Friday, November 19

மகிழ்ச்சி விமர்சனம்


நடிகர் : கவுதமன்

நடிகை : அஞ்சலி

இயக்குனர் :கவுதமன்

தினமலர் விமர்சனம்

பிரபல எழுத்தாளர் நீல பத்மநாபனின் உயிரோட்டமான கதைதான் மகிழ்ச்சி என்ற பெயரில் சினிமா ஆகியிருக்கிறது. வ.கவுதமனின் திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பில் த.மணிவண்ணனின் தயாரிப்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்கும் மகிழ்ச்சி திரைப்படம் ரசிகர்கள் மனதில் இடம் பெறும் என்று உறுதி அளிக்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு அக்கா - தம்பி இடையே நெருக்கமான பாசத்தை அழகாக சித்தரித்திருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தின் இயற்கை எழிலும், அந்த மாவட்டத்திற்கே உரிய வட்டாரத் தமிழும், படம் முழுவதும் காணப்படும் ப்ளஸ். இரணியல் என்ற சிற்றூரில் படமாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு அக்காக்கள், தங்கை, பெற்றோர், பாட்டி, மாமா என்று பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர் கதாநாயகன் வ.கவுதமன். படத்தின் இயக்குனரும் இவரே. பாத்திரத்தின் பெயர் திரவியம். எல்லோரும் அவரை திரவி என்று அழைக்கிறார்கள். அவரது முறைப்பெண் குழலி (அஞ்சலி). திரவியும், குழலியும் காதலிக்கிறார்கள். தன் அக்காவிற்கு திருமணம் ஆன பிறகே தனக்கு திருமணம் என்பதில் திரவி திடமாக இருக்கிறார். ஊரில் பெரிய பணக்காரரும், சொந்தத்தில் கடை நடத்துபவருமான செவத்த பெருமாளுக்கும் (நடிகர் சம்பத்), திரவியத்தின் அக்கா நாகம்மைக்கும் (நடிகை கார்த்திகா) திருமணம் நடக்கிறது. ஆனால் அவருக்கு திருமண வாழ்க்கை புயலாகிறது. புகுந்த வீட்டில் கணவர், மாமியார் கொடுமை காரணமாக தற்கொலைக்கு முயலுகிறார். கோபமடைந்த கணவர் நாகம்மையை பிறந்த வீட்டுக்கு நிரந்தரமாக திருப்பி அனுப்பி விடுகிறார். தீராத நாகம்மை பிரச்னைக்காக காலவரம்பின்றி காத்திருக்க முடியாது என்று கூறி குழலியின் பெற்றோர் அவரை கட்டாயப்படுத்தி வேறு இடத்தில் திருமணம் செய்து விடுகின்றனர்.

பிள்ளை பெற்றுத்தரவில்லை என்று நாகம்மையை ஒதுக்கிய தன் அத்தானுடன் (அக்காவின் கணவர்), திரவி சமரசம் செய்யும் முயற்சிகள் தோற்கின்றன. தான் பரிபுரியும் அரசாங்க பள்ளியின் தலைமை ஆசிரியர் மோசஸ் (பிரகாஷ் ராஜ்) உதவியுடன் தன் அக்காவை மெடிக்கல் செக்-அப்பிற்கு அழைத்து செல்கிறார் திரவி. அதில் நாகம்மையிடம் எந்தற குறைபாடும் இல்லை; தாயாக எல்லா தகுதியும் இருக்கிறது என தெரியவருகிறது. குழந்தை பிறக்காததற்கு அக்காவின் கணவர்தான் காரணம் என அறியும் திரவி, அவரை எதிர்த்து கேட்கிறார். தன் இயலாமையால் வெறுப்படையும் சம்பத், பழிவாங்க முடிவு செய்கிறார்.

இதற்கிடையில் திரவியின் நீண்ட நாள் நண்பரும், எதற்கும் அவருக்கு தோள்கொடுக்கும் நண்பரான குற்றாலம் (சீமான்), திரவியின் அக்காவுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகிறார். நாகம்மையின் திருமணம் நடக்கக் கூடாது என்பதற்காக சம்பத், அவரை கடத்தி காட்டுப்பகுதியில் உயிரோடு புதைக்கிறார். சரியான நேரத்தில் தகவல் தெரிந்து, அங்கு வரும் திரவி, குற்றாலம் மற்றும் மோசஸ் ஆகியோர் நாகம்மையை காப்பாற்றுகிறார்கள். நாகம்மை - குற்றாலம் திருமணம் நடக்கிறது.

