Wednesday, June 2
சிங்கம் விமர்சனம்
தினகரன் விமர்சனம்
தூத்துக்குடி மாவட்டம், நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சூர்யா. சென்னையில் நடந்த கொலை வழக்கில் கைதாகும் பிரகாஷ் ராஜுக்கு, நல்லூர் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் அளிக்கிறது கோர்ட். வேறு ஆளை ஏற்பாடு செய்து கையெழுத்து போட வைக்கிறார் பி.ராஜ். இதை கண்டுபிடிக்கும் சூர்யா, ‘அவரு வந்து கையெழுத்து போடணும்; இல்னைன்னா இங்க இருந்தபடியே, அவனை தூக்கி உள்ளே வச்சுடுவேன்’ என்று கண்டிக்கிறார். அவசர அவசரமாக கிளம்பி வரும் பி.ராஜ், சூர்யாவை மிரட்டுகிறார். அவரது ஒவ்வொரு மிரட்டலுக்கும் ஊர்மக்கள் பதிலடி கொடுக்கின்றனர். வேறுவழியில்லாமல் பணிந்துபோகிறார். ஒரு கட்டத்தில், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கொடுத்து, தன் ஏரியாவான சென்னை திருவான்மியூருக்கு வரவழைக்கிறார் பி.ராஜ். பிறகு தொடங்குவது தகதகக்கும் ஆக்ஷன் மேளா.
காக்கி சட்டைக்கு பொருத்தமான நடிகர்கள் பட்டியலில் மீண்டும் தனது பெயரை உறுதி செய்திருக்கிறார் சூர்யா. விரைப்பான பார்வை, கம்பீரமான நடை, பொறி பறக்கும் ஆக்ஷன் என அனைத்து ஏரியாவிலும் அமர்க்களப்படுத்தும் சூர்யா, ரசிகர்களின் மனங்களை அள்ளுகிறார். ஊர்க்காரர்களின் சின்ன சின்ன சண்டைகளை பெரிசுபடுத்தாமல், அவர்களை கைகொடுக்க வைத்து, சமரசம் செய்து அனுப்புவது, ‘ஊர்ல எல்லாரும் பங்காளிங்கதான். கேஸை போட்டு அவங்களை அலைய வைக்க மனசு கேட்க மாட்டேங்குது’ என்று அவர்களை மனிதாபிமானத்தோடு பார்க்கும் போது நமக்கும் பாசம் வந்துவிடுகிறது. புலி வேடம் போட்டுக்கொண்டு செல்லும் அனுஷ்காவுக்கு, சூர்யா பளார் விடுவதும், பிறகு, ‘பொம்பளைன்னு தெரியாம அடிச்சுட்டேன்; மன்னிச்சுக்கோங்க. பதிலுக்கு நீங்க வேணா, என்னை அடிச்சுக்குங்க, யாரும் பார்க்காத மாதிரி அடிச்சீங்கன்னா, போலீசுங்கற மரியாதை இருக்கும்” என்றும் சொல்வதும் அந்த இடத்திலேயே அனுஷ்கா, சரண்டர் ஆவதும் இதம்.
வேண்டுமென்றே, ‘அது தொலைஞ்சுபோச்சு, இது காணாம போயிடுச்சு’ என்று ஸ்டேஷனுக்கு வரும் அனுஷ்காவின் காதல், அழகான கிராமத்து கவிதை. ‘என்னை விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணினே, ரூம் போட்டு மேட்டரை முடிச்சுட்டேன்னு சொல்லிருவேன்’ என்று அனுஷ்கா மிரட்டும்போது, தியேட்டரில் விசில் பறக்கிறது. வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் பிரகாஷ்ராஜ். ‘கில்லி’க்கு பிறகு அவரது அபார நடிப்பில் அக்னி வெயில். பணக்காரர்களின் வாரிசுகளை கடத்தி வைத்துக்கொண்டு பணத்துக்காக மிரட்டுவதும் புதிதாக கட்டிடம் கட்டுபவர்களிடம் மாமூல் தரும்படி வற்புறுத்துவதுமாக அசல் தாதாவாகியிருக்கிறார். ‘அட்ரசே இல்லாத ஊர்ல உட்கார்ந்துகிட்டு என்னைய மிரட்றியா?’ என சூர்யாவை பி.ராஜ் எச்சரிக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே திரளும் ஊர்க்காரர்கள், கார்களை துவம்சம் செய்வது அமர்க்களம். சென்னைக்கு மாற்றல் ஆகிவரும் சூர்யாவிடம் பி.ராஜ் தொடங்கும் நேருக்கு நேர் மோதல் ஜிவ்வென எகிறுகிறது.
பதவி ஏற்க வந்த முதல்நாளே சூர்யாவை சந்திக்க வரும் பி.ராஜ், ‘உன்னை சும்மா விடமாட்டேன்டா? குடைச்சல் கொடுத்துகிட்டே இருப்பேன்’ என்று சவால்விடுவதும் அவருக்கு உடந்தையாக உயர் அதிகாரி நிழல்கள் ரவி நடந்துகொள்வதுமாக பரபரக்கிறது காட்சிகள். ‘இவங்ககளோட நான் மோத விரும்பலை. ஊருக்கே திரும்ப போறேன்’ என்று காதலி அனுஷ்காவிடம் சூர்யா சொல்வதும், ‘மனைவி வேண்டுமானா, பிரச்னைகளை கண்டு தன்னோட கணவன் ஒதுங்கி போனா நல்லதுன்னு நினைக்கலாம், காதலி அதை விரும்ப மாட்டா’ என்று அவர் தரும் நம்பிக்கையில், காதை பிளக்கிறது கைதட்டல்.
‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற பாடல் பின்னணியில் விவேக் அடிக்கும் லூட்டிகள் கலக்கல் காமெடி. சூர்யா பாணியில் பஞ்சாயத்து செய்து பிரச்னைகளை தீர்ப்பதாக சொல்லி, இன்னொருவர் மனைவியை மற்றொருவருடன் ஓட விடுவது, ஸ்டேஷனில் காமெடியனை விசாரிக்கும்போது, விழும் உதையில், நடுரோட்டில் மின்கம்பத்தில் மோதி ‘பல்ப்’ ஐ உடைப்பது என விலா நோக சிரிக்க வைக்கிறார் விவேக்.
விரைப்பான தொழிலதிபராக வரும் நாசர், சூர்யாவின் அப்பாவாக வரும் ராதாரவி, ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்று அப்பாவியாக வரும் பாண்டு, பிரகாஷ் ராஜின் அடியாளாக வரும் ஆதித்யா, கிரேன் மனோகர், தியாகு என ஒவ்வொருவரும் கேரக்டரோடு பொருந்துகிறார்கள்.
பிரியனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் கண்ணாடியாக பளபளக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலமாகியிருக்கிறது. பரபரக்கும் திரைக்கதை, மின்னல் வேக ஆக்ஷன் காட்சிகள் என, பக்காவான படத்தை தந்திருக்கும் இயக்குனர் ஹரியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
-நன்றி தினகரன்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment