Monday, November 15

எந்திரன் விமர்சனம்


தினகரன் விமர்சனம்

படத்தின் பிரமாண்டத்தை எடுத்துக்காட்ட, ‘ஹாலிவுட் படங்களைப்போல...’ என்று பேச்சுக்கு இதுவரை சொல்லிக்கொண்டிருந்த இந்திய சினிமாவில், முதல்முறையாக ஹாலிவுட் தரத்துடன் ‘எந்திரனை’ தயாரித்திருக்கிறது சன் பிக்சர்ஸ்.ரஜினியின் வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டு அமைந்த இந்தப்படத்தின் கதையே அலாதியானது. ரோபோடிக் விஞ்ஞானியான ரஜினி, பத்து வருடங்கள் அயராது உழைத்து, மனிதனைப் போலவே செயலாற்றக்கூடிய ‘ஆன்ட்ரோ ஹியூமனாய்ட் ரோபோ’ ஒன்றை உருவாக்கி, அதற்கு ‘சிட்டி’ என்று பெயரிடுகிறார். அதை ராணுவத்துக்கு அர்ப்பணிப்பது அவரது திட்டம். ஆனால், அதற்கான ‘ஆர் அன்ட் டி’ ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் வருகிறது. அதற்காக ரஜினி அந்த ரோபோவுக்கு மனித உணர்வுகளை ஊட்ட, அங்கே முளைக்கிறது பிரச்னை. ஒருபக்கம் ரஜினியின் கண்டுபிடிப்பைத் தவறான செயல்களுக்கு பயன்படுத்த நினைக்கும் மூத்த விஞ்ஞானி டேனி டென்சோங்பாவின் எதிர் நடவடிக்கைகளையும், இன்னொரு பக்கம் மனித உணர்வு ஊட்டப்பட்ட சிட்டியால் வரும் நேரடிப் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது ரஜினிக்கு. இதன் முடிவு என்ன என்பதை சுவாரஸ்யமான கனவுப்பயணமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

குடும்பம், காதலை இரண்டாம் பட்சமாக வைத்து கண்டுபிடிப்பையே உயிர் மூச்சாக நினைக்கும் விஞ்ஞானி வசீகரனாகவும், அவரது கண்டுபிடிப்பால் உருவான ரோபோ ‘சிட்டி’யாகவும், டேனியின் சதிவலையால் அழிவு சக்தியூட்டப்பட்ட வில்லன் ரோபோவாகவும் ரஜினியே மூன்றுமுகம் காட்டியிருப்பது ரசிகர்களுக்கான ஸ்பெஷல் விருந்து. மூன்றிலும் மாறுபட்ட நடிப்பில் வித்தியாசம் காட்டி, தான் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, மிகச்சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்திருக்கிறார் ரஜினி.காதல் பாடலில் கூட நியூட்ரான், எலக்ட்ரானைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானி ரஜினி, வழக்கமான தன் ஸ்டைல்களிருந்து வேறுபட்டு எதிரியைக் கண்ணில் மண்ணைத்தூவி விட்டுத் தப்பிக்கும் அளவில், அழகாக அடக்கிவாசிக்க, ‘சிட்டி’யாக வரும் ‘எந்திரன்’ ரஜினி, கை, கால்கள் உதட்டசைவு மட்டுமே காட்டி எந்திரமாகவே ‘அன்டர்பிளே’ செய்தாலும் காட்சிக்குக் காட்சி ஆட்சி செய்கிறார்.‘டி.வியை போடு’ என்றால் டி.வியை போட்டு உடைப்பது, டிராபிக் கான்ஸ்டபிள், ‘கொஞ்சம் வெட்டு’ என்றால் கையை வெட்டுவது, சலூன் கடையில் டெலிபோன் டைரக்டரி உள்ளிட்ட புத்தகங்களை பார்வையிலேயே ஸ்கேன் செய்துவிட்டு, போன் நம்பர்களை கடகடவென ஒப்புவிப்பது என்று செம ஜாலி ரூட் போடுகிறார் ‘சிட்டி’ ரஜினி. ஐஸ்வர்யா ராயின் ஹாஸ்டலுக்கு சென்று தன்னை மனிதன் என்று நினைப்பவர்களிடம் தலையை கழற்றி காண்பித்து, ரோபோ என்று சொல்வதும், ஐஸ்வர்யாராயின் அறையை ஒழுங்குபடுத்தி அவருக்கு ருசியாக சமைத்துக் கொடுப்பதும், தேவதர்ஷினியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரும் பெண்களுக்கு மருதாணி போடுவதுமாக பெண்கள் ஏரியாவிலும் புகுந்து விளையாடுகிறார் சிட்டி.
இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் மூன்றாவது அவதாரமான வில்லன் ரோபோ ரஜினி. ‘16 வயதினிலே’ பரட்டையிலிருந்து, ‘சந்திரமுகி’ வேட்டையன் வரை அத்தனை வில்லன்களையும் கலந்து செய்த கலவையாக மாறி கலகம் செய்கிறார். அவரது தோற்றமே மிரட்டுகிறது. தன்னை அழிக்க தன் உருவத்திலேயே வந்திருக்கும் விஞ்ஞானி ரஜினியை, ‘யாரந்த கருப்பு ஆடு?’ என்று வெறியோடு தேடும்போதும், சந்தேகப்படும் ரோபோக்களை வெட்டி வீழ்த்தும்போதும் அடிவயிற்றை கலக்க வைக்கிறார்.