வ.கவுதமன், சீமான் இருவரும் பாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கவுதமன் சண்டைக்காட்சிகளில் விஜயகாந்தை நினைவூட்டுகிறார். காதல் காட்சிகளிலும் ஓ.கே., சேலை கட்டிய எனத் தொடங்கும் பாடலுக்கு அஞ்சலி நிறைய கிளாமராக ஆடியிருக்கிறார். திரவியின் முதுகில் அஞ்சலி உப்புமூட்டை ஏறி ஓடையை கடக்கும்போதும், திரம்பி குடும்பத்தினரோடு உ‌ரிமையுடன் பழகும் காட்சிகளும் ரசிக்கக் கூடியவை. அக்காவாக வரும் கார்த்திகா, தம்பி மீது பாசத்தை ‌‌பொழிகிறார். எரியும் அடுப்பில் இருந்து தம்பிக்காக வெறும் கையால் வடையை எடுத்து விட்டு வலியால் துடிப்பதும், அக்காவின் வலி பொறுக்க முடியாமல் தம்பி துடிப்பதும் பாச வெளிப்பாடுகள். கார்த்திகாவின் தோற்றம் ஹீரோவின் அக்கா என்பதை ஒப்புக்கொள்ள நெருடலாக இருக்கிறது.

கஞ்சா கருப்பின் காமெடி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. பாட்டன் வி.எஸ்.ராகவனின் முதல் மனைவி, பாசமாக கஞ்சா கருப்பிற்கு விருந்து வைக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. தான் சாப்பிடுகிற இலையில் ஏற்கனவே மூன்று பேர் சாப்பிட்டது, அதை கழுவி, அதிலே தனக்கு விருந்து கொடுக்கிறார்கள் என்று அறிந்து கஞ்சா கருப்பு படும் அவஸ்தை செம காமெடி.

இந்த அளவுக்கு கொடுமைக்காரராக ஒருவர் இருக்க முடியுமா? என்று கேட்கும் அளவுக்கு சம்பத் நடித்திருக்கிறார். தன் தந்தையின் கெட்ட நடத்தை காரணமாக அவரை வெறுக்கும் சீமான், பின்னர் அவருக்கு வாத நோய் வரும்போது பாசத்தோடு பணிவிடை செய்யும்போதும், நண்பரின் பிரச்னையை தீர்க்க உதவும் போதும் சீமான் பண்பட்ட நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.

படத்தின் கடைசிக் காட்சியில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிறைய பரிசுகள் பெறும் பிரபாகரன் என்ற இமானார், எளிய குடும்பத்தில் பிறந்த தன்னை இந்த அளவுக்கு உயரச் செய்த தன் தாய்மாமன், தாய், தந்தையரை ‌விழா மேடைக்க அழைக்க அனுமதி கேட்கிறார். கவுதமன், சீமான், கார்த்திகா ஆகியோர் வயதானவர்களாக மேடையேறுகிறார்கள்.

ஜாதி, ஜாதி என்று எதற்கும் ஜாதியை பிரச்னை ஆக்காமல், ஜாதியை மறந்து எப்படி வாழ்வில் சாதிக்க முடியும் என்றே இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொள்‌வதுவன் நச்சென்று படம் முடிகிறது.

சீரான கதையோட்டம் கொண்ட படத்தில் கூரப்பட்டு சேலைக்காரி என்ற கடைசி கடைசி பாட்டை குத்துப்பாட்டு குரூப் நடனம் ஏன்தான் சேர்த்தார்களோ? வித்யாசாகரின் இசை, செழியனின் ஒளிப்பதிவு, சூப்பர் சுப்பராயனின் சண்டை பயிற்சி ஆகியவை படத்திற்கு மெருகு ஊட்டுகின்றன.

No comments :

Post a Comment