கும் ரகசியத்தைச் சொல்வதும் என்று கல(கல)க்கியிருக்கிறார்.

நயன்தாராவிடம், ஆர்யா வழியும்போதெல்லாம் ஒன்றும் தெரியாததுபோல் பாடன் (Pardon) என்று நயன் சொல்ல, அதன் அர்த்தம் புரியாமல், நண்பன் ஏற்றவிட்டதால், ""பாடேன் என்றுதான் சொல்கிறார் என்று நினைத்து நயன்தாரா முன்னால் பாடுவது செமை கலாட்டா.

நயன்தாராவுக்குப் பழைய அழகு திரும்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் சதை போடுங்கள் அம்மணி. ஆர்யா தன்னை காதலிப்பது தெரிந்தும் அவர் சிரித்துக் கொண்டேப் போவதை பலமுறை காட்டியிருக்க வேண்டாம்.

படத்தின் மிகப்பெரிய பலம் சந்தானத்தின் டைமிங் காமெடி. அதுவும் ""தல,தளபதி என்று (அஜித்,விஜய் ரசிகர்களைக் கவர இப்படி ஒரு ஐடியா !) சலூன் வைத்துக்கொண்டு, "டபிள் மீனிங் டயலாக்கெல்லாம் இல்லாமல் பட்டையைக் கிளப்புகிறார் சந்தானம். பாங்க் மானேஜர் பந்தா காட்ட ""என்னய்யா ரூம்ல ஒரு வீலிங் சேரை வச்சுகிட்டு பந்தா காட்டறியே, என் சலூன்ல நாலு லீவிங் சேர் இருக்குய்யா என்று சொல்லும்போது தியேட்டரே குலுங்குகிறது. ""நண்பன்டே என்று ரஜினீ ஸ்டைல் பண்ணுவதும் ஹாஹா.
ஒரே பாட்டில் பணக்காரனாகும் சினிமாக்களை கிண்டல் அடிப்பதும், பொருத்தமான காட்சிகளில் பழைய பாடல் வரிகளை ஓடவிடுவதும் செமை பொருத்தம்.

டுட்டோரியலில் தூங்கிக் கொண்டும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டும் இருந்து முக்கியத் திருப்பத்துக்குக் காரணமாக இருக்கும் குண்டுப்பையன் அஸ்வின்ராஜா பலே.
யுவன் ஷங்கர் ராஜாவுக்குச் சிறகு முளைத்திருக்கிறது. எல்லாப் பாடல்களுமே இதம்!

ஆர்யாவின் அண்ணனாக வரும் சுப்புவின் அந்த வெட்கம் கலந்த வழிசல் யதார்த்தம்.

திடீரென ஜீவா ஒரு காட்சியில் தோன்றுவதும், அவரை செல்போனில் டைரக்டர் கலாய்ப்பதும் வேடிக்கை. படத்தில் ஒன்றுமே இல்லை. ஆனால் எல்லாமே இருக்கிறது, லாஜிக் இல்லை. மேஜிக் இருக்கிறது.

குமுதம் ரேட்டிங் : நன்று

No comments :

Post a Comment