கடைசியில் விஞ்ஞானி ரஜினியை கண்டுபிடித்ததும், ‘ம்ம்மே...’ என்று ஆடுபோலவே கத்திக் கொண்டு அவரை நெருங்குவதும், துப்பாக்கி விரல்களை வாயில் நுழைப்பதும் வில்லத்தனத்தின் உச்சம்.
ஐஸ்வர்யாவின் தலையில் பல வருடங்களுக்கு முன் சூட்டப்பட்ட உலக அழகி கிரீடத்தை ரசிகர்கள் ஏன் இன்னும் இறக்காமல் இருக்கிறார்கள் என்பதற்கான பதில், ‘எந்திரனி’ல் இருக்கிறது. ‘கிளிமஞ்சாரோ...’ பாடலின் ‘ஹஹக் ஹஹா...’ என்ற ஹம்மிங்கிற்கு இடுப்பை வளைத்து ஆடுவதில் தொடங்கி, ‘அரிமா... அரிமா’ என்ற ரோபா பாடல் வரைக்கும் அவர் போடும் கிறங்கடிக்கிற அந்த ஆட்டம் இன்னும் பல வருடத்துக்கு அந்த கிரீடத்தை இறங்காமல் பார்த்துக் கொள்ளும். விஞ்ஞானி ரஜினி ஆராய்ச்சியே கதியென்று கிடக்க, வெறுத்துப்போய் அவர் கொடுத்த காதல் பரிசுகளை திருப்பிக் கொடுத்து காதல் ரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்கும் அப்பாவித்தனத்திலிருந்து, ‘நீ வெறும் மிஷின். நீயும் நானும் காதலிக்கிறது நடக்காத காரியம்‘ என்று ரோபோ ரஜினிக்கு தன்னை புரிய வைப்பது வரையிலான நடிப்பில் இருப்பது உயிர்ப்பு.விஞ்ஞானி ரஜினியின் உதவியாளர்களாக வரும் கருணாசும், சந்தானமும் காமெடி கிரவுண்டில் நின்று விளையாடுகிறார்கள். மனசுக்குள் வன்மத்தையும், உதட்டில் சிரிப்பையும் வைத்துக் கொண்டு வில்லத்தனத்தை ஸ்லோ பாய்சனாக பாய்ச்சும் டேனி டென்சோங்பா பயங்கரம் காட்டுகிறார். தன் இயலாமையை தான் உருவாக்கும் ரோபோவிடம் காட்டும்போதும், ரோபோவாலேயே பரலோகம் போகும்போதும் நடிப்பில் கவர்கிறார் டேனி.
இயந்திர மனிதனுக்கும், அதை உருவாக்கும் விஞ்ஞானிக்குமான கதை என்றபோதும் அதற்குள்ளும் மெல்லிய காதலைச் சொல்வதும் அந்த காதல்தான் மொத்த பிரச்னைக்கும் காரணம் என்பதை பதிய வைப்பதிலும் தன் உயரத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறார் ஷங்கர்.

