Thursday, July 15

திட்டக்குடி விமர்சனம்


தினமலர் விமர்சனம்

கொத்தனார் - சித்தாள் என்றாலும் அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்குள்ளும் உணர்ச்சிகளும், போராட்டங்களும் உண்டென்பதை அழகான ஒரு காதலுடனும், அசிங்கமான பல காமகளியாட்டங்களுடனும் சொல்லியிருக்கும் படம்தான் திட்டக்குடி.

கதைப்படி படிக்க பிடிக்காமல் பிஞ்சிலேயே பழுத்தவர் கொத்தனார் ‌‌வேலு எனும் ஹீரோ ரவி. பெண்கள் எல்லோரையும் பணத்திற்கு சுகம் தரும் வேசிகளாக கருதும் வேலுவை காதலிக்கிறாள் அவருக்கு தொழில் கற்றுக் கொடுத்த மேஸ்திரியின் மகளும், சித்தாளுமான கலைச்செல்வி எனும் கதாநாயகி அஸ்வதா. கலைச்செல்வியோ... கொத்தனார் வேலுவை உயிருக்கு உயிராக காதலிக்க..., வேலுவோ... மேஸ்திரியின் மகள் என்றும் பாராமல் சித்தாள் கலைச்செல்வியின் உடலை மட்டும் நேசிக்கிறார். சித்தாளின் காதல் வென்றதா? கொத்தனாரின் காமம் சித்தாளை தின்றதா? என்பதையும், அதனால் இரு குடும்பங்களிலும் ஏற்படும் விபரீதங்களையும் விறுவிறுப்பாக வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது திட்டக்குடி படத்தின் மீதிக்கதை!

புதுமுகம் ரவி, புதுமுகம் என்றே ‌தோன்றாத அளவிற்கு கிராமத்து கொத்தனாராக பக்காவாக நடித்திருக்கிறார். சற்றே பருத்திவீரன் பாணியையும் ‌புகுத்தி ஜெயித்திருக்கிறார். பொம்பளை பொறுக்கி என்றாலும் தாயே தன்னைக் கண்டு விலகிய மாராப்பை இழுத்து விடும் காட்சியில் கூனி குறுகிப் போகும் இடங்களிலும், அண்ணி அபாண்டமாக தன் மீது பழிபோடும் இடங்களிலும் அமைதியாக ஸ்கோர் செய்து அசத்துகிறார் ரவி. பேஷ்! பேஷ்..!

சித்தாள் கலைச்செல்வியாக புதுமுகம் அஸ்வதா. காதலுக்கும், காமத்துக்கும் வேறுபாடு தெரியாமல் தன்னை இழக்கும் காட்சிகளிலும் சரி... அதனால் சொந்தபந்தங்களை இழந்து அனாதையாக நிற்கும் போதும் சரி... அப்படியே கிராமத்து வெகுளிப் பெண்களை நம் கண்முன் நிறுத்துகிறார் சபாஷ்!

இவர்களைப் போன்றே வேலுவின் நண்பராக வரும் குளஞ்சி எனும் சிவா, கதாநாயகியின் அப்பாவும் மேஸ்திரியுமான மூணார் ரமேஷ், வாயாடி அண்ணியாக வரும் செந்தில்குமாரி, வில்லன் பசங்க செந்தில்குமார் என திட்டக்குடி படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் டைரக்டர் திட்டமிட்டதை நடித்து இப்படத்தை படமல்ல... வாழ்க்கை பாடம் என நம்ப வைக்கின்றனர்.

கருப்பையாவின் யதார்த்தமான அதே நேரம் மிக நேர்த்தியான அழகான ஒளிப்பதிவும், செல்வநம்பியின் பிரமாதமான பாடல்கள் இசையும், பரவாயில்லாத பின்னணி இசையும் திட்டக்குடி படத்திற்கு பலம் சேர்க்கின்றன. அதேநேரம், கட்டிட தொழிலாளர்களின் வாழ்வை யதார்த்தமாக சொல்கிறேன் பேர்வழி என அவர்களது காமத்தையும், குரோதத்தையும் படம் பிடித்து காட்டி பயமுறுத்துவதை அறிமுக இயக்குனர் சுந்தரன் சற்றே தவிர்த்திருந்தால் இப்படம் மேலும் அழகாக இருந்திருக்கும்.

அட... அதுகூட வேண்டாம். அடிக்கடி பெண்களும் படுக்கையுமாக, கிளாசும் குடியுமாக, சாப்பாடும் தட்டுமாக படம் முழுக்க பத்துக்கும் மேற்பட்ட உடலுறவு காட்சிகள், இருபதுக்கும் மேற்பட்ட மது மற்றும் சாராயக்கடை சீன்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட சாப்பாட்டு சம்பவங்கள் என இருப்பதையாவது தவிர்த்திருக்கலாம்.

கடின உழைப்பாளிகளான கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை முறை அதிர்ச்சிகரமானது, அபாயகரமானது என்பதை சொல்ல வந்து... ஆபாசமானது என்பதை மட்டும் பதிவு செய்திருப்பது வருத்தம்!

ஆனாலும், காமத்தால் கெட்டகுடிகளை படம் பிடித்து காட்டியிருப்பதால் திட்டக்குடி நற்குடியே!

No comments :

Post a Comment