Tuesday, September 14

இனிது இனிது விமர்சனம்


தினமலர் விமர்சனம்

கலக்கலான.. கலர்புல்லான கல்லூரி கலாட்டா காதல் கதைதான். ஆனால் வழக்கமான கதைகளில் இருந்து சற்றே வித்தியாசப்பட்டு விறுவிறுப்போடு வெளிவந்திருப்பதுதான் இனிது இனிது படத்தின் பெரிய ப்ளஸ்.

பணக்கார வீட்டு பசங்க மட்டுமே படிக்கக் கூடிய அல்ட்ரா மார்டன் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் வந்து சேரும் முதலாண்டு மாணவர்கள் சந்திக்கும் ராகிங், லவ், சென்டிமெண்ட், பிரண்ட்ஷிப், இத்யாதி.. இத்யாதி விவகாரங்களையும், கோர்வையாக்கி செம ஜாலி போர்வையாக்கி இருக்கும் இயக்குனர் கே.வி.குகனுக்கு இனி, ஒவ்வொரு கல்லூரி ஆண்டுவிழாவிலும் பாராட்டு விழாவும், சிறப்பு விருந்தினர் அந்தஸ்தும் கிடைக்குமென்பது நிஜம்.

சீனியர் மாணவர்கள் ராகிங் எனும் பெயரில் செய்யும் சேட்டைகள், கலாட்டாக்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் ஒரு ஹீரோ, தன் காதலிக்காக சீனியர் லீடரையே அடிக்கத் துணிவதும், அதனால் அவரும் அவரது கூட்டாளிகளும் பிற்பாடு பெரும்பாடு படுவதும் ஒருபுறம். மற்றொரு நாயகரோ இங்கிலீஷ் ‌லக்ஷரரை ஒன் சைடாக லவ்வுவதும் - அவரை லக்ஷரர் தன் ரூமிற்கு அழைத்துப் போய் தனதக்கு வந்த லவ் லட்டர்களை கொட்டி காண்பித்து புத்தி சொல்வதும், அதன் பின்னும் திருந்தாத அந்த மாணவரால் இளம் வயது இங்கிலீஷ் ‌லக்ஷரர் டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போவதும் செம கலாட்டா. மற்றொரு பக்கம்... சீனியர் மாணவிக்கு லவ்வை ‌தெரியப்படுத்தி விட்டு அந்த காதல் கசிந்துருக, முதல்நிலை மாணவனின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும், அவர் விட்டுக் கொடுத்ததால்தான், தான் விரும்பிய என்ஜினியரிங் சப்ஜெக்ட் கிடைத்தது என்பது தெரியாமலேயே சீனியர் மாணவரின் தங்கையை காதலிக்கும் திமிரில் சுற்றித்திரியும் ஹீரோ காதலியால் படும் ஏமாற்றங்களையும் காட்டி படத்தை வெறும் ராகிங் - லவ் என்றில்லாமல் சென்டிமெண்ட்டாகவும் டச் செய்து படம் முழுக்க பிரண்ட்ஷிப்பின் புனிதத்தை போற்றி இருக்கிறார்கள்.

நான்கு கல்லூரி நண்பர்கள் அவர்களது நான்கு பெண் தோழிகள் கம் காதலிகள்... இதுதான் கதை என்றாலும் அ‌ந்த கதையை காட்டி நோகடிக்காமல் எவ்வளவு அழகாகவும், அற்புதமாகவும் படமாக்க முடியுமோ, அவ்வளவு அழகாகவும், அற்புதமாகவும் படமாக்கி இருக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.குகன்.

இயக்குனரின் எண்ணம் புரிந்து அதித் - ரேஷ்மி, நாராயண் - சோனியா, விமல் - பெனாஸ், ஷரண் - ஷியாஉமர் ஆகிய நான்கு ஜோடிகளும் கல்லூரி மாணவர்கள் கம் காதலர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். இவர்களைப் போன்றே சீனியர் மாணவர்களாக வருபவர்களும் செம கலாட்டா ரகம். காதலிக்காக சீனியர் மாணவரை அடிக்கும் சித்தார்த், எதற்கெடுத்தாலும் எம்.எல்.ஏ. மகன் தெரியுமா நான்... என கலாய்க்கும் விமல், சினியம் மாணவி சோனியாவிடம் எனக்கும் சுருட்டை முடி... உனக்கும் சுருட்டை முடி என ஐக்கியமாகி அவருக்காக கூண்டில் தினமும் ஒரு கோழி வளர்க்கும் டைசன், காதலியை நம்பி நட்பை உதறும் ஷங்கர் என ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதத்தில் நம்முள் ஊடுறுவ... மிக்கி ஜே.மேயரின் பிரமாதமான இசையும் ஒரு பின்னணிக் காரணம்.

இனிது இனிது : அரிது அரிது!

No comments :

Post a Comment