வெறும் மெஷினாய் இருக்கும்போது, கொடுக்கும் முத்தத்தை, ‘ஏன் கன்னத்தை எச்சில் பண்ற?’ என்று கேட்கும் ‘சிட்டி’ ரஜினி, தனக்கு உணர்ச்சி வந்ததும் இன்னொரு முத்தம் கேட்டு ஐஸ்வர்யா தங்கியிருக்கும் இடத்துக்கே போவதும், அவரை கடித்த ரங்குஸ்கி கொசுவை கொண்டு வருவதும் கலகல ஏரியா.தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் ரோபோ ரஜினி, அந்த விபத்தில் நிர்வாணமாக மாட்டிக் கொள்ளும் பெண்ணை அப்படியே தூக்கி வருவதும், அந்த அவமானம் தாங்காமல் அந்த பெண் தற்கொலை செய்து கொள்வதும், அதுவே ரோபோவை விஞ்ஞானிகள் நிராகரிப்பதற்கு காரணமாக அமைவதும் திரைக்கதையின் அற்புதமான பகுதி. அதே ரோபோ, மனித உணர்வுகளைப் பெற்றதும், சிக்கலான பிரசவத்தை பாரம்பரிய வைத்திய முறைப்படி செய்து நவீனத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பாலம் அமைத்திருப்பதும் அக்மார்க் ஷங்கர் முத்திரை. நுட்பமான சயின்ஸ் ஃபிக்ஷன் கதையைப் பாமரர்களும் குடும்பத்துடன் புரிந்து ரசிக்கும் அளவில் எளிமைப்படுத்தித் தந்திருப்பதில் அவரது பணி மகத்தானது.படத்தின் இரண்டாம் பகுதியில், பல ஆச்சர்யங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ரஜினியை போன்ற தோற்றம் கொண்ட நூறு ரோபோக்கள் கையில் எந்திர துப்பாக்கியுடன் அலைவதும், அவர்களே, பிரமீடாகவும், நெளியும் பாம்பாகவும், வானம் வரை போய் ஹெலிகாப்டரை துவம்சம் செய்வதும், மெகா மனிதன் சென்னை சாலையில் நடந்து வரும் அந்த பிரமாண்டமும் டெக்னிக்கல் உச்சம்.
கற்பனைக்கெட்டாத வண்ணமிகு லொகேஷன்களில் மட்டுமல்லாது,

உலோகமயமான செட்டுகளிலும் ஒளியைக் கட்டுக்குள் கொண்டுவந்து கண்ணைக்கவரும் வண்ணங்களாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலுவின் பங்களிப்பு அற்புதம். அவருடன் இணைந்து கலக்கியிருக்கும் எடிட்டர் ஆன்டனியின் பணி பாராட்டத்தக்கது. ‘ஜெனரேஷன் நெக்ஸ்ட்’ இசையைப் பாடல்களில் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் அமைத்து மிரள வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானும், தியேட்டர் இருக்கைகள் குலுங்கும் வித்தியாசமான ஒலியமைத்திருக்கும் ரசூல் பூக்குட்டியும் அடுத்த ஆஸ்கருக்குக் குறிவைக்கிறார்கள். ஹாலிவுட் படங்களையொத்த செட்டுகளை அமைத்து வாய்பிளக்க வைத்திருக்கும் சாபுசிரில், இதில் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்தப் படம் அவர்களின் வாழ்நாள் சாதனை படமாக இருக்கும். ரசிகர்களுக்கு இதுவரை கிடைத்திராத, இனி கிடைப்பதற்கு அரிதான விருந்தாக அமைந்திருக்கிறது ‘எந்திரன்’. எந்திரனை தூக்கி வைத்து கொண்டாடியதன் மூலம், தமிழ் சினிமாவின் உயரத்தையும், தங்கள் ரசனையின் தரத்தையும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் ரசிகர்கள்

-நன்றி தினகரன்

No comments :

Post a Comment