Tuesday, September 14

காதல் சொல்ல வந்தேன் விமர்சனம்


வழக்கமான கல்லூரி காதல் கதைதான். ஆனால் அதை சற்றே வித்தியாசப்படுத்தி சீனியர் மாணவி மீது ஜூனியர் மாணவருக்கு ஏற்படும் காதலாக முடிவில் நிறைவேறாத சோகக்காதலாக சூடாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன். திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, தேவதையை கண்டேன் படங்களின் இயக்குநர் இயக்கியுள்ள ஒரே காதல் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கதைப்படி பள்ளியில் ஒன்றாக படித்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பிரபு எனும் பாலாஜியும், சபேஷ் கார்த்திக்கும். ஜாலி பேர்வழிகளான இவர்களை சீனியர் மாணவிகள் சிலர் ராக்கிங் செய்ய அதில் ஒருத்தியான சந்தியா எனும் மேக்னா சுந்தரையே காதலிக்கத் தொடங்குகிறார் பிரபு. ஒல்லி பிரபு குண்டு சபேஷ் கார்த்திக் இவர்களது சுட்டித்தனத்தால் கவரப்பட்ட சந்தியாவோ இவர்களை தம்பியாக கருதி பாசத்தை பொழிய பிரபு பாலாஜியோ அது தெரியாமல் சந்தியாவை உயிருக்கு உயிராய் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தியாவிற்கு பாலாஜியின் காதல் தெரியவர கடுப்பில் அவரை விட்டு ஒதுங்கிறார். ஆனாலும் அவரை தொடர்ந்து காதலிக்கும் பாலாஜியின் காதல் நிறைவேறியதா இல்லையா? என்பது யாரும் எதிர்பாராத வகையில் படமாக்கி இருக்கும் நெஞ்சை உருக்கும் கிளைமாக்ஸாகி இருக்கிறது.

பிரபுவாக பாலாஜி, சந்தியாவாக மேக்னா சுந்தர் இருவரும் பாடத்திற்கேற்ற தேர்வு. இண்டெர்வெல்லுக்கு முன் அக்கானு கூப்பிடு.. என மேக்னா சுந்தர் கூறும் இடத்தில் பிரபு, மேக்னா இருவரது நடிப்பும் சபாஷ் சொல்லும் அளவு பிரமாதம். இயற்கை உபாதையின் சப்தத்தை செயற்கை மிஷின் ஒன்றின் மூலம் தன் குண்டு உடம்பின் மூலம் உண்டாக்கும் சபேஷ் கார்த்திக் செம காமெடி. சின்ன சின்ன காட்சிகளில் கூட டைரக்டர் டச் எனப்படும் தன் தனித்தன்மையை நிருபித்து இருக்கிறார் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கும் ஜி.பூபதி பாண்டியன். ஆனால் கிளைமாக்ஸில் காதலர்களை சேரவிடாது உருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாயகரை நாயகியின் கண் எதிரே அவர்கள் தினமும் பயணிக்கும் பேருந்து சக்கரத்திற்கே பலியாக்குவது நம்பும் படியாக இல்லை. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் ஐந்து பாடல்களும், ராஜாவின் ஒளிப்பதிவும், பிரவீன் - ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் படத்தின் பெரும்பலம்.

மொத்தத்தில் தூய்மையான நல்ல காதலை சொல்லவந்துள்ள படம் காதல் சொல்ல வந்தேன்.


குமுதம் விமர்சனம்

காதல், காதல், காதல். காமெடி, காமெடி, காமெடி. இதுதான் படம்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பாலாஜி, மூன்றாம் ஆண்டு மாணவியான மேக்னாவைக் காதலிப்பதுதான் கதை. அந்தக் காதல் கதையை முழுக்க முழுக்க காமெடியில் கலக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பூபதிபாண்டியன்.

பாலாஜியை முதலில் பார்க்கும்போது என்னமோ போல் இருக்கிறது. ஆனால், பார்க்கப் பார்க்கப் பிடித்துப்போகிறது. கதாநாயகி துப்பிய நெல்லிக்காய் விதையைச் செடியாக்கி வளர்ப்பது, கதாநாயகி கொஞ்சிய நாய்க்குட்டியை வளர்ப்பது என்று காதலை வளர்க்க அரும்பாடு படுகிறார். ஆனால், இடைவேளையில் கதாநாயகி, தன்னை அக்கா என்று அழைக்கச் சொல்ல, பாலாஜி அப்படிச் சொல்லிவிட்டு ஓடுகிறார்... தற்கொலை முயற்சியா என்று பார்த்தால் இல்லை, அக்கா என்று சொன்ன வாயை பினாயில் ஊற்றிக் கழுவுவது கலகல.

ஜூனியர் நயன்தாரா என்று ""ஜொள்ளமாய் அழைக்கப்படும் மேக்னாதான் ஹீரோயின். விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தின் வைதேகியின் மகள் இவர். நயன்தாரா மாதிரி நடிக்கவும் வருகிறது. பாலாஜியின் மனதை மாற்ற, அவனை லாட்ஜூக்கு அழைத்துச் சென்று ரூம்போடு என்று சொல்வதும், அவன் தயங்க ஏன் தயங்குகிறாய்? என்று கேட்க, ""ரூம் போட்டா காசுக்கு எங்க போறது? என்று மேக்னாவின் பர்ஸை பிடுங்கிக் கொண்டு போவதும் இன்னொரு கலகல.

எல்லோரையும் தூக்கிச் சாப்பிச் சாப்பிடுகிறான் குண்டுப்பையனாக வரும் சபேஷ் கார்த்திக் சபாஷ் கார்த்திக்... இசையமைப்பாளர் தேவாவின் தம்பிப் பையன். நேச்சுரல் மற்றும் ஆர்ட்டிபிஷியல் ""பாம்போடும் போது மூக்கைப் பிடித்துக் கொண்டு தியேட்டரே அதிர்கிறது.

ரௌடி மாதிரி ஒருத்தர் ஆவேசத்துடன் பேச எழும்போதெல்லாம் நண்பர்கள் அவரை கட்டுப்படுத்துகிறார்கள். கடைசியில் அவர் பேசிவிட, அவருக்குப் பெண்மை நிறைந்த குழந்தைக் குரல். ""ஏய்... நீ சுட்டி டிவியாடா...? என்று கலாய்ப்பது பலே. முன்பாதியில் இருந்த வேகம், எல்லாம் காணாமல் போய் பின்பாதி நொண்டியடிக்கிறது.
யுவனின் இசையில் இரண்டு பாடல்கள் தாளம்.

படம் முழுக்க நகைச்சுவையை வாரி வழங்கி விட்டு, க்ளைமாக்ஸில் மட்டும் சோகத்தை வைக்க இயக்குனருக்கு எப்படி மனது வந்தது? அதை மாற்றி அமைத்திருந்தால் படம் களை கட்டியிருக்கும்.

கொஞ்சம் கலகல. கொஞ்சம் கண்ணீர்..! குமுதம் ரேட்டிங் : ஓ.கே.!

1 comment :

  1. Casino Player Club review - DrMCD
    Find out 서산 출장마사지 everything you need to know about the 전라남도 출장마사지 casino and its 대구광역 출장안마 customer support. 화성 출장마사지 Also check out the player's experience 고양 출장안마 with this free game. Rating: 5 · ‎Review by drmcd

    ReplyDelete