Monday, November 15

ஒச்சாயி விமர்சனம்




தினகரன் விமர்சனம்

நடிகர்கள்: தயா, தாமரை, ராஜேஷ், திரவியபாண்டியன், கஞ்சா கருப்பு, ஷகீலா.

இயக்கம்: ஆசைத்தம்பி

தயாரிப்பு: ஆச்சி கிழவி திரைக்கூடம்

இசை: ஜீவராஜா

ஒளிப்பதிவு: பிரேம் சங்கர்



மனைவி இறந்ததால், மகன் தயாவின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, இரண்டாவது திருமணம் செய்கிறார் ராஜேஷ். விதி விளையாடுகிறது. இரண்டாவது மனைவிக்கும், வேறொரு இளைஞனுக்கும்தொடர்பு ஏற்படுகிறது. இதையறிந்த ராஜேஷ், ஆவேசத்தில் மனைவியையும், இளைஞனையும் கொலை செய்துவிட்டு, ஜெயிலுக்கு செல்கிறார். உறவினர்களும் கைவிட்டதால், தயா அனாதையாகிறார். பிறகு சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடும் அவர், எதிர்பாராத நேரத்தில் கொலையும் செய்கிறார். அவருக்கு ரவுடி திரவியபாண்டியன் அடைக்கலம் கொடுத்து, தம்பியாக தத்தெடுக்கிறார்.

சிறையிலிருந்து விடுதலையாகும் ராஜேஷ், மகனுடைய நிலையை நினைத்து வருந்தி, திரவியபாண்டியனிடம் இருந்து அவனை மீட்கப் போராடுகிறார். மகனை நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் அவர், அனாதையான தன் தங்கை மகள் தாமரையை மணம் முடித்து வைக்க பேசுகிறார். சித்தியின் தகாத செயலால், பெண்களை வெறுக்கும் தயா, தாமரையை விரும்பாமல் எடுத்தெறிந்து பேசுகிறார். ஆனால், நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இந்நிலையில், பெரிய மனிதர் போர்வையில் ஒளிந்திருக்கும் சந்தானபாரதிக்கும், தயாவுக்கும் தொழிலில் போட்டி ஏற்படுகிறது. விரோதம் விருட்சமாக வளர்கிறது. ஒருவரை ஒருவர் கொல்லத் துடிக்கின்றனர். இதையறிந்த திரவியபாண்டியன், சந்தானபாரதியை எச்சரிக்கிறார். இதனால் பொங்கி எழும் சந்தானபாரதி, திரவியபாண்டியன் மற்றும் தயாவை போட்டுத்தள்ள வேறொரு ரவுடி கும்பலிடம் பேரம் பேசுகிறார். முடிவு என்ன என்பது, கிளைமாக்ஸ்.

புதுமுகங்கள் தயா, தாமரை தங்கள் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றனர். ஆனால் அவ்வப்போது தயா, ‘பருத்திவீரன்’ கார்த்தியின் மேனரிஸங்களை ஞாபகப்படுத்துகிறார். தாமரையை வீட்டை விட்டு விரட்டும் கோபத்தையும், பிறகு அவர் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்ற காதலையும் நன்றாக வெளிப்படுத்துகிறார். தாமரை இயல்பாக நடித்துள்ளார். பெண்களை வெறுக்கும் தயாவிடம், பெண்களின் மேன்மையை மூச்சுவிடாமல் பேசும்போது, சபாஷ் சொல்ல வைக்கிறார்.

பெரிய மாயன் கேரக்டரில் ராஜேஷ், வாழ்ந்திருக்கிறார். தன் மனைவி, வேறொருவனுடன் இருப்பதை பார்த்துவிட்டு பதறும்போதும், கோபத்தில் அவர்களை வெட்டிச் சாய்த்துவிட்டு, பிறகு தன் மகனை நினைத்து வருந்தும்போதும் நச். கருத்தப்பாண்டியாக வரும் தயாரிப்பாளர் திரவியபாண்டியன், என்கவுன்டர் செய்ய வந்த போலீசிடம் வீர வசனம் பேசி, மண்ணில் சாயும்போது கவனிக்க வைக்கிறார். ரெக்கார்ட் டான்ஸ் ஆடும் கஞ்சா கருப்பு, ஷகீலா ஜோடி கலகலப்பு ஏற்படுத்துகின்றனர். குவார்ட்டர் பாட்டிலை காலி செய்ய உட்காரும் கருப்பு, ஓட்டை கிளாஸில் ஊற்றுகிறோம் என்று தெரியாமல், மற்றவர்களை சந்தேகப்பட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளும்போது, ‘உச்’ கொட்ட வைக்கிறார். சந்தானபாரதி மகனாக, லூசுப்பையனாக வரும் ஒச்சு, நல்ல தேர்வு.

பிரேம் சங்கரின் ஒளிப்பதிவும், ஜீவராஜாவின் இசையும் கதையோட்டத்துக்கு உதவுகிறது. பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் வளரும் மகனின் நிகழ்காலமும், எதிர்காலமும் எப்படி அமையும் என்று சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஆசைத்தம்பி. பல வருடங்களாக இதேபோன்ற கதை மற்றும் காட்சிகளுடன் வந்த பல படங்களை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. கிளைமாக்சும் எதிர்பார்த்த மாதிரியே வருகிறது. ஹீரோ கெட்டவன் என்று உணர்த்த, எப்போதும் அவனை பாட்டிலும் கையுமாக காட்டியிருப்பது நெருடல். வன்முறைக்களத்தில், காதலைச் சொல்வதா? ரவுடிகளின் வாழ்க்கையைச் சொல்வதா என்று இயக்குனர் குழம்பி இருக்கிறார்.


-நன்றி தினகரன்

No comments :

Post a Comment